Advertisment
Presenting Partner
Desktop GIF

வெற்றி மாறன்: தமிழ் சினிமாவிற்கும் இலக்கியத்திற்கும் இடையே முக்கிய இணைப்பு பாலம்

வெற்றிமாறன் பிறந்தநாளில் அவர் தமிழ் சினிமாவில் திரைப்படங்களின் தழுவல் போக்கை எவ்வாறு தக்க வைத்துக் கொள்கிறார் என்பதைப் பார்ப்போம்.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
happy birthday vetri maaran, vetri maaran film adaptation, list of tamil film adaptation from books, vetri maaran upcoming films, asuran, vekkai, viduthalai, vaadivasal

தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் தமிழ் இலக்கியத்தின் பயன்படுத்தப்படாத ஆற்றலை அரிதாகவே அங்கீகரித்துள்ளனர். தமிழ் சினிமா இலக்கியத்திலிருந்து கதைகளை கடன் வாங்க முடியாத அளவுக்கு சினிமாவின்‘மசாலா’ மிகவும் அதிகம் என்ற வாதமும் தமிழ் இலக்கியத்தில் ‘தீவிரமான’ மற்றும் ‘ஆழமான’ புத்தகங்கள் இல்லை என்ற வாதத்தையும் நிறுத்த முடியவில்லை. தமிழ் இலக்கியம் பல்ப் புனைகதைகளின் மிகப்பெரிய களஞ்சியத்தைக் கொண்டுள்ளது. தமிழ் இலக்கியத்தில் ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ போன்ற ஒவ்வொரு தீவிரமான படைப்புகளும், சுஜாதாவின் ‘ரத்தம் ஒரே நிறம்’ அல்லது ராஜ்குமாரின் ‘காற்றின் நிறம் கருப்பு’ போன்ற விறுவிறுப்பன படைப்புகளும் உள்ளன. இதனால், திரைப்பட இயக்குநர்களிடம் நல்ல கதைகளுக்கு பஞ்சம் இருப்பதாக நட்சத்திரங்கள் புகார் கூறுவது திகைப்பூட்டுகிறது.

Advertisment

இருப்பினும், தமிழில் நாவல்களைத் தழுவிய படங்கள் முற்றிலும் இல்லை. அது ஒரு பழைய நிகழ்வு. ஜெயகாந்தனின் உன்னைப்போல் ஒருவன் (இந்த படம் 1965ல் தேசிய விருது பெற்றது), ரஜினிகாந்தின் பிரியா (1978), கரையெல்லாம் செண்பகப்பூ (1981), கமல்ஹாசனின் விக்ரம் (1986) போன்ற படங்கள் குறிப்பிடத்தக்க உதாரணங்கள் என்றாலும், இவை வெறும் மின்னல் கீற்றுகள்தான். சமகால தமிழ் சினிமாவில் இலக்கிய படைப்புகளைத் தழுவிய திரைப்படம் என்பது தொடர்ச்சியான போக்காக ஏற்படவில்லை. ஆனால், இயக்குநர் வெற்றி மாறன் கொஞ்சம் நம்பிக்கை அளிப்பவராகத் தெரிகிறார்.

தேசிய விருது பெற்ற திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் இதுவரை 5 திரைப்படங்களை இயக்கியுள்ளார். அவற்றில் 2 படங்கள் தமிழ் நாவல்களின் தழுவல். அவரது வரவிருக்கும் விடுதலை மற்றும் வாடிவாசல் படங்களும் தமிழ் இலக்கியப் படைப்புகளை அடிப்படையாகக் கொண்டவை. இது வெற்றிமாறனை தமிழ் இலக்கியத்திற்கும் சினிமாவிற்கும் இடையே ஒரு முக்கிய இணைப்பு பாலமாக மாற்றுகிறது. அதுமட்டுமின்றி, தீவிர இலக்கியத்தைப் பயன்படுத்தி கமர்ஷியல் படங்கள் தயாரிக்கும் ஃபார்முலாவிலும் வெற்றி பெற்றுள்ளார்.

இலக்கியமும் வெற்றிமாறனும்

அவருடைய தாயார் மேகலா சித்ரவேல் ஒரு பிரபலமான தமிழ் நாவலாசிரியர் என்பதால் இலக்கியத்திற்கும் வெற்றிமாறனுக்கும் இடையிலான உறவு அவருடைய குழந்தைப் பருவத்திலேயே தொடங்கியிருக்க வேண்டும். இயக்குனர் வெற்றிமாறன் சென்னை லயோலா கல்லூரியில் ஆங்கில இலக்கியம் படித்தவர். அவர் தனது வழிகாட்டியான, புகழ்பெற்ற திரைப்பட இயக்குனர் பாலுமகேந்திராவுடன் பணியாற்ற விரும்பியபோது, ​​​​அவரது இலக்கிய அறிவே அவருக்கு வாய்ப்பைப் பெற உதவியது. ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த பேட்டியில், வெற்றிமாறன், உதவி இயக்குனருக்கான நேர்காணலின் ஒரு பகுதியாக பாலு மகேந்திரா ஒரு நாவலுக்கான சுருக்கத்தைக் கொண்டு வரச் சொன்னதாகப் பகிர்ந்து கொண்டார். அவரது மூன்றாவது படமான விசாரணை (தேசிய விருது பெற்ற திரைப்படம், 89 வது அகாடமி விருதுகளில் சிறந்த வெளிநாட்டு மொழி திரைப்படத்திற்கான அதிகாரப்பூர்வ இந்திய நுழைவு) அவரது பயணத்தின் முதல் தழுவலாக மாறியிருந்தாலும், எழுதப்பட்ட வார்த்தைகளில் அவரது முயற்சி ஒரு முக்கியமான ஒருங்கிணைப்பு பகுதியாக இருந்ததைக் காணலாம்.

இலக்கியத்தை மைய நீரோட்டமாகக் கொண்ட சினிமா இயக்குதல்

இயக்குனர் வெற்றிமாறனின் அசுரன் படத்துக்கு எதிரான விமர்சனங்களில் ஒன்று, பூமணியின் வெக்கை குறுநாவலின் தழுவலான வெற்றிமாறனின் அசுரன் படம் கதை கமர்சியலாக்கப்பட்டுவிட்டது. மூலக் கதைக்கு உண்மையாக இல்லை என்பதுதான் அது. இருந்தாலும்கூட, இந்த நாவலின் கதையில் செய்த முக்கிய மாற்றம் திரைப்படத்தின் வணிக வெற்றிக்கு பங்களித்தது. பூமணியின் நாவலுக்கு வெற்றிமாறன் ஒரு ‘பாஷா’ படத்தைப் போன்ற திருப்பம் கொடுத்தார். அவருடைய திருப்பம் அந்த நாவலை தலித்துகளின் கதையாக மாற்றியது.

வெக்கை நாவல் சிவசாமி மற்றும் அவருடைய 15 வயது மகன் சிதம்பரம் பற்றியது. சிதம்பரம் தனது மூத்த சகோதரனைக் கொன்றதற்குப் பழிவாங்க உயர் சாதிக்காரரான வடக்கூரானைக் கொன்ற பிறகு காவல்துறையிலிருந்து தப்பி ஓடுகிறார்கள். அப்பாவும் மகனும் சுமார் 8 நாட்கள் காட்டில் மறைந்திருக்க, அடக்குமுறை மற்றும் சாதி அரசியலின் கதை விரிகிறது. இந்த நாவல் ஹீரோயிசம் இல்லாதது, அன்றாட மக்களையும் அவர்களின் வேதனையையும் வலியையும் பேசுகிறது. புத்தகத்தில் சிதம்பரம்தான் ‘கதாநாயகன்’ என்ற நிலையில், சிவசாமியை படத்தின் ‘ஹீரோ’ ஆக்கி தனது படத்தில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தினார் வெற்றி மாறன். மேலும், தனுஷின் சிவசாமி பூமணியின் புத்தகத்தில் நாம் காணும் நபரிலிருந்து முற்றிலும் மாறுபட்ட நபர். அதோடு, சிவசாமியை கலகக்கார இளைஞனாகச் சித்தரிக்கும் பின்கதையும் நாவலில் இல்லை. இது தனுஷின் சிவசாமியை மெயின்ஸ்ட்ரீம் சினிமாவின் பரிச்சயமான பாத்திரமாக ஆக்கியது - அவர் வன்முறை கடந்த ஒரு மனிதன். இந்த இன்றியமையாத மாற்றம் திரைப்படத்தை அனைத்து தரப்பு பார்வையாளர்களையும் அணுக வைத்தது.

இருப்பினும், வெற்றிமாறனை விமர்சிப்பவர்களும் இது தவறில்லை. வெற்றிமாறனின் புத்திசாலித்தனமான சினிமா மொழியின் உதவியுடன் படத்தின் உண்மையான ரீமேக் ஒரு சிறந்த சினிமாவை வழங்கியிருக்கும். ஆனால், படத்தின் வணிக அம்சத்திற்கு வரும்போது அது ஒரு சிக்கலாக இருந்திருக்கும். வெற்றிமாறனின் முயற்சியை சரியான திசையில் ஒரு சிறிய படியாக மட்டுமே பார்க்க வேண்டும்.

வாடிவாசலின் முன் உள்ள சவால்கள்

எழுத்தாளர் சி.சு.செல்லப்பாவின் ‘வாடிவாசல்’ நாவலை அவர் என்ன செய்கிறார் என்பதைப் பார்க்க பலரும் ஆவலுடன் காத்திருக்கிறார்கள். ஒரு ஜல்லிக்கட்டு நிகழ்வில் ஒரே நாளில் நடக்கும் நிகழ்வுகளின் கதை என்பதால், நாவலின் கதையில் ஒரு வழக்கமான தமிழ் திரைப்படத்திற்கு போதுமான பரப்பு இல்லை. பிச்சி என்ற பையன் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்காக பக்கத்து கிராமத்திற்கு வருகிறான். பல ஆண்டுகளுக்கு முன்பு பிச்சியின் தந்தையைக் கொன்ற காரி என்ற பயமுறுத்தும் காளையை அடக்க விரும்புகிறான். இந்த நாவலின் கதை அவ்வளவுதான். இருந்தாலும்கூட, அதன் வட்டார வழக்கு மற்றும் ஜல்லிக்கட்டு விளையாட்டில் ஜாதி அரசியலை சித்தரிப்பதற்காக இது ஒரு சிறந்த இலக்கியப் படைப்பாக நிற்கிறது. வெற்றிமாறன் எல்லாவற்றையும் உண்மையாக திரையில் உருவாக்கினால் அது ஒரு சிறந்த சினிமாவாக அமையும்.

இருப்பினும், இயக்குனர் வெற்றிமாறன், பிச்சையின் தந்தைக்காக முழு ஃப்ளாஷ்பேக் பகுதியையும் தேர்வுசெய்தால் ஆச்சரியப்படுவதற்கில்லை. (செய்திகள் இந்த படத்தில் சூர்யா இரட்டை வேடத்தில் நடிக்கிறார் என்று ஏற்கனவே தெரிவித்துள்ளன). இலக்கியப் படைப்புகள் கமர்சியலாக்கப்பட்ட போதிலும், இத்தகைய தழுவல்கள் இலக்கியத்தின் முக்கியத்துவத்தை தொடர்ந்து நிலைநிறுத்துகின்றன. அதாவது, இந்த படைப்புகள் திரைப்படமாக தழுவப்படாமல் இருந்திருந்தால், இந்த இலக்கிய ரத்தினங்களைப் பற்றி மைய நீரோட்டத்தில் யாரும் அறியாமலே இருந்திருக்கும்.

ஆங்கிலத்தில் - கிருபாகர் புருஷோத்தமன்

தமிழில் - எ. பாலாஜி

"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Tamil Cinema Vetrimaaran Literature
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment