அட்டகத்தி தினேஷ்-ஹரீஷ் கல்யாண் நடிப்பில், அறிமுக இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து இயக்கத்தில் வெளியான திரைப்படம் 'லப்பர் பந்து'. கிரிக்கெட்டை மையமாக வைத்து வெளியான இந்தப் படம், வெறும் விளையாட்டைப் பற்றியதல்ல; கிராமப்புற கிரிக்கெட் போட்டிகளுக்குள் புதைந்திருக்கும் மனித உணர்வு, ஈகோ, காதல், சமூக யதார்த்தங்களையும் பேசுகிறது. படத்தில் தினேஷ், "கெத்து" என்ற கதாபாத்திரத்தில், அதிரடி கிரிக்கெட் வீரராக வலம் வருகிறார்.
40 வயதைக் கடந்தும், மனைவியிடம் (சுவாசிகா) பொய் சொல்லிவிட்டு ரகசியமாக கிரிக்கெட் விளையாடும் ஒரு மனிதராக அவரது பாத்திரம் வடிவமைக்கப்பட்டுள்ளது. அதே சமயம், ஹரீஷ் கல்யாண் "அன்பு" என்ற கதாபாத்திரத்தில், திறமையான பந்துவீச்சாளராகக் களமிறங்குகிறார். சமூக ஏற்றத்தாழ்வுகளால் கிரிக்கெட் களத்தில் ஒதுக்கப்பட்டவராக, நிரந்தர அணி இல்லாத வீரராக அவரது கதாபாத்திரம் சித்தரிக்கப்பட்டது. கிரிக்கெட் போட்டியில், இந்த இருவருக்கும் இடையே கடும் ஈகோ மோதல் வெடிக்கிறது. இதற்கிடையில், ஹரீஷ் கல்யாண், தினேஷின் மகளான சஞ்சனாவை காதலிக்கிறார். இந்த ஈகோ மோதல்கள் அவர்களது காதலுக்கு என்ன ஆனது? கடைசியில், வெற்றி யாருக்கு என்பதுதான் படத்தின் கதை.
தினேஷின் எதார்த்தமான நடிப்பு, பாடலின் வரிகளோடு சேர்ந்து ரசிகர்களைக் கவர்ந்துள்ளது. படத்தில் இடம்பெற்ற "நீ பொட்டு வச்ச தங்கக் குடம், ஊருக்கே நீ மகுடம்" என்ற பாடல் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. இயக்குநர் தமிழரசன் பச்சமுத்து நேர்காணலில், இந்தப் பாடலுக்குப் படத்தில் ஒரு சுவாரஸ்யமான காட்சி அமைக்கப்பட்டதாகக் கூறினார்.
அதாவது, தினேஷ் பேட்டில் கர்ச்சிப்பைக் கட்டிக்கொண்டு நடப்பதாகத்தான் முதலில் காட்சி வடிவமைக்கப்பட்டது. ஆனால், படப்பிடிப்புத் தளத்தில் தினேஷ் தன் பேட்டைச் சுழற்றிவிட்டு நடந்து வந்தார். இது, கதாபாத்திரத்திற்கு ஒரு மாஸான தோற்றத்தைக் கொடுத்தது. திறமையான நடிகர்களிடம் ஒரு கருத்தைச் சொன்னால் போதும், அதற்குத் தேவையானதை அவர்களே அழகாகச் செய்வார்கள் எனத் தினேஷைப் பாராட்டி இயக்குநர் கூறினார்.
Gethu ❤️🔥🔥 #lubberpandhu #tamilcinemafav #dhanushforever #vetrimaran #thalapathyforever #thalapathy69 #lokeshkanagaraj #coolie #thiyagarajankumararaja #selvaraghavan #mysskin
Posted by film.speaks1 on Tuesday, August 5, 2025