தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பெரிய திரையில் சீனியர் நடிகர்களின் படங்கள் வெளியாகாத நிலையில், சின்னத்திரையில்,சீனியர்கள் ஆக்கிரமித்துள்ளனர் என்று சொல்லலாம்.
தீபாவளி பண்டிகை வரும் 24-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. இந்த நாளில் பட்டாசு பலகாரம் என்று இருந்தாலும் படங்கள் பார்ப்பதிலும் மக்கள் அதிக ஆர்வம் காட்சி வருவது தொடர்ந்து வருகிறது. இதனால் ஒவ்வொரு பண்டிகை நாட்களிலும் பெரிய நடிகர்களில் படங்கள் வெளியாவது வழக்கம்.
ஆனால் இந்த ஆண்டு சற்று வித்தியாசமாக தீபாவளி ரேஸில் எந்த சீனியர் நடிகர்களின் படங்களும் இடம் பெறவில்லை. அதே சமயம் முன்னணி நடிகர்களாக கார்த்தி நடிப்பில் சர்தார் மற்றும் சிவகார்த்திகேயன் நடிப்பில் பிரின்ஸ் ஆகிய 2 படங்கள் மட்டுமே திரைக்கு வருகிறது. இந்த இரண்டு படங்களும் தீபாவளிக்கு 3 நாட்கள் முன்னதாக அக்டோபர் 21-ந் தேதி வெளியாக உள்ளது.
பீஸ்ட்
பெரிய திரையில் இல்லை என்றாலும் சின்னத்திரையை சீனியர் நடிகர்களின் படங்கள் ஆக்கிரமித்துள்ளன. அந்த வகையில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான விஜயின் பீஸ்ட் படம் வரும தீபாவளி அன்று சன்.டிவி.யில் ஒளிபரப்பாக உள்ளது. தெறி, பிகில், ஜில்லா ஆகிய படங்களை தொடர்ந்து பீஸ்ட் படம் தீபாவளி தினத்தில் சின்னத்திரைில் ஒளிபரப்பாக உள்ளது.
இயக்குநர் நெல்சன் திலீப் குமார் இயக்கியுள்ள இந்த படத்தில் விஜய் ரா ஏஜெண்டாக நடித்துள்ளார். பூஜா ஹெக்டே நாயகியாகவும், செல்வராகவன் முக்கிய கேரக்டரிலும் நடித்திருந்தனர். கலவையாக விமர்சனங்களை பெற்ற பீஸ்ட் வசூலில் சாதனை படைத்ததாக கூறப்பட்டது.
டான்
சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியாகி பிளாக்பஸ்டர் ஹிட் அடித்த டான் படம் கலைஞர் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. அறிமுக இயக்குநர் சிபி சக்ரவர்த்தி இயக்கியுள்ள இந்த படம் ஒரு கல்லூரி பிரின்ஸ்பாலுக்கும், ஒரு மாணவருக்கும் இடையே நடக்கும் மோதலை அடிப்படையாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டிருந்தது. மேலும் படம் 100 கோடிக்கு மேல் வசூலித்ததாக கூறப்பட்டது.
விக்ரம்
லோகேஷ் கனகராஜ் இயக்கதில் சில ஆண்டு இடைவெளிக்கு பிறகு உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகி வசூலில் சாதனை படைத்த திரைப்படம் விக்ரம். போதை பொருள் மாஃபியாவை அடிப்படையாக கொண்டு திரைக்கதை அமைக்கப்பட்டிருந்த இந்த படத்தில் கமலுடன் பகத் பாசில், விஜய் சேதுபதி, நரேன், உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 400 கோடிக்கு மேல் வசூலித்துள்ள விக்ரம் படம் தீபாவளி தினத்தில் விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது.
கே.ஜி.எஃப். 2
2022-ம் ஆண்டின் மற்றோரு பிளாக்பஸ்டர் திரைப்படம் கே.ஜி.எஃப். 2 ஒரு கன்னட படமாக வெளியாகி இந்திய அளவில் பெரிய வசூல் சாதனை நிகழ்த்திய இந்த படத்தில் யஷ், ஸ்ரீநிதி ஷெட்டி, பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். 1200 கோடிக்கு மேல் வசூலித்துள்ள இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் ஜீ தமிழில் ஒளிபரப்பாக உள்ளது.
மாநாடு
சிம்பு நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த மாநாடு திரைப்படம் ஏற்கனவே விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவிட்ட நிலையில், வரும் தீபாவளி தினத்தில் இந்த படத்தை விஜய் சூப்பரில் ஒளிபரப்ப உள்ளனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil