விவேக் மற்றும் பசும்பொன்னில் மரம் நடும் பூச்சி முருகன்
மறைந்த நகைச்சுவை நடிகர் விவேக்கின் ஆசையை தி.மு.க தலைமை நிலைய செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான பூச்சி முருகன் நிறைவேற்றியுள்ளார்.
Advertisment
சின்ன கலைவாணர் என்று அன்போடு அழைக்கப்படும் நகைச்சுவை நடிகர் விவேக் திரைப்படங்களில் நகைச்சுவையோடு சமூக கருத்துக்களை எடுத்துரைத்தவர். மேலும் திரைப்படங்களில் மட்டுமல்லாது பொதுவெளியிலும் அவற்றை செய்து காட்டியவர். தமிழகம் முழுவதும் 1 கோடி மரக்கன்றுகளை நடுவதை இலக்காகக் கொண்டு மரங்களை நட்டவர் விவேக். 30 லட்சத்திற்கும் அதிகமான மரங்களை நட்ட நிலையில், திடீரென விவேக் உடல் நலக் குறைவால் மரணமடைந்தார். இதனைத் தொடர்ந்து அவர் விட்டுச் சென்ற மரம் நடும் பணியை அவரது குடும்பத்தினரும், நண்பர்களும், அவரின் நலம் விரும்பிகளும் முன்னெடுத்து வருகின்றனர்.
இந்தநிலையில், நடிகர் விவேக்கின் ஆசையை தி.மு.க தலைமை நிலைய செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான பூச்சி முருகன் நிறைவேற்றியுள்ளார். அதாவது, முத்துராமலிங்க தேவர் வாழ்ந்த பசும்பொன்னில் மரம் நட வேண்டும் என்ற விவேக்கின் ஆசையை பூச்சி முருகன் நிறைவேற்றியுள்ளார்.
இதுகுறித்து தி.மு.க தலைமை நிலைய செயலாளரும், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய தலைவருமான பூச்சி முருகன் கூறி இருப்பதாவது:
விவேக்... சாதி மத பாகுபாடுகளை வெறுத்த கலைஞன். கிடைக்கும் வாய்ப்புகளில் எல்லாம் சமூக நீதி பேசியவர். எல்லோருக்கும் பொதுவான மனிதராக வாழ்ந்து மறைந்ததால் தான் அவர் புகழ் இன்னும் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. கொரோனா காலத்தில் செல்போன் மூலம் தான் நெருங்கிய நட்பு ஆனோம். தமிழ்நாட்டை பசுமை சோலையாக மாற்ற வேண்டும் என்பது அவர் லட்சியம். நடிப்பு போக கிடைக்கும் நேரம் எல்லாம் மரக்கன்று நடுதலிலேயே கவனம் செலுத்தினார்.
அவர் நட்ட 30 லட்சம் மரக்கன்றுகள் என்பது அசாத்திய சாதனை. ஆனால் அவருக்கு ஒரு ஆசை இருந்தது. 'பூச்சி சார்... தேவர் ஐயா வாழ்ந்த பசும்பொன்ல போய் அவருக்கு மரியாதை செலுத்திட்டு அங்கே மரக்கன்று நடணும்...'. கொரோனாவுக்கு பின் நிச்சயம் செல்லலாம் என்று சொல்லி இருந்தேன். அவரது ஆசை நிறைவேறும் முன்பே காலம் முந்திக் கொண்டது. ஆனால் அவரது வார்த்தைகள் காதுகளில் ஒலித்துக்கொண்டே இருந்தது. நேற்று திடீர் என்று ஓர் எண்ணம்... இன்று காலை பசும்பொன்னில் அவரது ஆசையை நிறைவேற்றி விட்டேன். அருகில் விவேக் நின்றுகொண்டிருப்பதை போன்றே இருந்தது. அவர் மறையவில்லை. நாம் நடும் ஒவ்வொரு மரக்கன்றிலும் வாழ்வார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil