Advertisment

விதிமுறைகளை வேண்டுமென்றே மீறுகிறாரா விஜய்? குற்றமும் நடந்ததும்

எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்த போது விதிகள் காற்றில் பறக்கவிட்டனர். பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரங்கள் தரப்பட்டன.

author-image
WebDesk
புதுப்பிக்கப்பட்டது
New Update
vijay-62-photoshoot

பாபு

Advertisment

திரையுலகம் களேபரமாக காட்சியளிக்கிறது. நேற்றுவரை இருந்த அமைதி, ஒற்றுமை ஒரேநாளில் காலாவதியாகியிருக்கிறது. முழுமையான வேலைநிறுத்தத்தில் திரையுலகம் இருக்கையில் விஜய் படத்தின் படப்பிடிப்புக்கு அனுமதி அளித்ததே அனைத்திற்கும் காரணம்.

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்ச் 1 முதல் புதுப்படங்கள் வெளியாவதை தயாரிப்பாளர்கள் சங்கம் நிறுத்தியது. மார்ச் 16 முதல் அனைத்து படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டன. சினிமா நிகழ்ச்சிகள் தடை செய்யப்பட்டன. சினிமா போஸ்டர் ஒட்டவும் தடைவிதிக்கப்பட்டது. வெளிநாடுகளில் நடந்து கொண்டிருந்த படப்பிடிப்புகளுக்கு மட்டும் மார்ச் 23வரை படப்பிடிப்பு நடத்திக் கொள்ள சலுகை அளிக்கப்பட்டது.

விஷால் தலைமையிலான புதிய நிர்வாகிகள் பொறுப்பேற்றுக் கொண்டபின், விஷால் எடுக்கும் அனைத்து முடிவுகளுக்கும் எதிர்தரப்பினர் முட்டுக்கட்டை போட்டுவந்தனர். அதிசயமாக இந்த வேலைநிறுத்தத்துக்கு அவர்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. முழு ஒத்துழைப்பு அளித்து வருகின்றனர். வேலைநிறுத்தத்தின் முதல் வெற்றி இந்த ஒற்றுமையாகவே பார்க்கப்படுகிறது. இவை அனைத்தையும் தயாரிப்பாளர்கள் சங்கமே கெடுத்துக் கொண்டது.

எப்படி?

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்து வருகிறார். விஜய்யின் 62 வது படம் இது. இந்தப் படத்தின் படப்பிடிப்பு சென்னையில் உள்ள விக்டோரியா மஹாலில் நடந்தது. இதேபோல் சமுத்திரகனியின் நாடோடிகள் 2 படத்தின் படப்பிடிப்பும், பெயரிடாத ஒரு படத்தின் படப்பிடிப்பும் நடத்த தயாரிப்பாளர்கள் சங்கம் அனுமதி அளித்தது. இது திரையுலகை கொந்தளிக்க வைத்துள்ளது.

ஒன்றிரண்டு நாள் படப்பிடிப்பை நடத்தினால் மொத்த படமும் முடிந்துவிடும், போட்ட அரங்கு பாழாகிவிடும் என்று தயாரிப்பாளர்கள் சங்கத்துக்கு கடிதம் அனுப்பியவர்களுக்கு மட்டும் அவர்களின் நெருக்கடியை உணர்ந்து சலுகை அளிக்கப்பட்டதாக தயாரிப்பாளர்கள் சங்கம் விளக்கமளித்தது. ஆனால், திரையுலகம் அதனை ஏற்கவில்லை. முக்கியமாக விஜய் படத்தின் படப்பிடிப்பு அனுமதிக்கப்பட்டதை.

விமான நிலையத்தில் படப்பிடிப்பு நடத்த முன் அனுமதி வாங்கியிருக்கிறார்கள். அனுமதி வாங்கிய நாளில் படப்பிடிப்பு நடத்தவில்லையென்றால் பல லட்சங்கள் நஷ்டமாகும் என்றதால் பெயரிடப்படாத ஒரு படத்தின் படப்பிடிப்பை அனுமதித்திருக்கிறார்கள். இது பிரச்சனையாகவில்லை.

சமுத்திரகனியின் நாடோடிகள் 2 படம், இரண்டு நாள் படப்பிடிப்பை முடித்தால் நிறைவடைந்துவிடும் என்று அனுமதி கேட்டிருக்கிறார். சின்ன பட்ஜெட் படம், இரண்டு நாளில் மொத்த படமும் முடிந்துவிடும் என்பதால் இதுவும் பிரச்சனையாகவில்லை.

விஜய் படத்தின் ஸ்டண்ட் மாஸ்டரை இப்போதுவிட்டால் இன்னும் இரண்டு மாதத்துக்கு கிடைக்க மாட்டார் என்று கடிதம் அனுப்பி அனுமதி கேட்டிருக்கிறார்கள். அதற்கு அனுமதி அளித்ததுதான் பிரச்சனையாகியுள்ளது.

விஜய் படம் முடிய இன்னும் 3 மாதங்கள் படப்பிடிப்பு நடத்தியாக வேண்டும். அதில் ஒருநாளில் ஸ்டண்ட் மாஸ்டரை வைத்து தேவைப்பட்ட காட்சியை எளிதாக எடுத்திருக்க முடியும். மற்ற தயாரிப்பாளர்களுடன் ஒப்பிடுகையில் சன் பிக்சர்ஸுக்கு இது இழப்பே கிடையாது. சின்னப்பட தயாரிப்பாளர்கள் நாய்க்கடியை பொறுத்துக்கொண்டிருக்கையில் பெரிய பட்ஜெட் தயாரிப்பாளரின் கொசுக்கடிக்கு அனுமதியா என்பதுதான் புகைச்சலுக்கு காரணம். சில பிளாஷ்பேக் நிகழ்வுகளும் திரையுலகினரை உசுப்பிவிட்டுள்ளன.

இலங்கைக்கு எதிராக தீர்மானம் கொண்டுவர வேண்டும் என்று தமிழகம் போராடிக் கொண்டிருந்த நேரம் இலங்கை சென்ற நடிகை அசின் அவ்வரசின் பிரதிநிதிபோல் செயல்பட்டதும், பேசியதும் தமிழகத்தில் கடும் கண்டனங்களை எழுப்பியது. அசினை தமிழ்ப் படத்தில் நடிக்க அனுமதிக்கக்கூடாது என்று தமிழ் அமைப்புகள் வலியுறுத்தின. அந்த நேரத்தில் விஜய் தனது காவலன் படத்தில் அசினை நடிக்க வைத்தார். தனது படத்தில் யாரை நடிக்க வைப்பது என்பதை தீர்மானிக்கும் சக்தி விஜய்க்கு உண்டு. அவர் அசின் நடிப்பதை தடுத்திருக்கலாம். ஆனால் செய்யவில்லை என்ற கோபம் சிலருக்கு உள்ளது.

தாணு தயாரிப்பாளர்கள் சங்க தலைவராக இருந்த போது சின்னப்பட்ஜெட் படங்களை பாதுகாக்கும் பொருட்டு பொங்கல், சுதந்திரதினம், தமிழ்ப்புத்தாண்டு, தீபாவளி உள்ளிட்ட பண்டிகை தினங்களில் மட்டுமே பெரிய பட்ஜெட் படங்களை வெளியிட வேண்டும், மற்ற நாள்களில் சின்ன பட்ஜெட் படங்களை மட்டுமே வெளியிட வேண்டும் என்ற புதிய விதிமுறையை கொண்டு வந்தனர். ஆனால் சில வாரங்களிலேயே விஜய் படம் திரைக்குவரவிருந்ததால், பண்டிகை தினங்களில் மட்டும் பெரிய பட்ஜெட் படங்கள் என்ற விதிமுறையை தூக்கிக் கடாசினர்.

இப்போது ஒட்டு மொத்த திரையுலகம் வேலைநிறுத்தத்தில் இருப்பது விஜய்க்கு தெரியும். தெரிந்தும் ஏன் படப்பிடிப்பில் கலந்து கொண்டார் என கேள்வி எழுப்புகின்றனர்.

கலாநிதி மாறனின் சன் பிக்சர்ஸ் மீதும் திரையுலகினருக்கு ஆதங்கம் உள்ளது. சின்ன பட்ஜெட் படங்கள் பாதிக்கப்படாமல் இருக்க, எந்தப் படமாக இருந்தாலும் பத்திரிகைகளில் கால்பக்க விளம்பரத்துக்கு மேல் தரக்கூடாது என்ற விதி உள்ளது. பெரிய பட்ஜெட் படங்களின் விளம்பர வேகத்தில் சின்ன பட்ஜெட் படங்கள் அடித்துச் செல்லாமல் இருக்க இந்த ஏற்பாடு. எந்திரன் படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்த போது இந்த விதியை காற்றில் பறக்கவிட்டனர். பத்திரிகையில் முழுப்பக்க விளம்பரங்கள் தரப்பட்டன. எந்திரன் ஸ்பெஷல் என்று தனிப்புத்தகமே போடப்பட்டது. இதேபோல் முழுப்பக்க விளம்பரம் தந்த வேலைக்காரன் படத்தின் தயாரிப்பாளருக்கு சமீபத்தில் எச்சரிக்கை விடப்பட்டு அபராதமும் விதிக்கப்பட்டது. சன் பிக்சர்ஸ் செல்வாக்கான இடம் என்பதால் கேள்வி கேட்க அன்று தயங்கினர்.

இந்த பிளாஷ்பேக் கசப்புகள் காரணமாக விஜய் படத்துக்கு அனுமதி தந்ததை திரையுலகினர் பிரதானமாக எதிர்க்கிறார்கள். இந்த சலசலப்புகள் வேலைநிறுத்தத்துக்கு இடையூறாகி போராட்டம் திசை திரும்பக் கூடாது என்பதே நடுநிலையாளர்களின் கவலையாக உள்ளது.

Actor Vijay
Advertisment

Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.

Follow us:
Advertisment