Doctor movie collection Sivakarthikeyan cinema life Tamil News : சின்னதிரையிலிருந்து வெள்ளித்திரையில் கலக்கிக்கொண்டிருக்கும் நடச்சத்திரங்களின் வரிசையில் சிவகார்த்திகேயனுக்கு தனி இடம் உண்டு. கலக்கப்போவது யாரு என்றும் காமெடி ரியாலிட்டி ஷோவில் தொடங்கிய இவருடைய திரைப்பயணம், இப்போது யாரும் எட்டா இடத்தில் சிம்மாசனமிட்டிருக்கிறார். இவருடைய வாழ்க்கை பயணம் பலருக்கும் இன்ஸ்பிரேஷன். அந்த வரிசையில், சமீபத்தில் இவர் நடிப்பில் வெளியான டாக்டர் திரைப்படம் உலகம் முழுவதும் 90 கோடிகளை வசூலித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள்.
கலக்கப்போவது யாரு நிகழ்ச்சியில் போட்டியாளராகக் களமிறங்கியவர், பிறகு அது இது எது, ஜோடி நம்பர் ஒன் உள்ளிட்ட நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்கினார். இதனைத் தொடர்ந்து இயக்குநர் பாண்டிராஜின் மெரினா, ஐஸ்வர்யா தனுஷின் 3, கேடி பில்லா கில்லாடி ரங்கா உள்ளிட்ட படங்களில் துணை நடிகராகத் தோன்றினார். இதனைத் தொடர்ந்து, 2013-ல் வெளியான எதிர்நீச்சல் திரைப்படம் இவருக்கு எதிர்பாராத வெற்றியைத் தந்தது.
என்றாலும், அதே ஆண்டு வெளியான 'வருத்தப்படாத வாலிபர் சங்கம்' திரைப்படம் பட்டி தொட்டி எங்கும் பேசும் படமாக மாறி, சிவகார்த்திகேயனை மாபெரும் ஸ்டார் அந்தஸ்தைப் பெற்றுத் தந்தது. அதனைத் தொடர்ந்து ஹன்சிகாவுடன் மான் கராத்தே படமும் மக்களின் ஃபேவரைட் லிஸ்டில் இணைந்தது. அதனோடு காக்கிச் சட்டை உள்ளிட்ட படங்கள் சிவகார்த்திகேயனை 35 கோடிகள் பிசினஸ் செய்யும் நடிகராக உயர்த்தியது.
இதற்கிடையில், கீர்த்தி சுரேஷுடன் இனைந்து நடித்த ரஜினிமுருகன் திரைப்படத்தின் தயாரிப்பு பக்கத்திலிருந்து ஏராளமான பிரச்சனைகளைச் சந்தித்தார் சிவகார்த்தியேன். ஆனால், எல்லாவற்றையும் சரிசெய்து வெளியான இந்தப் படம் எதிர்பார்த்ததைவிட அதிக லாபத்தை ஈட்டிக்கொடுத்தது. இதனைத்தொடர்ந்து தன்னுடைய நண்பரை தயாரிப்பாளராக்கி, ரெமோ படத்தில் நடித்து தமிழக திரையரங்கில் 50 கோடிகளைத் தாண்டிய சிவகார்த்திகேயன் முதல் படம் என்ற பெருமையைப் பெற்றும் கொடுத்தது.
பிறகு, ஃபகத் ஃபாசிலோடு வேலைக்காரன் திரைப்படத்தில் கமிட்டான சிவகார்த்தியேன் மீது அதிக எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால், அந்தப் படம் எதிர்பார்த்த வெற்றியை தரவில்லை. இதனைத் தொடர்ந்து சமந்தாவுடன் இனைந்து சீமராஜா திரைப்படமும் இறங்குமுகமாகவே சிவகார்த்திகேயனுக்கு அமைந்தது. அதற்கடுத்து, மீண்டும் பாண்டிராஜ் இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரித்த நம்ம வீட்டுப்பிள்ளை திரைப்படத்தில் நடித்தார். கிராமங்கள் முதல் சிட்டி வரை அனைவரின் கவனத்தையும் ஈர்த்து மாபெரும் வெற்றிப் படமாக இது அமைந்தது. தமிழகத்தில் 50 கோடிகளை இத்திரைப்படம் கடந்தது.
அதனைத் தொடர்ந்து வந்த சூப்பர் ஹீரோ படமான ஹீரோ, வசூலில் சறுக்கலை சந்தித்தது. இதையடுத்து, டாகடர் திரைப்படத்தின் 'செல்லமா' பாடல் அதிக கவனத்தை ஈர்த்தது. 'கோலமாவு கோகிலா' இயக்குநரான நெல்சன் இயக்கத்தில் வித்தியாச கெட்ட அப்பில் சிவகார்த்திகேயனின் டாக்டர் திரைப்படம், மக்களிடத்தில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. லாக்டவுனை தொடர்ந்து வெளியான டாக்டர் படம் தற்போது பட்டையைக் கிளப்புகிறது. தமிழகத்தில் 60 கோடிகளைத் தாண்டிய இந்தப் படம் உலக அளவில் சுமார் 90 கோடிகளை வசூலித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்கள். சின்னதிரையிலிருந்து வெள்ளித்திரை வசூல் வேட்டைக்காரனாக நம் கண் முன்னே வளர்ந்த சிவகார்த்திகேயன் உண்மையில் சூப்பர் ஹீரோதான்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.