பா.ம.க நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறு திரைப்படத்தை சேரன் இயக்குவதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தை ஜி.கே.எம். தமிழ் குமரன் தயாரிக்க இருக்கிறார். அவருடைய பிறந்தநாளை முன்னிட்டு இன்றைய தினம், திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகி இருக்கிறது.
மருத்துவர் ராமதாஸ், சமூக நீதி மற்றும் வன்னியர் சமூகத்தின் மேம்பாட்டிற்காக போராடியவர். அவரின் அரசியல் பயணம், சமூக சீர்திருத்த நடவடிக்கைகள், மற்றும் கல்வி, வேலைவாய்ப்பில் இடஒதுக்கீடு கேட்டு நடத்திய தொடர் போராட்டங்கள் எனப் பல்வேறு முக்கிய நிகழ்வுகளை இந்தப் படம் சித்தரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஆரம்பகாலத்தில் ராமதாஸ் மருத்துவப் படிப்பை முடித்த பிறகு, ஒரு மருத்துவராகப் பணியாற்றினார். பின்னர், 1980களில் வன்னியர் சங்கம் என்ற அமைப்பைத் தொடங்கி, சமூக நீதிக்காக குரல் கொடுத்தார். 1989 ஆம் ஆண்டு பாட்டாளி மக்கள் கட்சியைத் தொடங்கி, தமிழக அரசியலில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்தார். அவரது தலைமையின் கீழ், பா.ம.க. பல தேர்தல்களில் போட்டியிட்டு, குறிப்பிடத்தக்க வாக்குகளைப் பெற்றுள்ளது. மருத்துவர் ராமதாஸ், இட ஒதுக்கீடு, கல்வி, விவசாயம் போன்ற பல்வேறு சமூகப் பிரச்சினைகள் குறித்து தொடர்ந்து பேசி வருகிறார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/07/25/ramadoss-movie-poster-2025-07-25-13-47-03.jpg)
இந்நிலையில், பாமக நிறுவனர் ராமதாஸ் வாழ்க்கை வரலாறை மையமாக கொண்டு உருவாக்கப்பட இருக்கும் இப்படத்தில், பிக்பாஸ் ஆரியும் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். இதனை தனது எக்ஸ் தள பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார். இந்த தகவல் பாமக தொண்டர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.