ஏ.ஆர்.ரஹ்மான் ஏன் இவ்வளவு மோசமான பாடலை உருவாக்கினார் என்று தெரியவில்லை என சோனு நிகாம் கூறியுள்ள கருத்து இணையத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய சினிமாவின் முன்னணி இசையமைப்பாளராக ஏ.ஆர்.ரஹ்மான், தமிழ் இந்தி மொழிகளில் பல படங்களுக்கு இசையமைத்து வருகிறார். இதனிடையே பாலிவுட் சினிமாவின் பிரபல பின்னணி பாடகர் இசையமைப்பாளர், டப்பிங் கலைஞர் என பன்முக திறமை கொண்ட சோனு நிகாம், இந்தியில் வெளியான புளு படத்தில் இடம் பெற்ற சிக்கி விக்கி என்ற பாடலை பாடியிருந்த நிலையில், தற்போது இந்த பாடல் குறித்து விமர்சனத்தை எழுப்பியுள்ளார்.
கடந்த 2009-ம் ஆண்டு அந்தோனி டிசூசா இயக்கத்தில் பாலிவுட்டில் வெளியான படம் புளு. சஞ்சய் தத், அக்ஷைகுமார், லாரா தத்தா, கத்ரீனா கைப் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்த படத்தில் இடம்பெற்ற சிக்கி விக்கி என்ற பாடல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றிருந்த நிலையில், தனக்கான புதிய ரசிகர்கள் பட்டாளத்தையும் உருவாக்கியது என்று சொல்லலாம்.
ஆனால் இந்த பாடலை பாடியிருந்த பாடகர் சோனு நிகாம், தான் இந்த பாடலை பெரியதாக நினைக்கவில்லை என்றும், இது ஒரு மோசமான பாடல் என்றும் விமர்சித்த நிலையில், இந்த பாடலை பாடிய சர்வதேச பாப்-ஸ்டார் கைலி மினாக் இருப்பதால் பாடலின் தரத்தை உயர்த்தி இருக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
இது குறித்து ரெட் எஃப்எம் இந்தியாவுக்கு அளித்த பேட்டியில், “சிக்கி விக்கி பாடல் எனக்கு பிடிக்கவே பிடிக்காது. ரஹ்மான் ஏன் இவ்வளவு மோசமான பாடலை உருவாக்கினார் என்று தெரியவில்லை.கைலி மினாக்கை வைத்து எப்படி இவ்வளவு மோசமான பாடலை உருவாக்க முடியும். அவர் பாடலுக்காக என்னைப் பற்றி நினைத்ததை நான் நன்றாக உணர்ந்தேன், ஆனால் கைலி மினாக் மூலம், இந்த பாடலின் தரத்தை உயர்த்தியிருக்கலாம்.
ஆனால் சில நேரங்களில், ரஹ்மான் கூட தவறு செய்யலாம். பாடல் இன்னும் சிறப்பாக இருந்திருக்கலாம். இந்தப் பாடலை மேடையில் பாடி அதை சிறப்பாக உருவாக்க நான் நிறைய முயற்சித்தேன். கைலி படத்தில் வந்த பிறகு இந்திய அளவில் பாடல் பரபரப்பானது என்று கூறியுள்ளார். அதே சமயம். ஏஆர் ரஹ்மானுடன் பணியாற்றியது உண்மையான மகிழ்ச்சியாக இருந்தது. இது எனக்கு வித்தியாசமான அனுபவமாக இருந்ததுஎன்று ஏ.என்.ஐ உடனான பேட்டியில் சோனு நிகாம் தனது பாலிவுட் அனுபவத்தை பகிர்ந்துகொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“