நடிகையும் மருத்துவருமான ஷர்மிளாவிடம், சாதி தொடர்பாக கேட்கப்பட்ட கேள்விக்கு அவர் அளித்துள்ள பதில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
மருத்துவம் படித்துள்ள ஷர்மிளா வெள்ளித்திரையிலும், சின்னத்திரையிலும் நடித்துள்ளார். இவர் தமிழ் மற்றும் மலையாள மொழிகளில் பல்வேறு டிவி சீரியல்கள் மற்றும் சில தமிழ் படங்களில் நடித்துள்ளார். விஜய் டிவி மற்றும் சன் டிவிகளில் பெரும்பாலான நாடகங்களில் இவர் நடித்துள்ளார்.
பல சினிமா பிரபலங்கள், அரசியல்வாதிகள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த செல்வாக்கு மிக்க நபர்களுடன், தமிழ் தொலைக்காட்சி மற்றும் சினிமாவில் இணைந்து பணியாற்றியுள்ளார். ஷர்மிளா, முதன்முதலில் ஜெயா டிவியில் ஒரு வினாடி வினா நிகழ்ச்சியை தொகுத்து வழங்குவதன் மூலம் தொலைக்காட்சியில் அறிமுகமானார்.
மருத்துவ துறையை சேர்ந்த ஷர்மிளா, மறைந்த டாக்டர் மாத்ரூபூதத்துடன் இணைந்து விஜய் டிவி-யில் ஒளிபரப்பான புதிரா? புனிதமா? என்ற நிகழ்ச்சியில் பங்கேற்றதன் மூலம் மிகவும் பிரபலமானார்.
சமீபத்தில், சென்னை கேகே நகர் பத்ம சேஷாத்ரி பள்ளி ஆசிரியர் ஒருவர் தன்னிடம் படிக்கும் மாணவிகளிடம் ஆன்லைன் வகுப்பில் ஆபாசமாக நடந்து கொண்டது தமிழகத்தில் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
ஆன்லைன் வகுப்புகளில் ராஜகோபாலன் என்ற ஆசிரியர் மாணவிகளிடம் அநாகரீகமாக பேசுவது, அவர்களது உடலழகை வர்ணிப்பது உள்ளிட்ட பல தரக்குறைவான செயலில் ஈடுபட்டு வந்துள்ளார். ஒரு மாணவி அளித்த புகாரின் பேரில் விசாரணை நடத்திய காவல்துறையினர் அவரை கைது செய்து போக்ஸோ உட்பட 5 பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
இந்த விவகாரம் தொடர்பாக பல்வேறு தரப்பினரும், ஆசிரியரின் கேடுகெட்ட நடத்தையை கண்டித்து, சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக நடிகை ஷர்மிளாவும் ட்விட்டரில் சில கருத்துக்களை பதிவிட்டுள்ளார்.
”ஆசிரியர் ராஜகோபாலனை கைது செய்யுங்கள், அவர் மீது தகுந்த நடவடிக்கை எடுங்கள், PSBB பள்ளி நிர்வாகம் மாணவிகளின் புகார்களுக்கு கண்ணை மூடிக் கொண்டுள்ளது” என்றும் “பள்ளி நிர்வாகத்திற்கு இது பற்றி தெரியும், ஆனால் அவர்கள் ராஜகோபாலனை காட்டி கொடுக்கவில்லை, இந்த விவகாரம் சமூக வலைதளங்களில் வெளிவந்த பின்னர் அவரை நீக்கியுள்ளனர், இதற்கு நீங்கள் வெட்கப்பட வேண்டும், மாணவர்களை காப்பாற்றுவது உங்கள் கடமை” என்றும் டுவிட்டரில் காட்டமாக பதிவிட்டிருந்தார்.
இதற்கு எதிர்வினையாற்றிய சிலர், பிறப்பால் நீங்களும் பிராமணர் தானே. நீங்களே இப்படி பேசலாமா என்று கேள்வி எழுப்பியுள்ளனர். இதற்கு ஷர்மிளா அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்துள்ளார்.
“பலர் என்னை கேட்கும் கேள்வி : நீங்கள் பிறப்பால் பிராமணர் தானே…நீங்களே இப்படி பேசலாமா??! இதற்கான பதில்: பிராமணன்னா பெரிய கொம்பா. பிறப்பால் உயர்ந்தவன் எவனுமே கிடையாது. ஒருவரின் மனிதமும் நற்பண்பும் தான் அவரை உயர்த்தும். மனிதமும், சமூகநீதியுமே எனது அடையாளமாக இருக்க வேண்டுமே தவிர என் ஜாதியல்ல.
இந்த சாதியில் பிறந்தீர்கள் என்பதற்காகவே நீங்கள் சமத்துவம் பேசினாலும் உங்களை புறம் தள்ளுவார்கள். அதற்கு ஒரு உதாரணம் கமல். ஷர்மிளாவுக்கு ஆதரவாக ஒருவர் ட்வீட் செய்துள்ளார்.
இன்னொருவர் நீங்கள் தம்புரானாக இருப்பதற்கு பெருமைபடவில்லையா என கேட்டதற்கு, ”நான் ஏன் பெருமை படனும், பிராமணனாக பிறப்பதை நான் தேர்ந்தெடுக்கவில்லை, அதுவா நடந்தது, இதில் பெருமைகொள்ள ஒன்றும் இல்லை, இது ஒன்றும் சாதனையல்ல”, என்று ஷர்மிளா பதிலளித்துள்ளார்.
மேலும், சாதியால் கிடைக்கும் வெளிச்சம் எனக்கு பெருமையல்ல, எனது வேலை மற்றும் சமூகத்திற்கு நான் ஆற்றிய பங்குகளால் எனக்கு கிடைக்கும் அடையாளமே எனக்கு பெருமை எனவும் பதிவிட்டுள்ளார்.
சாதி ரீதியான கேள்வியை வைத்து தன்னை மடக்க பார்த்தவர்களுக்கு டாக்டர் ஷர்மிளா சரியான பதிலடி கொடுத்ததற்காக நெட்டிசன்கள் பலரும் அவரை பாராட்டி வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil