Draupathi Movie : தமிழ் சினிமாவில் சாதியை உயர்த்திப் பிடித்தும், ஒடுக்கப்பட்ட சாதிகளை மையப்படுத்தியும் பல படங்கள் வெளியாகியுள்ளன. சத்யராஜ் நடித்த ’வேதம் புதிது’, பாக்யராஜின் ‘இது நம்ம ஆளு’ என்றுத் தொடங்கி ரஜினிகாந்த் நடித்த ‘கபாலி, காலா’ வரை ஒடுக்கப்பட்ட சாதிகளின் குரலாக சில படங்கள் ஒலித்திருக்கின்றன.
அதே சமயம், தேவர் மகன், சின்னக் கவுண்டர், நாட்டாமை, கொம்பன், குட்டிபுலி என குறிப்பிட்ட சாதிகளை தூக்கிப் பிடிக்கும் படங்களுக்கும் இங்கு பஞ்சமில்லை. அந்த வகையில் தமிழ் சினிமாவில் இன்னொரு புதிய படம் உருவாகியிருக்கிறது. திரெளபதி என்ற அந்தப் படத்தை ஜி.மோகன் என்பவர் இயக்கியிருக்கிறார். நடிகை ஷாலினியின் சகோதரர் ரிஷி ரிச்சார்டு, ஷீலா, கருணாஸ், நிஷாந்த், சவுந்தர்யா, லீனா, சேஷு, ஆறு பாலா, ஜீவா ரவி, இளங்கோ, கோபிநாத், சுப்ரமணி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். படத்திற்கு இசை ஜூபின். மனோஜ் நாராயணன் ஒளிப்பதிவு செய்ய, தேவராஜ் எடிட்டராக பணிபுரிந்துள்ளார்.
இந்தப் படத்தின் ட்ரைலர் சில தினங்களுக்கு முன்பு இணையத்தில் பேசு பொருளானது. சாதி மறுப்பு திருமணத்துக்கு எதிராக படம் உருவாகியிருப்பதை இந்த ட்ரைலர் விளக்குகிறது. படத்தில் இடம்பெற்றிருக்கும் வசனங்களும் வன்முறையை தூண்டும் விதமாகவும், குறிப்பிட்ட அரசியல் தலைவரை சாடுவதாகவும் அமைந்துள்ளது. ட்ரைலரில் இடம்பெற்றுள்ள சில வசனங்களை இங்கே குறிப்பிடுகிறோம்.
“இந்த மாதிரி கீழ்த்தரமானவங்கள இப்படித்தான் கொடூரமா கொல்லனும்… எத பத்தியும் கவல படாதீங்க… உங்களுக்காக நான் அப்பியர் ஆகுறேன்”
“இந்த கிராமத்துக்குள்ள யார் வரணும், யார் கால் வைக்கணுங்கறத நாங்க தான்டா முடிவு பண்வோம்… அதுக்கப்புறம் இவங்களையும் இவங்க ஆளுங்களையும் எங்க பாத்தாலும் வகுந்து எடுங்கடா… என்ன ஆனாலும் நான் பாத்துக்குறேன்”
இது போன்ற சமத்துவத்தைப் பேணும் (!?) பொன்னான வசனங்கள் ட்ரைலர் முழுக்கவே இடம் பெற்றுள்ளது. சாதி மறுப்பு செய்துக் கொள்கிற காதலர்களை ‘நாடக காதல்’ என புது புரளியையும் கிளப்பி விட்டிருக்கிறார்கள். அதாவது சொத்து, சுகத்தைப் பார்த்து தான் உயர்சாதியினர் மீது காதல் வருகிறது என்ற அரிய வகை அர்த்தத்தையும் இந்த படம் சொல்கிறது. கதைகளம் விழுப்புரம் என்பதால் குறிப்பிட்ட சமூகத்தினர் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ளனர்.
இதற்கிடையே இந்தப் படம் வெளிவர அனுமதிக்க கூடாது என்று காவல் துறை ஆணையரிடம் பெரியார் திராவிட கழகம் சார்பில் மனு ஒன்று கொடுக்கப்பட்டுள்ளது. திரெளபதி படம் வெளியானால் அது வன்முறைக்கு வழி வகுக்கும் என்றும், காதலர்களுக்கும், சாதிமறுப்பு திருமணம் செய்துக் கொண்டவர்களுக்கும் பாதுகாப்பு இல்லாத சூழல் உருவாகும் எனவும் அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.