/indian-express-tamil/media/media_files/2025/07/25/dubbing-rajendran-2025-07-25-15-23-35.jpg)
தே.மு.தி.க நிறுவனரும், நடிகருமான விஜயகாந்த், ஞாபக மறதி நோயால் பாதிக்கப்பட்டிருந்ததாக, அவரது நண்பர் டப்பிங் கலைஞர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் இந்த தகவலை அவர் கூறியுள்ளார்.
தமிழ் சினிமா வரலாற்றில் விஜயகாந்திற்கு என தனி மரியாதை இருக்கிறது. அரசியல் மற்றும் சினிமா என இரண்டிலும் ஆளுமை மிக்க தலைவராக தன்னை நிலை நிறுத்திக் கொண்டவர் விஜயகாந்த். அவருடன் இணைந்து பணியாற்றிய பலரும், தங்களது அனுபவங்களை பல சந்தர்ப்பங்களில் பதிவு செய்துள்ளனர்.
நடிகர் சங்கத்தின் கடனை அடைப்பதற்காக அனைத்து நடிகர்களையும் அழைத்துச் சென்று வெளிநாட்டில் கலை நிகழ்ச்சிகள் நடத்தியது முதல், கருணாநிதி மற்றும் ஜெயலலிதா என இரு பெரும் தலைவர்கள் அரசியல் களத்தில் இருந்த போது கட்சி தொடங்கியது வரை பல அதிரடி முடிவுகளை விஜயகாந்த் எடுத்திருக்கிறார். குறிப்பாக, இவற்றில் வெற்றியும் கண்டிருக்கிறார்.
இந்நிலையில், உடல் நலக்குறைவால் விஜயகாந்த் மறைந்தது பலரையும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரது உடல் நலம் குறித்து பலரும் தங்களுக்கு தெரிந்த தகவலை கூறிய நிலையில், விஜயகாந்தின் நண்பரும், டப்பிங் கலைஞருமான ராஜேந்திரன் சில விஷயங்களை அண்மையில் கூறி உள்ளார்.
அதன்படி, "இயக்குநர் ஆர்.சி. சக்தியின் மறைவின் போது இரங்கல் தெரிவிப்பதற்கு நடிகர் விஜயகாந்த் வந்திருந்தார். அப்போது தான், அவரை நான் கடைசியாக பார்த்தேன். அந்த நேரத்திலேயே அவருக்கு ஞாபக மறதி ஏற்படத் தொடங்கியது. அவர் அருகிலேயே நான் அமர்ந்திருந்தேன். என்னை பார்த்த விஜயகாந்த், யார் நீ? என்று கேட்டார்.
என் பெயரைக் கூறி அறிமுகம் செய்த உடனே அவருக்கு ஞாபகம் வந்தது. பின்னர், என்னுடன் இயல்பாக பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் கழித்து மீண்டும் என்னை பார்த்து யாரென்று கேட்டார். அவரது உடல் நிலை இந்த அளவிற்கு மாறி இருந்தது. இதனை ஏற்றுக் கொள்ளும் சக்தி என்னிடம் இல்லை. சிங்கம் போன்று பார்த்த ஒரு நபரை, இவ்வாறு பார்க்க முடியாமல் அங்கிருந்து சென்று விட்டேன்" என டப்பிங் கலைஞர் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.