Dum Dum Dum Serial Actress Vijaya Lakshmi: இயக்குநர் வெங்கட் பிரபு இயக்கிய “சென்னை-28” திரைப் படத்தில் செல்வி என்ற கதாபாத்திரம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார் நடிகை விஜயலட்சுமி.
பிரபல இயக்குநர் அகத்தியனின் மகளாக இருந்தாலும், அப்பாவின் பெயரைப் பயன்படுத்தாமல், தன் சொந்த முயற்சியின் மூலம் சினிமாவில் வலம் வந்துக் கொண்டிருந்தார். திருமணம், குழந்தை ஆகிய வாழ்க்கையின் முக்கியமான கட்டங்களுக்குப் பிறகு சன் டி.வி-யில் ஒளிபரப்பான ‘நாயகி’ தொடர் மூலம் தமிழகத்தின் அனைத்து குடும்பங்களுக்கும் சென்று சேர்ந்தார். பின்னர் விஜய் டிவி-யில் கடந்தாண்டு ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் வைல்ட் கார்ட் போட்டியாளராகக் கலந்துக் கொண்டார். ஓராண்டு இடைவெளிக்குப் பிறகு கலைஞர் தொலைக்காட்சியில் ‘டும் டும் டும்’ என்ற தொடர் மூலம் மீண்டும் சின்னத்திரைக்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறார்.
தனது ரீ எண்ட்ரி குறித்து சமீபத்தில் சில விஷயங்களைப் பகிர்ந்துக் கொண்டார் விஜய லட்சுமி. அப்போது, “திரைப்படங்களில் நடித்திருந்தாலும் மக்கள் மத்தியில் பரவலாக என்னை அடையாளம் காட்டியது சன் டி.வி-யில் ஒளிபரப்பான ‘நாயகி’ சீரியல் தான். அந்தத் தொடருக்குப் பிறகு பல சீரியல்களுக்காக கதை கேட்டேன்.
ஆனால், ஏதும் திருப்திகரமாக அமையாததால் தான் இந்த ஒரு வருட இடைவெளி. இதற்கிடையில், ‘டும் டும் டும்’ சீரியலில் நடிக்கும் வாய்ப்பு வந்தது. கதை கேட்டதும் ரொம்பவே பிடித்துப் போனது. சரின்னு சொல்லிட்டேன். இது வரை நான் பண்ணாத, முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரம் தான் பிரியா.
டெல்லியில் மிகப்பெரிய செய்தி நிறுவனத்தில் பணியாற்றும் போல்டான பெண். காதல் கல்யாணம் எதுவுமே பிடிக்காத கதாபாத்திரம். எல்லா சீரியல் மாதிரி இது இருக்காது. எப்போதும் அழுதுட்டு, நீளமான டயலாக் எல்லாம் கிடையாது. திரைப்படம் பார்க்கும் உணர்வு ஏற்படும். ஹீரோ, ஹீரோயின் பூனை, எலி மாதிரி சண்டை போட்டுக் கொண்டே இருப்பாங்க. ஒரு வருடமா கேட்ட கதைகளில் இது என்னை ரொம்பவே இம்பிரஸ் செய்தது. காரணம் சமகாலத்தில் இந்த தலைமுறையில் என்ன நடந்திட்டிருக்கோ அதைப் பிரதிபலிப்பது மாதிரி இருந்தது. அதையே நல்ல எண்டர்டைமென்டா கலகலன்னு சொல்றோம்” என்றார்.
தொடர்ந்து எந்த ஒரு வேலைக்கும் திருமணம் தடையாக இருக்கக் கூடாது. வீட்டையும் பணியையும் சரியாக பேலன்ஸ் செய்யத் தெரிந்தால் எல்லாமே எளிதாகி விடும் என எக்ஸ்ட்ராவாக டிப்ஸும் கொடுத்திருக்கிறார் விஜயலட்சுமி.