நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குநர் கெளதம் மேனன் இயக்கியிருக்கும் படம் ‘எனை நோக்கி பாயும் தோட்டா’. இதில் மேகா ஆகாஷ், சசிக்குமார், வேல ராமமூர்த்தி உள்ளிட்டோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
2016-ல் தொடங்கப்பட்ட இப்படம் ‘இந்தா ரிலீஸாகும், அந்தா ரிலீஸாகும்’ என வழிமேல் விழி வைத்துக் காத்திருந்த ரசிகர்கள் ஒரு கட்டத்தில் டயர்டாகி, அதனை மறந்தே விட்டனர். கடந்த வருடம் இதன் கடைசி ஷெட்யூலும் முடிந்த நிலையில், தீபாவளிக்கு வெளியாகும் எனக் சொல்லப்பட்டு, வழக்கம் போல் அதுவும் தள்ளிப் போனது. கெளதம் மேனனுக்கு ஏற்பட்ட பண பிரச்னையே இதற்கு முக்கியக் காரணம் என்கிறார்கள் விபரம் தெரிந்தவர்கள்.
இதற்கிடையே இந்தப் படத்தின் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. அண்மையில் இந்தப் படம் யூ/ஏ சான்றிதழ் பெற்றிருப்பதாகவும், வரும் 26-ம் தேதி வெளியாவதாகவும் அறிவிக்கப்பட்டது. படத்தை பிரபல தயாரிப்பாளரும் வினியோகஸ்தரும் வாங்கியிருக்கிறாராம்.

இந்நிலையில் படத்திற்கான ட்ரைலரை எடிட் செய்யும் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார் இயக்குநர் கெளதம். எடிட் ரூமில் அவர் அமர்ந்திருக்கும் படமும் சமூக வலைதளங்களில் வெளியாகியிருக்கிறது. ஆகையால் இன்னும் சில தினங்களில் எனை நோக்கி பாயும் தோட்டா படத்தின் ட்ரைலர் வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் உள்ளனர் தனுஷ் ரசிகர்கள்!