Enemy Movie tamil Review: தமிழ் சினிமாவில் நல்ல நண்பர்கள் பரம எதிரிகளாக மாறும் எத்தனையோ படம் வந்திருந்தாலும் ‘எனிமி’ ஒரு வித்தியமான கதைக்களத்துடன் களமிறங்கியுள்ளது. ஆக்சன் கிரைம் திரில்லர் பாணியில் மிரட்டியுள்ள இந்தப் படத்தில் தம்பி ராமையாவின் மகனாக விஷாலும், பிரகாஷ் ராஜின் மகனாக ஆர்யாவும் தோன்றுகிறார்கள். இருவரும் சிறுவயது முதலே நல்ல நண்பர்களாக இருக்கின்றனர். இருவரின் வீடும் அருகருகே இருப்பதால் நட்பில் பிணைப்பு அதிகரிக்கிறது.

படத்தில் முன்னாள் சிபிஐ அதிகாரியாக வரும் ஆர்யாவின் தந்தை பிரகாஷ் ராஜ் இருவரையும் சிறந்த அதிராகரிகளாக மாற்ற வலுவான பயிற்சி கொடுக்கிறார். துரதிஷ்டவசமாக பிரகாஷ் ராஜ் திடீரென கொலை செய்யப்படுகிறார். எனவே நண்பர்கள் பிரியும் சூழல் ஏற்படுகிறது.
காலச்சக்கரம் சுழலுகையில் விஷால் (சோழன்) சிங்கப்பூரில் ஒரு சூப்பர் மார்க்கெட் நடத்தி வருகிறார். அந்த பகுதியில் வசிக்கும் தமிழ் சமூக மக்களின் நன்மைக்காகவும் விஷால் உதவுகிறார். இந்த நேரத்தில் தான் மினிஸ்டர் ஒருவரை கொலை செய்யும் முயற்சி நடக்கிறது. அதை விஷால் கச்சிதமாக தடுக்கிறார்.

கொலை முயற்சியில் ஈடுபட்டது ஆர்யா தான் என்று விஷாலுக்கு பிறகு தான் தெரிய வருகிறது. இந்த கொலை முயற்சியில் ஆர்யா ஏன் ஈடுபட்டார்? பிரகாஷ் ராஜ் ஏன் கொலை செய்யப்பட்டார்? எதிரிகளாக மாறிய நண்பர்கள் இறுதியில் இணைந்தார்களாக? என்கிற கேள்விகளுக்கு விடையளித்து மீதிக்கதையை திருப்தியுடன் அளித்திருக்கிறார் இயக்குநர்.

படம் ஆக்சன் கிரைம் திரில்லர் என்பதால் அவற்றுக்கு பஞ்சமில்லாமல் கதை நகர்கிறது. குறிப்பாக கிளைமேக்சில் நடக்கும் ஆக்சன் சீன் ‘வேற லெவல்’ என்கிற அளவிற்கு திறம்பட எடுக்கப்பட்டுள்ளது. நாயகியாக அஷ்மிதாவாக வரும் மிர்ணாளினி ரவி பாத்திரத்திற்கு நியாயம் செய்துள்ளார். மூத்த நடிகர்கள் பிரகாஷ் ராஜ், தம்பி ராமையா தங்களது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ளனர்.

அவன் இவன் படத்திற்கு பிறகு இணைத்துள்ள விஷால் – ஆர்யா காம்போ இம்முறையும் பெரும்பாண்மையான ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. நடிப்பு, ஆக்சன் என அனைத்திலும் இருவரும் போட்டி போட்டு நடித்து அசத்தியுள்ளனர். குறிப்பாக ஆக்ஷன் காட்சிகளில் இருவரும் அடித்து நொறுக்கியுள்ளனர்.
அரிமா நம்பி, நோட்டா, இருமுகன் போன்ற படங்களை இயக்கிய ஆனந்த் சங்கர் அவரது பாணியிலே எமியையும் உருவாக்கியுள்ளார். முன்னணி நடிகர்களுக்கு சம அளவு திரைவெளிச்சம் கொடுத்து திரைக்கதையில் சுவாரஸ்யத்தை ஏற்படுத்தி இருக்கிறார். படத்தின் பலமே அவரின் திரைக்கதைதான் எனும் அளவிற்கு ரசிகர்கள் எனிமியை கொண்டாடுகிறார்கள்.

தமனின் இசை கதையை நகர்த்துவதில் உதவுகிறது. சாம்.சி.எஸ்-ன் பின்னணி இசை கதைக்கு விறுவிறுப்பை கொடுத்து, தியேட்டரில் இருந்து வெளிவந்த பிறகும் மனதில் ஓடுகிறது. ஆர்.டி.ராஜசேகரின் ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது. மொத்தத்தில் இந்த தீபாவளியை எனிமி தீபாவளியாக மாற்றியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“