Etharkkum Thunindhavan Movie Tamil News: தமிழில் உச்ச நட்சத்திரங்களுள் ஒருவராக வலம் வரும் நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ திரைப்படம் உலகம் முழுவதும் உள்ள திரையரங்குகளில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை வெளியானது. இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு நடிகர் சூர்யாவின் திரைப்படம் திரையரங்குகளில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் தியேட்டர் வளாகங்களில் குவிந்தனர்.
மேலும், ரசிகர்கள் வழக்கம் போல் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டம் என அசத்த திரையரங்குகள் விழாக்கோலம் பூண்டன. இதேபோல் இப்படத்திற்கு மற்ற மாநில திரையரங்குகளிலும் மேள தாளத்துடன் நல்ல வரவேற்பு கிடைத்தது. தற்போது படம் வெளியாகி 2 நாட்கள் ஆகியுள்ள நிலையில், படம் பார்த்த ரசிகர்கள் கலவையான விமர்சனங்களை முன்வைத்துள்ளனர்.

இப்படத்தின் வசூலை பொறுத்தவரை, ’எதற்கும் துணிந்தவன்’ படம் வெளியான முதல் நாளில் உலகம் முழுவதும் 15 கோடி ரூபாய் வரை வசூல் செய்ததாக பட வணிக வட்டாரங்கள் கூறுகின்றன. எனினும், இது தொடர்பாக தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ் அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏதும் வெளியிடவில்லை. மேலும், படத்தின் மொத்த பட்ஜெட்டில் பாதிக்கும் மேல் முதல் நாள் வசூலிலேயே கிட்டத்தட்ட கிடைத்துவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Pump-up your energy for the weekend with the most talked about #ETtheme 🔥#ETtheme ▶️ https://t.co/l4kUHdLdm1@Suriya_offl @pandiraj_dir #Sathyaraj @immancomposer @RathnaveluDop @priyankaamohan @VinayRai1809 @sooriofficial @AntonyLRuben #EtharkkumThunindhavan pic.twitter.com/oRDWWaXsoR
— Sun Pictures (@sunpictures) March 11, 2022
இந்நிலையில், நடிகர் சூர்யாவின் ‘எதற்கும் துணிந்தவன்’ முழுப் படத்தையும் பைரசி வலைதள பக்கமான தமிழ் ராக்கர்ஸ் ஆன்லைனில் வெளியிட்டுள்ளது. மேலும், இப்படத்தை பல்வேறு பிரபலமற்ற இணையதளங்களும், டெலிகிராம் செயலியின் பக்கங்களும் வெளியிட்டுள்ளன. இது படத்தின் பாக்ஸ் ஆபிஸ் வசூலை நிச்சயம் பாதிக்க வாய்ப்புள்ளது.
எதற்கும் துணிந்தவன் திரைப்படம் மட்டும் ஆன்லைனில் கசிந்த முதல் தமிழ்ப் படம் அல்ல, முன்னதாக நடிகர் அஜித் நடிப்பில் வெளிவந்த வலிமை, ஹே சினாமிகா, அண்ணாத்தே, டாக்டர், மாநாடு, தாள், மகான், எஃப்ஐஆர், முதல் நீ முடியும் நீ, நாய் சேகர் உள்ளிட்ட படங்களும் இந்த இணையதளங்களில் வெளியாகி இருந்தன.
தவிர நடிகர் சூர்யாவின் கடைசி இரண்டு OTT படங்களான ஜெய் பீம் மற்றும் சூரரைப் போற்றும் அவை வெளியான சில மணிநேரங்களில் பைரசி இணையதள பக்கங்களில் வெளியாகின.

தேசிய விருது பெற்ற இயக்குநரான பாண்டிராஜ் எழுதி இயக்கி இருக்கும் எதற்கும் துணிந்தவன் படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. நடிகர் வினய் ராய், பிரியங்கா அருள் மோகன், சத்யராஜ், ராஜ்கிரண், மதுசூதன் ராவ், ஜெயபிரகாஷ், ஹரீஷ் பெராடி, சரண்யா பொன்வண்ணன் மற்றும் சூரி உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“