நடிகர் வேல ராமமூர்த்தி, ராணுவத்தில் இருந்த போது ஒரு நாளைக்கு 32 சப்பாத்தி சாப்பிட்டுவிட்டு 25 கி.மீ. தூரம் ஓடுவேன், ராணுவத்தில் இருந்து முதல்முறையாக ஊருக்கு வந்தபோது 4 அங்குலம் வளர்ந்திருந்ததாக தெரிவித்துள்ளார்.
நடிகர் வேல ராமமூர்த்தி இன்றைக்கு தமிழ் சினிமாவில் அதிகம் விரும்பப்படும் குணச் சித்திர நடிகராக வலம் வருகிறார். மதயானைக் கூட்டம், சேதுபதி, அண்ணாத்தே உள்ளிட்ட படங்களில் நடித்து கலக்கினார். அவருடைய கரடு முரடான கம்பீர தோற்றம், வில்லன் கேரக்டர் என்றாலும் சரி, குணச்சித்திர கேரக்டர் என்றாலும் சரி கச்சிதமாக பொருந்திப் போய்விடுவார்.
தற்போது வேல ராமமூர்த்தி, எதிர்நீச்சல் சீரியலில் மறைந்த மாரிமுத்து நடித்த ஆதி குணசேகரன் கேரக்டரில் நடித்து வருகிறார். எதிர் நீச்சல் சீரியலில் அந்த கேரக்டரில் வேல ராமமூர்த்தி கச்சிதமாகப் பொருந்தியிருக்கிறார்.
வேல ராமமூர்த்தி நடிகர் மட்டுமல்ல தமிழில் ஒரு அருமையான எழுத்தாளரும் ஆவார். தமிழ் நாட்டில் 1990-களில் முன்னெடுக்கப்பட்ட அறிவொளி இயக்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக இருந்தவர். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்த எழுத்தாளர் வேல ராமமூர்த்தி, குற்றப்பரம்பரை, குருதி ஆட்டம், பட்டத்து யானை உள்ளிட்ட சிறுகதை தொகுப்புகள் மற்றும் நாவல்களை எழுதியுள்ளார். எழுத்தாளராக இருந்து சினிமாவுக்கு நடிக்க வந்து இப்போது ரொம்ப பிஸியாக இருக்கிறார். எதிர் நீச்சல் சீரியலில் நடிக்கத் தொடங்கிய பிறகு, பட்டிதொட்டி எங்கும் பிரபலமாகியிருக்கிறார்.
இந்நிலையில், நடிகர் வேல ராமமூர்த்தி யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில், “நான் ராணுவத்தில் இருந்த போது 25 சாப்பாத்தி, 32 சாப்பாத்தி எல்லாம் சாப்பிட்டிருக்கேன். ஆனால் அவ்வளவையும் சாப்பிட்டுவிட்டு முகாமில் இருக்க முடியாது. தினமும் 25 கி.மீ. ஓடியிருக்கேன். அண்டா அண்டாவா கறியும் இருக்கும். அந்த கறியை செக் செய்து சீல் வைத்துதான் அனுப்புவார்கள். நான் 16 வயதில் ராணுவத்தில் சேர்ந்த போது 5 அடி 4 அங்குலமாக இருந்தேன். 6 மாத பயிற்சிக்கு பிறகு 5 அடி 10 அங்குலமாக வந்தேன். 6 மாதம் கழித்து ஊருக்கு வந்து நான் தெருவுக்குள் நடக்கும் போது என்னடா மாப்ள தெருவே டங்கு டங்குனு இருக்குன்னாங்க.
எங்கள் ஊரில் கடலில் இருந்து ஓலைப்பெட்டியில் பெரிய மீன்கள் வரும். அதில் எங்கள் வீட்டுக்கு என தனியாக கொடுத்து விடுவார்கள். அது போல்தான் கறியும் கொடுத்துவிடுவார்கள். பிராய்லர் கோழியே கிராமங்களில் இருக்காது. இதனால் எனக்கு நகரத்துக்கு வந்தால் எங்கே ஆட்டுக்கறியுடன் ஏதாவது கறியை கலந்துவிடுவார்களோ என பயம். அது போல் நாட்டுக் கோழி போல் ஒரு கோழியை வளர்ப்பார்கள், அதையும் எங்கே நகரத்தில் கொடுத்துவிடுவார்களோ என்ற பயம் இருக்கும். காலையில் எனக்கு இட்லி, ஆட்டுக்கறி, முடிந்தால் உளுந்த வடை சாப்பிட எனக்கு பிடிக்கும். சினிமா ஷூட்டிங்கின் போது எல்லா கறியும் இருக்கும், ஆனால் பிராய்லர் கோழி என்பதால் அதை தொடவே மாட்டேன். சைவத்தில் எனக்கு உருளைக் கிழங்கு பொரியல் மிகவும் பிடிக்கும்” வேல ராமமூர்த்தி ஜாலியாக ஒரு பேட்டி கொடுத்திருக்கிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“