Ethirneechal Serial: சன் டிவியில் ஒளிபரப்பாகி வந்த எதிர் நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரமான ஆதி குணசேகரன் வேடத்தில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து மரணம் அடைந்த பிறகு, அந்த வேடத்தில் அறிமுகமான நடிகர் வேல ராமமூர்த்தி, கதையின் ஆரம்பத்திலேயே ஜெயிலுக்கு அனுப்பப்படுவதால் ஆதி குணசேகரன் திரும்பி வராமல் கதையை நகர்த்த திட்டமா என்று ரசிகர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.
எதிர் நீச்சல் சீரியல் வெற்றி பெறுவதற்கு காரணம், ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் மாரிமுத்துவின் நடிப்புதான் என்றால் அது மிகையல்ல. ரசிகர்களால் ட்ரெண்டிங் ஸ்டார் என புகழப்பட்டார். அவருடைய திடீர் மரணம் ரசிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. “எம்மா ஏய்!” என்ற அவரின் அந்த குரல் இனி கேட்காது என்ற போது ரசிகர்கள் பலரும் சோகத்தை வெளிப்படுத்தினர்.
எதிர் நீச்சல் சீரியலில் முக்கிய கதாபாத்திரமான ஆதி குணசேகரன் வேடத்தில் நடித்து வந்த நடிகர் மாரிமுத்து காலமானதால், அந்த வேடத்தில் யார் நடிக்கப் போகிறார்கள், அப்படி நடித்தாலும் அவரைப் போல நடிக்க முடியுமா, அவருடைய இடத்தை நிரப்ப முடியுமா என்ற கேள்வி எழுந்தது. இதனால், எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரம் இருக்குமா? இருக்காதா என்ற கேள்வியும் எழுந்தது.
இந்த கேள்விகளுக்கு எல்லாம் பதிலளிக்கும் விதமாக, பல வாரங்கள் கழித்து, எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில், எழுத்தாளரும் நடிகருமான வேல ராமமூர்த்தி அறிமுகம் செய்யப்பட்டார். முதல் நாளே தனது அறிமுகக் காட்சியில், போலீஸ் ஆஃபீசரை எட்டி உதைத்து அதிரடியாக அறிமுகமானார். போலீஸ் ஆஃபீசரை அடித்துவிட்டு வீட்டுக்கு செல்லும் ஆதி குணசேகரன், “என்னைத் தேடி போலீஸ் வரும், நான் ஜெயிலுக்கு போகப் போறேன்” என்று பேசிக் கொண்டிருக்கிறார்.
எதிர் நீச்சல் சீரியலில் புது ஆதி குணசேகரன் அதிரடியாக காட்டியுள்ளார்கள். அதுமட்டுமில்லாமல், வீட்டிற்கு வந்ததும் ஈஸ்வரியின் கன்னத்தில் அடித்த குணசேகரன், “இனி என்னுடைய தம்பி ஞானம் மற்றும் கதிர் தான் இந்த வீட்டில் எல்லாத்தையும் பார்த்துக்க போறாங்க. நான் அவங்கள வழிநடத்த போறேன்” என்றும் சொல்லியிருந்தார்.
அதே போல, திங்கள்கிழமை எபிசோடில் போலிஸ் ஆஃபிசர் வந்ததும், குணசேகரன், “நான் ஜெயிலுக்கு போயிட்டு வருகிறேன். இந்த குடும்பத்தை நீதான் இழுத்து பிடிச்சுக்க வேண்டும் என்று” கதிரிடம் மீண்டும் சொல்லிக்கொண்டு கிளம்புகிறார். இதனால், எதிர் நீச்சல் சீரியலின் முக்கிய கதாபாத்திரமான ஆதி குணசேகரன் இல்லாமல் சீரியலின் கதையை நகர்த்த இயக்குனர் திட்டமிட்டுள்ளாரா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
ஏனென்றால், மாரிமுத்து மரணத்துக்குப் பிறகு, ஆதி குணசேகரன் கதாபாத்திரத்தில் யார் நடிக்கப் போகிறார்கள் என்ற கேள்வி எழுந்தபோது, இளவரசு, வேல ராமமூர்த்தி பெயர்கள் பேசப்பட்டது. இந்த கதாபாத்திரத்துக்கு வேல ராமமூர்த்தி பொருத்தமாக இருப்பார் என பலரும் சமூகவலைதளங்களில் கருத்து தெரிவித்தனர். ஆனால், அவர் சினிமாக்களில் பிஸியாக நடித்துக் கொண்டிருப்பதால் கால்ஷீட் பிரச்னை இருப்பதாக செய்திகள் வெளியானது.
ஏனென்றால், இந்த சீரியலில் ஆரம்பத்தில் வேல ராமமூர்த்தி நடிக்கிறாரா என்று கேட்டபோது, “எனக்கு கால்சீட் பிரச்சனை இருக்கிறது” என்று அவர் கூறி இருந்தார்.
இந்த விவாதங்களை எல்லாம் தாண்டிதான், வேல ராமமூர்த்தி எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரனாக நடித்துள்ளார். ஆனால், அவருடைய கால்ஷீட் பிரச்னையை சமாளிக்கவே அவர் கதையில் ஜெயிலுக்கு அனுப்பப்படுவது போல காட்சி அமைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். இதனால், எதிர் நீச்சல் சீரியலில் ஆதி குணசேகரன் இல்லாமல் கதையை நகர்த்த திட்டமிட்டிருக்கிறார்களா என்ற கேள்வியும் ஆதி குணசேகரன் மீண்டும் எப்போது வருவார் என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“