சென்னை, தேனாம்பேட்டை பகுதியில் நடைபாதையில் வசித்து வருபவர் ஆதரவற்ற மாற்றுத்திறனாளி முனுசாமி(70). இவர் சில தினங்களுக்கு முன் அப்பகுதியில் உள்ள இளங்கோ - பிரார்த்தனா சாலை சந்திப்பில், தவழ்ந்தபடி சாலையை கடக்க முயலும் போது, அவ்வழியே வந்த அடையாளம் தெரியாத டொயோட்டா இன்னோவா கார், மாற்றுத்திறனாளி முனுசாமி மீது மோதி, நிற்காமல் சென்றது.
இது சம்பந்தபட்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகி, காண்போரை பதைபதைக்க வைத்தது.
இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் அளித்த புகார் மற்றும் அருகில் உள்ள சிசிடிவி காட்சி அடிப்படையில், காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து நடத்திய விசாரணையில் அது நடிகர் சிம்புவின் கார் என்பது தெரிய வந்தது.
இதைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளி மீது மோதி விபத்து ஏற்படுத்திய கார் ஓட்டுநர் செல்வம் என்பவர் மீது காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர். ஆனால், நடிகர் சிம்பு மீதும் வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து பால் முகவர்கள் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், ”சாலையை கடக்க அந்த மாற்றுத்திறனாளி தவழ்ந்தபடி வருவதை அவ்வழியே சென்ற நபர்களில் எவர் ஒருவரேனும்’ அவர் பாதுகாப்பாக சாலையை கடக்க உதவி செய்திருந்தாலோ அல்லது நடிகர் சிம்புவின் கார் ஓட்டுநர் சற்று நிதானித்து நின்று அவர் சாலையை கடந்த பின்னர் சென்றிருந்தாலோ முனுசாமி இந்நேரம் உயிரோடு இருந்திருப்பார்.
இது போன்ற மனிததன்மையற்ற, பொறுப்பற்ற மனிதர்களால் பல நேரங்களில் மனிதநேயம் கூட மரித்து தான் போகிறது. சட்டம் என்பது எவ்வளவு தான் கடுமையாக இருந்தாலும் தனியொரு மனிதனாக இவ்வுலகில் மாறாத வரை மாற்றங்கள் என்பது சாத்தியமில்லை.
அதே நேரம் மற்றவர்களுக்கு முன் மாதிரியாக இருக்க வேண்டிய நடிகர் சிம்பு போன்ற திரையுலக பிரபலத்தின் செயல்பாடே இப்படி இருக்கிறது என்றால் அவர்களை பின்பற்றும் ரசிகர்களின் நிலை எந்த அளவிற்கு இருக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது..?
"பீப் பாடல்" எழுதி அதற்கு மிகப்பெரிய அளவில் பிரச்சினை எழுந்தபோது கூட அதற்காக வருந்தாமல் அது போல இன்னும் 150பாடல்கள் இருக்கிறது என கூறியவர், தனது "பட கட்அவுட்டுகளுக்கு அண்டா அண்டாவாக பாலாபிஷேகம்" செய்ய சொன்னவரிடம் இருந்து மனிதநேயத்தை எதிர்பார்ப்பது என்பது மிகப்பெரிய தவறு தான் என்பதை இந்நிகழ்வு உறுதி செய்கிறது.
ஊருக்கு உபதேசம் செய்யும் திரையுலக நட்சத்திரங்கள் இனியேனும் ரசிகர்களுக்கு மட்டுமல்ல அனைவருக்கும் முன் மாதிரியாக இருக்க முயற்சி செய்ய வேண்டும்” என தமிழ்நாடு பால் முகவர்கள் தொழிலாளர்கள் நலச் சங்கம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil “
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.