ரஜினிகாந்த் நடிப்பில் டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் வெளியான வேட்டையன் திரைப்படம் கலவையான விமர்சனங்களை பெற்று வரும் நிலையில், இந்த படத்தில் இருந்து நீக்கப்பட்ட வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளது, இந்த வீடியோவில், பஹத் பாசில், முத்து படத்தில் ரஜினிகாந்த் பேசும் வசனத்தை அவரைப்போலவே பேசி நடித்துள்ளார்.
தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகியுள்ள படம் வேட்டையன். மஞ்சு வாரியார், அமிதாப் பச்சன், ராணா, பஹத் பாசில, ரித்திகா சிங், துஷாரா விஜயன் உள்ளிட்ட பலர் நடித்திருந்த இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்க லைகா நிறுவனம் தயாரித்திருந்தது. ஆயுதபூஜை தினத்தை முன்னிட்டு கடந்த அக்டோபர் 10-ந் தேதி வெளியான இந்த படம், ரஜினிகாந்த் ரசிகர்களை திருப்திப்படுத்தியது.
அதே சமயம் பொதுவாக ரசிகர்கள் முன்னிலையில் கலவையான விமர்சனங்களை பெற்றிருந்த வேட்டையன் திரைப்பத்தில், பஹத் பாசிலின் நடிப்பு பலரின் பாராட்டுக்களை பெற்று வருகிறது. இதுவரை தமிழ் சினிமாவில் அவர் நடித்த கேரக்டர்களுக்கு அப்பாப்பட்டு பேட்ரிக் என்ற இந்த கேரக்டரில் பஹத் பாசில் வித்தியாசமான நடிப்பை கொடுத்திருந்தார். மலையாள சினிமாவில், குறும்புத்தனமாக நடித்திருந்தாலும், தமிழில் அவர் நடித்த விக்ரம், மாமன்னன் ஆகிய படங்கள் பஹத் பாசிலை வேறு கோணத்தில் காட்டியது.
இந்நிலையில், வேட்டையன் படத்தில் நீக்கப்பட்ட காட்சி ஒன்றை லைகா நிறுவனம் தற்போது வெளியிட்டுள்ளது. அதில், இந்த வீடியோ பதிவில், ரித்திகா சிங் அமர்ந்திருக்கும்போது அங்கு வரும் பஹத் சாப்பாடு ஆர்டர் செய்யுமாறு கூறுகிறார். இதை கேட்ட ரித்திகா சிங், இந்த நேரத்தில் உனக்கு எப்படி பசிக்கிறது என்று கேட்க, முத்து படத்தில் ரஜினிகாந்த் பேசும் வசனத்தை அப்படியே பேசி அசத்துகிறார். இந்த காட்சி ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்று வரும் நிலையில், படத்தில் இருந்து ஏன் நீக்கினார்கள் என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
மேலும் இந்த கதாபாத்திரங்களுக்கு இடையேயான சமன்பாட்டை உறுதிப்படுத்தும் இந்த காட்சியை படத்தில் மீண்டும் சேர்ப்பதற்கு சாதகமாக, பாலியல் வன்கொடுமை காட்சிகளை குறைக்கலாம் என்று நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“