/indian-express-tamil/media/media_files/2025/10/06/gemini-2025-10-06-17-20-24.jpg)
பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வருபவர் ரேகா. இவர் பழம்பெரும் நடிகர் காதல் மன்னன் மறைந்த ஜெமினி கணேசன், நடிகை புஷ்பவல்லி தம்பதிகளுக்கு மகளாக பிறந்தார். நடிகை ரேகா பிறந்த மறு வருடமே நடிகர் ஜெமினி கணேசன் தன் மனைவி புஷ்பவல்லியை விட்டு பிரிந்துவிட்டார். வறுமை காரணமாக கடந்த 1958-ஆம் ஆண்டு புஷ்பவல்லி, ரேகாவை குழந்தை நட்சத்திரமாக நடிக்க வைத்தார்.
அதன் பின் ரேகா குழந்தை நட்சத்திரமாக பல படங்களில் நடித்தார். இதையடுத்து, தன்னுடைய 15-வது வயதில் 'ஆபரேஷன் நல்லி' என்ற திரைப்படத்தில் ரேகா கதாநாயகியாக அறிமுகமானார். புகழ்பெற்ற நடிகராக ஜெமினி கணேசன் இருந்த போதும், ரேகாவையும் அவரது குடும்பத்தையும் ஜெமினி கணேசன் ஏற்றுக்கொள்ளாததால், பட வாய்ப்பு இல்லாமல் ரேகா பலவிதமான கஷ்டங்களையும், அவமானங்களையும் சந்தித்துள்ளார்.
தந்தையின் நிராகரிப்பு, சினிமாவில் பட்ட அவமானங்களால் உடைந்து போன ரேகா, ஒரு கட்டத்தில் தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். அந்த நேரத்தில் தாய் புஷ்பவல்லி அவரை காப்பாற்றியுள்ளார். தொடர்ந்து, 'தோஷிகாரி' படத்தில் ரேகா கதாநாயகியாக நடிக்கும் வாய்ப்பு வந்தது. அந்த படத்தில் நடிப்பதற்காக அவர் வாங்கிய முதல் சம்பளம் வெறும் 25 ஆயிரம் ரூபாய் தான்.
இந்த படத்தில் முத்தம் காட்சி ஒன்று இடம்பெற்றுள்ளது. அது குறித்து ரேகாவிற்கு தெரியாத நிலையில் அந்த காட்சி மட்டுமே தொடர்ந்து ஐந்து நிமிடங்கள் படமாக்கப்பட்டுள்ளது. இதனை நினைத்து ரேகா தனிமையில் பலமுறை வேதனைப்பட்டுள்ளார். இதையடுத்து, ’ஸவன் படான்’ (Shawan bhadon) படத்தின் வெற்றியால் ரேகா கவனிக்கப்பட்டுள்ளார். இந்த படத்தின் வெற்றிக்கு பிறகு ஒரே நேரத்தில் 25 படங்களில் ஓய்வே இல்லாமல் நடித்தார்.
ஜிதேந்திராவுடன் ஒரு படத்தில் இணைந்து நடித்த போது இருவருக்கும் இடையே காதல் மலர, இருவரும் பல இடங்களில் ஒன்றாக வலம் வந்தனர். ஒரு கட்டத்தில் இருவரும் திருமணம் செய்து கொள்வார்கள் என்ற செய்திகள் பரவிய நேரத்தில் தான், ஜிதேந்திராவிற்கு ஏற்கனவே விமான பணிப்பெண்ணுடன் உறவு இருந்தது தெரிய வர, ஜிதேந்திராவை பிரிந்தார்.
அதன் பின்பு வினோத் மேத்தா உடன் நடித்த போது இருவருக்கும் இடையே காதல் ஏற்பட்டுள்ளது. ஆனால், இந்த திருமணத்தில் வினோத் மேத்தாவின் அம்மாவிற்கு விருப்பம் இல்லை. இருந்த போதும், வினோத் மேத்தா, அம்மாவிற்கு தெரியாமல் ரேகாவை திருமணம் செய்து கொண்டு வீட்டிற்கு அழைத்து சென்றார். ஆனால், வினோத் மேத்தாவின் அம்மா, ரேகாவை மேலும் அவமானப்படுத்தி அந்த வீட்டை விட்டே அனுப்பி விட்டார்.
அதன் பிறகு, வினோத் மேத்தாவும் ரேகாவை சந்திக்கவே இல்லை. இதனால், மன வேதனையில் இருந்த ரேகா அதில் இருந்து மீண்டு வந்து, நடிப்பின் மீது கவனத்தை செலுத்தினார். இதையடுத்து, அமிதாப் பச்சனை காதலித்த ரேகாவிற்கு அந்த உறவும் பெரும் ஏமாற்றத்தை தந்தது. பின்னர், நடிகை ரேகா தொழிலதிபர் முகேஷ் அகர்வாலை திருமணம் செய்து கொண்டார்.
சந்தோஷமாக வாழ்க்கையை தொடங்கிய ரேகாவிற்கு அந்த சந்தோஷம் கொஞ்சம் நாள் கூட நீடிக்காமல் போகிறது. சில காரணங்களால் முகேஷ் அகர்வால் தற்கொலை செய்து கொள்ள அதற்கு காரணம் ரேகா தான் என பல பத்திரிகைகளில் செய்தி வெளிவந்தன. இதனால் மனமுடைந்து போன நடிகை ரேகா மீண்டும் படங்களில் நடிக்கத் தொடங்கினார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.