பிரபல இயக்குனரும், கதாசிரியரும் குழந்தை நட்சத்திரமாக நடித்தவருமான சூர்யா கிரண் திங்கள்கிழமை (மார்ச் 11) தனது 48 வயதில் சென்னை இல்லத்தில் காலமானார். அவரது மறைவுக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகைச் சேர்ந்த ஏராளமானோர் இரங்கல் தெரிவித்தனர்.
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த சூர்யா கிரண் மஞ்சள் காமாலையால் உயிரிழந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னையில் திருவனந்தபுரத்தைச் சேர்ந்த குடும்பத்தில் பிறந்த சூர்யா கிரண், 'சிநேகிக்கன் ஒரு பெண்' (1978) படத்தில் குழந்தை நட்சத்திரமாகவும், இந்தியாவின் முதல் 3டி திரைப்படமான 'மை டியர் குட்டிச்சாத்தான்' (மலையாளம்) உட்பட சுமார் 200 தமிழ், தெலுங்கு மற்றும் மலையாளத் திரைப்படங்களில் 'மாஸ்டர்' சுரேஷாகவும் நடித்துள்ளார்.
படிக்காதவன், ரங்கா, 'கல்லுக்குள் ஈரம்', 'காதல் மீன்கள்', 'மௌன கீதங்கள்', 'முந்தானை முடிச்சு', 'மங்கம்மா சபாதம்' மற்றும் 'மனிதன்', உள்ளிட்ட தமிழ் படங்களிலும் மற்றும் 'ஸ்வயம் க்ருஷி' மற்றும் 'கைதி எண் 786' உள்ளிட்ட தெலுங்குப் படங்களிலும் சூர்யா கிரண் குழந்தை நட்சத்திரமாக நடித்துள்ளார்.
சூர்யா கிரண் பின்னர் இயக்குனராக மாறினார். சுமந்த் மற்றும் ஜெனிலியா நடிப்பில் 2003 ஆம் ஆண்டு வெளியான அவரது முதல் படமான 'சத்யம்' திரைப்படம் 150 நாட்களுக்கு மேல் திரையரங்குகளில் ஓடியது. 'சத்யம்' படத்தின் மகத்தான வெற்றிக்குப் பிறகு, 'தானா 51', 'பிரம்மாஸ்திரம்', 'ராஜூ பாய்' மற்றும் 'அத்தியாயம் 6,' போன்ற தெலுங்குப் படங்களை இயக்கினார்.
பல்வேறு திரைப்படங்களில் குணச்சித்திரக் கலைஞராக ஜொலித்த சூர்யா கிரண், சில படங்களில் எழுத்தாளராகவும் பங்களித்துள்ளார். சூர்யா கிரண் 2020 இல் பிக் பாஸ் தெலுங்கு சீசன் 4 இல் போட்டியாளராக கலந்துக் கொண்டார். நடிகை கல்யாணியை திருமணம் செய்துக் கொண்ட சூர்யா கிரண், பின்னர் அவரை பிரிந்துவிட்டார். சூர்யா கிரண் பிரபல சீரியல் நடிகை சுஜிதா தனுஷின் சகோதரர் ஆவார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“