பிரபல பின்னணி பாடகி லதா மங்கேஷ்கர் (92) ஞாயிற்றுக்கிழமை காலை காலமானார். கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்த அவர் மும்பையில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில், சிகிச்சை பலனின்றி அவர் காலமானார்.
லதா மங்கேஷ்கரின் உடல்நிலை தேறி விட்டதாகவும், செயற்கை சுவாசக் கருவிகள் உள்ளிட்ட கருவிகள் நீக்கப்பட்டு விட்டதாகவும் இரண்டு நாட்களுக்கு முன் டாக்டர்கள் கூறி இருந்தனர்.
ஆக்சிஜன் மட்டும் அவருக்கு வழங்கப்பட்டு வருவதாகவும், சிகிச்சைக்கு அவரது உடல் நன்கு ஒத்துழைப்பு தருவதாகவும் டாக்டர்கள் தெரிவித்த நிலையில் இன்று லதா மங்கேஷ்கர் காலமாகி இருப்பது அவரது ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
அவரது மறைவுக்கு அரசியல் பிரமுகர்களும் திரையுலகினரும் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.
இந்தியாவின் நைட்டிங்கேல் என்று அன்பாக அழைக்கப்பட்டு வந்த பாடகி லதா மங்கேஷ்கருக்கு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா மற்றும் பத்ம பூஷன், பத்ம விபூஷன் மற்றும் தாதா சாகேப் பால்கே விருதுகளை மத்திய அரசு வழங்கியுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil