திருவிளையாடல் படத்தில் வரும் வசனத்தின்படி சொல்ல வேண்டுமானால் பிரிக்க முடியாதது என்றால் அது பெண்களும், டிவி சீரியல்களும் தான். அப்படி ஏதாவதொரு தொடரில் தங்களுக்கு ஒரு ஜோடி பிடித்துவிட்டால் போதும், அவர்கள் நிஜ வாழ்க்கையிலும் ஒன்று சேர்ந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் விரும்புவது உண்டு. அதிசயமாக அப்படி ஒரு சம்பவமும் நிகழும்.
சமீப காலங்களில் டிவி சீரியல்களில் நடிக்கும் நடிகர், நடிகைகள் திருமணம் செய்வது அதிகரித்து வருகிறது. குறிப்பாக சொல்ல வேண்டுமானால், ஆணும், பெண்ணும் ஒரே தொழிலில் ஈடுபடும் போது ஒருவரை ஒருவர் இன்னும் புரிந்துகொள்வதற்கான வாய்ப்பு அதிகம். அதனால் விட்டுக் கொடுப்பதும், அனுசரித்து செல்வதும் அவர்களுக்கு இயல்பாகவே வந்துவிடும். அதுவும் டிவி சீரியல்கள் பல ஆண்டுகளுக்கு ஓடுவதால், சக நடிகர்களுடன் பழகுவதற்கு அதிக வாய்ப்பு கிடைக்கிறது. அதுவே சில நேரங்களில் காதலாகவும் மாறிவிடுகிறது. அப்படி ரீல் வாழ்க்கையில் ஜோடியாக இருந்து நிஜ வாழ்க்கையிலும் ஜோடியாக மாறிய பிரபலங்களை இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
ரேஷ்மா முரளிதரன் – மதன் பாண்டியன்!
ஜீ தமிழ் தொலைக்காட்சியில் நடன நிகழ்ச்சியின் மூலம் அறிமுகமானவர் ரேஷ்மா. பூவே பூச்சூட வா சீரியலில் சக்தி எனும் கதாபத்திரத்தில் நடித்தார். அதில் அவரின் அக்கா மீனாட்சியின் கணவராக நடித்தவர் தான் மதன். சீரியலில் நடிக்கும்போது இவர்கள் இருவருக்கும் காதல் மலர்ந்தது. அதைத் தொடர்ந்து இருவரும் பல டிவி நிகழ்ச்சிகளிலும் ஜோடியாக வந்தனர். இவர்கள் ஜோடி ரசிகர்களுக்கும் பிடித்திருந்தது. தற்போது அபி டெய்லர் சீரியலில் இருவரும் நாயகன், நாயகியாக நடித்து வருகின்றனர். இதையடுத்து எப்போது திருமணம் என்று ரசிகர்கள் இருவரையும் கேட்டு வந்தனர். இந்நிலையில் இவர்கள் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் முடிந்தது.
பார்வதி ஷபானா- ஆர்யன்!
செம்பருத்தி சீரியலில் பார்வதியாக நடித்து, ரசிகர்களை கவர்ந்தவர் ஷபானா. இந்த சீரியலில் இவருக்கு ஜோடியாக முதலில் நடித்தவர் கார்த்திக்ராஜ். இவர்களின் ஜோடி மக்களின் விருப்பமான ஜோடியாக இருந்தது. இருவரும் காதலித்து வருவதாகவும் சமூக வலைதளங்களில் அவ்வப்போது புரளி கிளம்பியது. ஆனால் இதை இருவரும் ஏற்கவில்லை.
இந்நிலையில் ஷபானாவும், பாக்கியலெட்சுமி சீரியலில் செழியனாக நடிக்கும் ஆர்யனும் காதலிப்பதாக தகவல் பரவியது. ஆனால் இதனை ரசிகர்கள் நம்பவில்லை. வழக்கம்போல் இதுவும் புரளியாக இருக்கும் என நினைக்கும் வேளையில், இருவரும் சமூகவலைதளங்களில் தங்கள் புகைப்படங்களை பகிர்ந்து காதலை வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து இவர்களின் திருமணம் எந்த முன்னறிவிப்பும் இல்லாமல் திடீரென நடந்து முடிந்தது.
ஆல்யா மானசா- சஞ்சீவ்
மானாட மயிலாட நிகழ்ச்சியில் பங்கேற்று, விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா- ராணி தொடரின் மூலம் நடிகையாக அறிமுகமானவர் ஆல்யா. அதில் தன்னுடன் ஜோடியாக நடித்த நடிகர் சஞ்சீவை காதலித்தார். இவர்களின் திருமணத்துக்கு ஆல்யாவின் பெற்றோர் சம்மதிக்காததால் இருவரும் ரகசியமாக திருமணம் செய்து கொண்டனர். இப்போது இவர்களுக்கு அய்லா என்ற அழகான பெண் குழந்தை உள்ளது.
மிர்ச்சி செந்தில் – ஸ்ரீஜா
விஜய் டிவியில் ஒளிபரப்பான சரவணன் – மீனாட்சி தொடரில் சரவணவாகவும், மீனாட்சியாகவும் நடித்தவர்கள் மிர்ச்சி செந்தில் – ஸ்ரீஜா. இவர்களின் ஜோடி மக்களுக்கு மிகவும் பிடித்திருந்தது. இவர்கள் இருவரும் நிஜ வாழ்க்கையிலும் சேர்ந்தால் நன்றாக இருக்கும் என ரசிகர்கள் விரும்பினர். இவர்களின் வாழ்க்கையிலும் அழகான காதல் மலர்ந்து, இருவரும் சில ஆண்டுகளுக்கு முன் திருமணம் செய்து கொண்டனர்.
இதேபோல் சேத்தன் – தேவதர்ஷினி, கணேஷ்- ஆர்த்தி, ரட்சிதா-தினேஷ், பிரித்தீ- சஞ்சீவ் போன்ற பலரும் சின்னத்திரையிலும் ஜோடியாக இருந்து வெள்ளித்திரையிலும் ஜோடியாகியுள்ளனர். சீரியல் ஜோடிகளை பற்றிய கிசுகிசுக்கள் அதிகரித்து வருவதால், இதுபோன்று மேலும் பல ஜோடிகள் திருமணம் செய்வதற்கு அதிக வாய்ப்புள்ளது ரசிகர்கள் இப்போதே கணிக்கத் தொடங்கிவிட்டனர்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil