திரைப்பட இயக்குனரும், வசன கர்த்தாவுமான ஈரோடு செளந்தர் உடநலக் குறைவால் மரணமடைந்தார்.
நாட்டாமை, சேரன் பாண்டியன், பரம்பரை, சமுத்திரம், 'பெரிய கவுண்டர் பொண்ணு', 'இளவரசன்', 'கண்ணுபடப் போகுதய்யா' போன்ற படங்களின் கதை வசனம் எழுதியவர். ஈரோடு அருகே நாதகவுண்டன் பாளையம் கிராமத்தை சேர்ந்த இவரின் இயற்பெயர் சௌந்தர் ராஜன்.
சீதனம், சிம்மராசி போன்ற வெற்றிப் படங்களையும் இயக்கியுள்ளார்.
தமிழ் சினிமாவில் கிராமத்து வாழ்க்கை முறைக்கு உயிரோட்டம் அளித்தவர். சேரன் பாண்டியன், நாட்டாமை, சிம்ம ராசி போன்ற படங்களுக்காக இவருக்கு தமிழக அரசு விருது அளித்து சிறப்பித்தது.
இந்த ஆண்டு ஜனவரி மாதம் இவர் இயக்கிய 'அய்யா உள்ளேன் அய்யா' என்ற திரைப்படம் வெளியானது. இதில் தனது பேரன் கபிலேஷ் என்பவரை அறிமுகப்படுத்தினார்.
பல ஆண்டுகளாக சிறுநீரக பிரச்சினையால் பாதிக்கப்பட்ட அவர், மூச்சுத் திணறல் காரணமாக, நேற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டார். இந்நிலையில், இன்று மதியம் 1:35 மணியளவில் சிகிச்சைப் பலனின்றி காலமானார். இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், கலையரசி மற்றும் காயத்ரி ஆகிய மகள்கள் உள்ளனர்.
மறைந்த ஈரோடு செளந்தர் உடலுக்கு திரைத் துறையை சார்ந்தவர்களும், பொது மக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.