கொலை வழக்கில் கைதான பிரபல எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா நிரபராதி! விடுதலை செய்த போலீஸ்

எழுத்தாளர் பிரான்சிஸ் கிருபா நிரபராதி

கோயம்பேட்டில் மனநலம் பாதிக்கப்பட்டவரை தாக்கி கொலை செய்ததாக பதிவு செய்யப்பட்ட வழக்கில் பிரபல எழுத்தாளரும் பாடல் ஆசிரியருமான பிரான்சிஸ் கிருபா கைது செய்யப்பட்டார்.

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் இரு நபர்களுக்கு இடையே வாய்தகராறு முற்றி கைக்கலப்பாக மாறி, ஒருவர் மற்றொருவரின் கழுத்தை நெரித்து கீழே தள்ளியதாக கூறப்படுகிறது. இதில் கீழே விழுந்த நபர் தலையில் அடிப்பட்டு சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதுகுறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடலை மீட்டனர்.

உயிரிழந்தவர் குறித்து எந்த விவரமும் கிடைக்காத நிலையில், பிணத்துக்கு அருகே அமர்ந்திருந்த நபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர். அதில் அந்த நபர் தனது பெயர் பிரான்சிஸ் கிருபா என்றும் திருநெல்வேலியை சேர்ந்தவர் என்றும் கூறியுள்ளார். தொடர்ந்து போலீசார் அவர் குறித்து நடத்திய விசாரணையில், அவர் பிரபல எழுத்தாளர் என்பது தெரியவந்தது.

பிரான்சிஸ் கிருபாவிடம் போலீஸார் விசாரித்தபோது, தான் கொலை செய்யவில்லை என்றும், உதவி மட்டுமே செய்ததாக தெரிவித்து இருக்கிறார்.

பிரான்சிஸ் கிருபாவின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம். இவருக்குத் திருமணமாகவில்லை. சென்னையிலேயே தங்கியிருந்தார். மல்லிகைக் கிழமைகள், சம்மனசுக்காடு, ஏழுவால் நட்சத்திரம், நிழலன்றி ஏதுமற்றவன், மெசியாவின் காயங்கள், வலியோடு முறியும் மின்னல் ஆகிய கவிதை நூல்களை எழுதியுள்ளார். மேலும், கன்னி என்கிற புதினத்தை எழுதியுள்ளார். 2008-ல் சுந்தரராமசாமி விருதும் 2017-ல் சுஜாதா விருதும் பெற்றுள்ளார்.

இதனிடையே உயிரிழந்த நபரின் பிரேத பரிசோதனை அறிக்கை வெளியாகி உள்ளது. இதன்படி அந்த நபர், வலிப்பு வந்து மாரடைப்பு ஏற்பட்டு இயற்கையாவே உயிரிழந்தது தெரியவந்தது. இதனால், அந்த இறப்புக்கு பிரான்சிஸ் கிருபா காரணமில்லை என்றும் அவர் நிரபாரதி என்றும் கூறி போலீசார் அவரை விடுவித்துள்ளனர்.

Get all the Latest Tamil News and Tamil Nadu News at Indian Express Tamil. You can also catch all the latest Tamil Entertainment News by following us on Twitter and Facebook

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com.
Just Now
X
×Close
×Close