இயக்குனர் மாரிசெல்வராஜ் டைரக்ஷனில் அண்மையில் வெளியான படம் மாமன்னன். இந்தப் படத்தில் கதாநாயகனாக உதயநிதி நடித்திருந்தார்.
உதயநிதி தந்தையாக வடிவேலு மாறுபட்ட நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். படத்தில் வில்லன் கதாபாத்திரத்தில் ஃபகத் ஃபாசில் நடித்திருந்தார். அவரது கதாபாத்திரத்தின் பெயர் ரத்னவேலு ஆகும்.
இந்தக் கதாபாத்திரத்தை தற்போது ரசிகர்கள் கொண்டாடி தீர்த்துவருகின்றனர். மாமன்னன் படம் வெளிவருவதற்கு முன்பு, மேடையில் பேசிய மாரி செல்வராஜ், தேவர் மகன் படத்தின் தாக்கம்தான் இந்தக் கதாபாத்திரம் எனக் கூறியிருந்தார்.
மேலும் அப்படத்தில் இசக்கியாக நடித்த வடிவேலு குறித்தும் பேசியிருந்தார். இந்தப் பேச்சு பெரும் சர்ச்சையாக வெடித்தது. இது தேவையில்லாத பிரச்னை எனவும் கருத்துகள் வெளியாகின.
மறுபுறம் சாதிய அடக்குமுறைக்கு எதிராக மாரிசெல்வராஜின் பேச்சை முற்போக்கு எழுத்தாளர்கள் வரவேற்றனர்.
இந்தப் படம் உதயநிதியின் கடைசி படம் என்றும் கூறப்படுகிறது. இந்த நிலையில் தற்போது ஜாதிப் பெருமை பேசும் பாடல்களுடன் இணைத்து ஃபகத் ஃபாசிலின் ரத்னவேலு கதாபாத்திரத்தை நெட்டிசன்கள் கொண்டாடி வருகின்றனர்.
சிலப் பாடல்களில் குறிப்பிட்ட சமூகத்தின் பெயரையும் கூறி காணொலிகளை பரப்பிவருகின்றனர்.
இந்தப் பாடல்கள் ட்விட்டரில் தற்போது ட்ரெண்ட் ஆகிவருகின்றன. இது தொடர்பாக நெட்டிசன் ஒருவர் எந்தப் பாடல் போட்டாலும் இந்தக் கதாபாத்திரம் பொருந்திவருகிறதே எனக் கூறிவருகிறார்.
மற்றொருவர் போற்றி பாடடி பெண்ணே தேவர் காலடி மண்ணே என்ற பாடலையும் பகிர்ந்துள்ளார். இதற்கிடையில் ஜாதிப் பெருமை பேசும் பாடல்களுக்கு மத்தியில் காதல் பாடல்களிலும் ஃபகத் ஃபாசில் ட்ரெண்ட் ஆகிவருகிறார்.
இதை நகைச்சுவையாக பகிர்ந்துள்ள சில நெடடிசன்கள் உதயநிதி, மாரி செல்வராஜ் படத்தை பகிரந்து, “படத்தின் ஹீரோ உதயநிதியா அல்லது ஃபகத் ஃபாசிலா எனக் கேள்வியெழுப்பி உள்ளனர்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“