Farina Azad Tamil News: கர்நாடகாவின் உடுப்பியில் உள்ள அரசு பி.யூ.கல்லூரியில் முஸ்லிம் மாணவிகள் ஹிஜாப், பர்தா, புர்கா அணிந்து வருவதற்கு இந்துத்துவா அமைப்பினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், அங்கு ஹிஜாப் அணிய தடை விதிக்கப்பட்டது. இதனையடுத்து, 6 முஸ்லிம் மாணவிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் மாநிலம் முழுதும் அதிர்வலையை ஏற்படுத்தவே மங்களூரு, குந்தாப்பூர், ஷிமோகா, பத்ராவதி, சிக்மகளூரு உள்ளிட்ட இடங்களில் உள்ள பி.யூ.கல்லூரியிலும் ஹிஜாப் அணிந்து வந்த மாணவிகள் கல்லூரிக்கு வெளியே நிறுத்தப்பட்டனர். இதனால், அந்த பகுதியில் உள்ள மாணவிகளும் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவிகளின் போராட்டத்தை கண்டித்து ஏபிவிபி மாணவ அமைப்பினர் காவி துண்டு அணிந்து ‘ஜெய் ஸ்ரீராம்’ என முழக்கங்கள் எழுப்ப, அதைக் கண்டித்து பாபா சாகேப் அம்பேத்கர் மாணவர் அமைப்பினர் நீல துண்டு அணிந்து ‘ஜெய் பீம்’ என முழக்கங்களை எழுப்பினர். இதனால் மாநிலம் முழுதும் பரவி இருந்த அதிர்வலை நாடு முழுதும் பரவியது. இதனைத்தொடர்ந்து, கர்நாடகாவில் உள்ள பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டது.

“ஹிஜாப், காவித் துண்டு உள்ளிட்ட மத ரீதியான உடைகள் அணிய தடை விதிக்கப்படுகிறது. மாணவர்கள் சீருடை மட்டுமே அணிந்து வர வேண்டும். மாணவர்களின் கல்வியை பாதிக்கும் வகையில் போராட்டங்கள் நடத்தக் கூடாது.” என ஹிஜாப் விவகாரம் தொடர்பான வழக்கில் நேற்று முன்தினம் கர்நாடக உயர்நீதி மன்றம் உத்தரவு பிறப்பித்தது. மேலும், இவ்வழக்கு தொடர்பாக வருகிற திங்கட்கிழமை விசாரணை நடத்தப்படும்’ என்றும் தெரிவித்தது.

ஹிஜாப் விவகாரத்தில் அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என பல தரப்பினரும் கருத்து தெரிவித்து வரும் நிலையில், பாரதி கண்ணம்மா சீரியலில் வெண்பாவாக நடித்து வரும் நடிகை ஃபரீனா ஆசாத் தனது கருத்தை தெரிவித்துள்ளார்

இந்த விவகாரம் தொடர்பாக ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதில் அளித்துள்ள நடிகை ஃபரீனா ஆசாத், “ஹிஜாப் போட்றதோ பொட்டு வைக்கறதோ ஒருத்தவங்களோட பெர்சனல். கண்டவங்கெல்லாம் உங்கள் வீட்டிற்குள் வந்து உங்கள் மனைவியிடம் வேலை செய்ய கட்டளை போட உங்களால் அனுமதிக்க முடியாது.” என்று கூறியுள்ளார்.

சின்னத்திரையில் தொகுப்பாளினியாக அறிமுகமாகிய நடிகை ஃபரீனா ஆசாத், தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முன்னணி சீரியல்களில் ஒன்றான ‘பாரதி கண்ணம்மா சீரியலில் வில்லி வெண்பாவாக நடித்து வருகிறார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“