கோரிக்கைகளை வலியுறுத்தி திரைப்பட துறையினர் சென்னையில் பேரணி!

பிரச்னைகளை தீர்ப்பதன் மூலம், மக்கள் அனைவரும் சினிமா பார்க்க தியேட்டருக்கு வருவது எளிமையான விஷயமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

கோரிக்கைகளை வலியுறுத்தி திரைப்படத்துறையினர் சென்னையில் பேரணி நடத்த திட்டமிட்டு இருப்பதாக தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தெரிவித்தார்.

மார்ச் 1ம் தேதி முதல் புதிய திரைப்படங்கள் திரையிடுவதில்லை என்ற முடிவை திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முடிவெடுத்துள்ளது. மார்ச் 15ம் தேதி முதல் சினிமா படப்பிடிப்புகளும் நிறுத்தப்பட்டுள்ளது. கடந்த இரண்டு நாட்களாக பேச்சு வார்த்தை நடத்தி வந்தும் எந்த முடிவும் எட்டப்படவில்லை. இந்நிலையில் பிலிம் சேம்பர் அலுவலகத்தில், தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

சினிமா துறையைச் சேராத ஒரு நிறுவனம் கோடிகோடியாய் சம்பாதிக்கிறது. திரைத்துறை இன்று பெரும் நெருக்கடியில் உள்ளது. விவசாயிகளும் திரைத்துறையினரும் ஓரே நிலையில்தான் உள்ளனர். இந்த வேலை நிறுத்தம் எங்கள் கோரிக்கை நிறைவேறும் வரையில் தொடரும். சரியான தீர்வு இன்னும் கிடைக்கவில்லை. நாங்கள் வெளிப்படைத்தன்மையை விரும்புகிறோம். தியேட்டர்கள் அனைவரும் கம்ப்யூட்டரைஸ்ட் டிக்கெட்டிங் கொடுக்க வேண்டும் என விரும்புகிறோம். நாங்கள் எங்கள் பிரச்னையை அரசிடம் எடுத்துச் செல்ல விரும்புகிறோம். எல்லோருக்கும் நல்லது செய்யதான் அரசு உள்ளது. செய்தி துறை அமைச்சர், முதல் அமைச்சர் ஆகியோரை சந்தித்து கோரிக்கை வைக்கப் போகிறோம். 149 சின்ன திரைப்படங்களுக்கு மானியம் கொடுத்த இந்த அரசாங்கம் எங்கள் பிரச்னையை தீர்த்து வைக்கும் என நம்புகிறோம். மக்கள் அனைவரும் தியேட்டருக்கு வருவது எளிமையான விஷயமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம்.

திரைத்துறையைச் சேர்ந்த அனைத்து சங்கத்தினரும் பேரணியாக சென்று மனு கொடுக்க திட்டமிட்டுள்ளோம். வரும் புதன் அல்லது வியாழன் அன்று பேரணி நடத்த திட்டமிட்டுள்ளோம். அமைச்சரையும் முதல்வரையும் சந்திக்க நேரம் கேட்டுள்ளோம். அவர்கள் நேரம் ஒதுக்கித் தருவதை வைத்து பேரணியாக சென்று எங்கள் கோரிக்கை மனுவை கொடுக்க உள்ளோம்.’’

இவ்வாறு விஷால் தெரிவித்தார்.

தொழிலாளர் சம்மேளன தலைவர், இயக்குநர் ஆர்.கே.செல்வமணி பேசும் போது, ‘‘அனைத்து திரைப்பட சங்கங்களும் ஒன்றாக திரண்டு, முதல்வரை சந்தித்து முறையிட உள்ளோம். சினிமா துறையை ஒழுங்கமைக்க வேண்டும் என்பதே எங்கள் எண்ணம். மற்ற துறைகளிடம் அரசு வரி கட்டச் சொல்லுது. நாங்கள் வரி கட்ட தயாராக இருக்கிறோம் என்று சொல்கிறோம். எவ்வளவு கலெக்‌ஷன் நடக்குது என்ற விபரம் இல்லாததால், சரியாக வரி கட்ட முடியவில்லை. தொழில் துறையாக மாற வாய்ப்பு உள்ளது. 200 பேர் படம் பார்க்க வருகிறார்கள் என்றால் அவர்களிடம் 1000 பேருக்கான பணத்தை வசூல் செய்ய நினைக்கிறார்கள். முன்பு மூன்று வகையான கட்டணம் இருந்தது. அதை முறையாக வசூலிக்க வேண்டும். இது இல்லாததால் எங்களுக்கும் இழப்பு, அரசுக்கும் இழப்பு ஏற்படுகிறது. இதை ஒழுங்குப்படுத்தினால், பிரமாதமான தொழிலாக மாறும். இதை அரசு மட்டும்தான் செய்ய முடியும். இதுதான் எங்கள் திட்டம்.’’ என்றார்.

பேரணிக்கு அனைத்து தரப்பினரையும் அழைத்துள்ளோம். ரஜினி, கமல், விஷால் படங்கள் எல்லாம் நின்று போய் உள்ளன. எனவே அவர்களும் கலந்து கொள்ள வேண்டும். நாங்கள் கார் பார்க்கிங், டிக்கெட் விலை குறைப்பு உள்பட அனைத்து கோரிக்கைகளையும் முதலில் இருந்தே வலியுறுத்தி வருகிறோம். ஒவ்வொன்றாக சேர்க்கைவில்லை என்றும் ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

Get Tamil News and latest news update from India and around the world. Stay updated with today's latest Entertainment news in Tamil.

×Close
×Close