சென்னையில் என்ன படம் பார்க்கலாம்? - ஒரு ரவுண்ட் அப்

அஜித்தின் பில்லா மாயஜால், எஸ்ஆர்கே சினிமாஸ் என சில திரையரங்குகளில் ஓடுகிறது

பாபு

சென்னை சிட்டி பாக்ஸ் ஆபிஸில் மடிப்பாக்கம் குமரன், கோயம்பேடு ரோகினி வளாகம், அம்பத்தூர் ராக்கி, குரோம்பேட்டை வெற்றி வளாகம் உள்பட ஏராளமான திரையரங்குகள் இடம்பெற்றிருந்தன. இப்போழுது அவை இல்லை. திருவள்ளூர், காஞ்சிபுரம் பகுதிகளில் அவை வருகின்றன. தேவி காம்ப்ளக்ஸ், அண்ணா, விஜயா போரம் மால், எஸ்கேப், பிவிஆர், எஸ்2 பெரம்பூர், எஸ்2 தியாகராஜா, கமலா, அபிராமி மெகாமால், உட்லண்ட்ஸ், கேஸினோ, ஆல்பர்ட், சங்கம், ஈகா, பாரத், மகாராணி, சத்யம், எம்எம், கணபதிராம், ஸ்ரீபிருந்தா, ஏஜிஎஸ் திநகர், பலாசா, ஏவிஎம் ராஜேஸ்வரி, ஐநாக்ஸ் என குறிப்பிட்ட திரையரங்குகள் மட்டுமே சென்னை சிட்டி லிமிட்டுக்குள் வருகின்றன.

மார்ச் ஒன்று முதல் புதிய தமிழ்ப் படங்கள் வெளியாகவில்லை. சென்னைவாசிகள் திரையரங்கு, சினிமா என்பதை கொஞ்சம் கொஞ்சமாக மறக்க ஆரம்பித்திருக்கிறார்கள். திரையரங்குகளைப் பார்ப்பதே பரிதாபமாக உள்ளது. எப்போதும் ஜேஜே என்றிருக்கும் உதயம் காம்ப்ளக்ஸில் வற்றிய குளத்தின் வாடிய கொக்குகள் போல் அங்கொன்றும் இங்கொன்றும் சில ஆள்கள். கலகலப்பு 2 படமே அங்கு இப்போதும் ஓடிக்கொண்டிருக்கிறது. அங்கு மட்டுமில்லை, அபிராமி, எஸ்2 பெரம்பூர், பலாசா, போரம் மால், ரோகினி காம்ப்ளக்ஸ், லக்ஸ் என பல திரையரங்குகளில் கலகலப்பு 2 ஓடுகிறது. சென்ற வார இறுதியில் மட்டும் 5 லட்சத்திற்கும் மேல் இப்படம் வசூலித்து, தனது சென்னை வசூலை 5.70 கோடியாக உயர்த்திருக்கிறது.
பாலாவின் நாச்சியார் பிவிஆர், எஸ்கேப், சத்யம், ஐநாக்ஸ், ஏஜிஎஸ் என சில திரையரங்குகளில் ஒரு காட்சியாக ஓடிக் கொண்டிருக்கிறது.

ஜாக்பாட் அடித்திருப்பது தெலுங்கு, ஆங்கில, இந்திப் படங்களுக்கு.

சென்றவாரம் வெளியான ராம் சரண், சமந்தாவின் ரங்கஸ்தலம் சென்னையில் கலக்குகிறது. இந்தப் படத்துக்குதான் இப்போது கூட்டம். முதல் மூன்று நாளில் சுமார் 207 காட்சிகளில் 1.01 கோடியை இப்படம் வசூலித்திருக்கிறது. பாகுபலியை தவிர்த்து ஒரு நேரடித் தெலுங்குப் படம் முதல் மூன்று நாளில் சென்னையில் ஒரு கோடியை கடந்திருப்பது இதுவே முதல்முறை. கேஸினோவில் கூட்டம் அம்முவதைப் பார்ப்பதில் ஒரு பரவசம்.

இந்திப் படம் பாகி 2 க்கும் நல்ல ஓபனிங். பரவலாக எல்லா மல்டிபிளக்ஸ்களிலும் இந்தப் படம் ஓடுகிறது. வார இறுதியில் சுமார் 150 காட்சிகள் சென்னையில் மட்டும் திரையிடப்பட்டுள்ளது. எண்பது லட்சங்களை தொடும் வசூல்.

ராணி முகர்ஜியின் Hichki திரைப்படமும் வேலைநிறுத்தத்தை நன்கு பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. சென்றவார இறுதியில் கிட்டத்தட்ட 14 லட்சங்களை சென்னை சிட்டியில் வசூலித்துள்ளது. இதுவும் அனேகமாக அனைத்து மல்டிபிளக்ஸ்களிலும் ஒன்றிரண்டு காட்சிகளாக ஓடுகிறது.

சென்ற வாரம் வெளியான மெகா திரைப்படம் ஸ்டீபன் ஸ்பீல்பெர்க்கின் ரெடி பிளேயர் ஒன். உலகம் முழுவதும் எதிர்பார்த்த படம். இருக்கட்டும். படத்தில் ராட்சஸ குரங்கோ, டைனசரோ குறைந்தபட்சம் ஒரு சூப்பர் ஹீரோவோ இல்லையே. பிறகு எதுக்கு நாங்க இதைப் பார்க்கணும்? யுஎஸ்ஸில் சூப்பர் ஹீரோ படங்கள் முதல் 3 தினங்களில் ஆயிரம் கோடிகளைத் தாண்டுகையில் இந்தப் படம் 260 கோடிகளையே எட்டிப் பிடித்திருக்கிறது. சரி, சென்னையில் இதன் வசூல் எப்படி? முதல் மூன்று தினங்களில் 34 லட்சங்கள். நல்ல வசூல்தான்.

இவை தவிர பிளாக் பேந்தர், பசிபிக் ரிம் அப்ரைஸிங், இந்திப் படம் ரெய்டு, தெலுங்குப் படம் எம்எல்ஏ, அனிமேஷன் படம் கோகோ என அனைத்தும் ஓடுகின்றன. என்ன… நீங்கள் இவற்றைப் பார்க்க மல்டிபிளக்ஸ்களுக்கு போக வேண்டும். பெரும்பாலும் இரவுக்காட்சி மட்டும்.

இந்த வேலைநிறுத்தத்தை முன்வைத்து சில பழைய படங்களை இறக்கியிருக்கிறார்கள். அஜித்தின் பில்லா மாயஜால், எஸ்ஆர்கே சினிமாஸ் என சில திரையரங்குகளில் ஓடுகிறது. கடந்த 30 ஆம் தேதி கமலின் காக்கி சட்டையை வெளியிட்டார்கள். அந்தப் படம் வெளிவந்தபோது கமல் காதல் இளவரசன். இப்போது மக்கள் தலைவன் அடைமொழியுடன் விளம்பரப்படுத்துகிறார்கள். நல்ல முன்னேற்றம். ஸ்ரீனிவாசா, எஸ்கேப், உட்லண்ட்ஸ் என சில திரையரங்குகளில் காக்கி சட்டை ஓடுகிறது. ஸ்ரீனிவாசாவில் நல்ல கூட்டமும்கூட.

எம்ஜிஆரின் நாடோடி மன்னன், ரிக்ஷாகாரன் படத்தையும் சில திரையரங்குகள் ஓரிரு காட்சிகள் திரையிட்டுள்ளன. அதில் ஆல்பர்ட்டில் நாடோடி மன்னனுக்கு நல்ல வசூல். இப்போதும் இரண்டு ஷோ ஓட்டுகிறார்கள்.

நயன்தாரா நடித்த புதிய நியமம் மலையாளப் படத்தை வாசுகி என்ற பெயரில் தமிழில் வெளியிட்டிருக்கிறார்கள். தேவி, கமலா, பிரார்த்தனா, ஏவிஎம் ராஜேஸ்வரி, அண்ணா, ஆல்பர்ட் என மல்டிபிளக்ஸ்களைத்தாண்டி தனி திரையரங்குகளிலும் வெளியாகியுள்ளது. அதுவும் தினம் மூன்று முதல் நான்கு காட்சிகள். வாசுகியின் வசூல் மட்டும் சரியாக தெரியவில்லை. எப்படியும் 25 லட்சங்களை தொடும் என்கிறார்கள்.

பிச்சைக்காரன் பாத்திரத்தில் பத்து வீட்டு சாப்பாடு என்பார்களே.. அப்படியிருக்கிறது சென்னை திரையரங்குகளின் நிலை. ஒவ்வொரு படத்தையும் ஒரு காட்சி, இரண்டு காட்சி என்று திக்கித்திணறி ஓட்டுகிறார்கள். படம் பார்க்கும் மக்களின் எண்ணமும் வெகுவாக குறைந்து வருகிறது. திரையரங்குகள் பிடிவாதத்தை தவிர்த்து புதிய தமிழ்ப் படங்களை வெளியிடுவதற்கான சூழலை உருவாக்க வேண்டும். இல்லையெனில் திரையரங்குகள் குடோன்களாகவும், கல்யாண மண்டபங்களாகவும் மாறுவதை தவிர்க்க முடியாது.

சென்னையே இப்படி என்றால் பிற மாவட்டங்களில் உள்ள திரையரங்குகளின் கதி…?

திரையுலகமும், அரசும் அவசரமாக செயல்பட வேண்டிய தருணம் இது.

×Close
×Close