‘மாமானு கூப்பிடத் தான், மனசு ஏங்குது’ என்ற நாட்டுப்புற பாடலின் மூலம் மக்கள் மனதை கவர்ந்தவர், நாட்டுபுறப் பாடகி மதுரமல்லி. தான் பாடிய பாடலை, நாட்டுப்புற கலைஞர்களான செந்தில்-ராஜலட்சுமி தம்பதியினர், தாங்கள் இயற்றிய பாடல் என நிகழ்ச்சி மேடை ஒன்றில் கூறியிருந்ததது சர்ச்சையானது.
அவர்களின் இந்த பேச்சுக்கு பதிலடி தரும் வகையில், மதுரமல்லி சமீபத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். அந்த வீடியோவில், ‘நான் எழுதி, இசையமைத்து பாடிய பாடலை, யாரோ ஒருவர் பாடியதாக, ராஜலட்சுமி நிகழ்ச்சி மேடையில் பேசியிருப்பது அசிங்கமாக உள்ளது. மனசு வலிக்கிறது. ராஜலட்சுமியின் இந்த கருத்தை வாபஸ் பெறாவிட்டால், நான் தற்கொலை செய்துக் கொள்வேன்’, என பகிரங்கமாக பேசியிருந்தார், பாடகி மதுர மல்லி.
மதுரமல்லியின் வீடியோ வெளியாகி பரபரப்பை கிளப்பிய நிலையில், குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு தெரிவித்த ராஜலட்சுமி, யூடியூப் சேனலில் தனது கருத்தை எடிட் செய்ததன் விளைவாக தவறாக புரிந்துக் கொள்ளப்பட்டதாக விளக்கம் கூறியிருந்தார்.
தனது படைப்பை யாரோ ஒருவர் சொந்தம் கொண்டாடிய விரக்தியிலும், சட்டமன்றத் தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடுவதற்காக வேட்புமனு தாக்கல் செய்திருந்த நிலையில், வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாலும் மதுரமல்லி மன உளைச்சலில் இருந்ததாக தெரிய வருகிறது. இந்நிலையில், நேற்று முன் தினம் மதுரமல்லி தீடீரென ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்துள்ள செய்தி, நாட்டுப்புற கலைஞர்கள் மற்றும் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு, மதுரமல்லி தன்னை விடுதலைச் சிறுத்தைகள் கட்சியில் இணைத்துக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil