''மர்மர்'' படம் கடந்த 3 நாள்களாக சமூக வலைதளங்களில் பெரிய அளவில் பேசப்பட்டுக் கொண்டு இருக்கிறது. எங்கு பார்த்தாலும் மர்மர் படத்திற்கு ஆதரவாக யூடியூப் விமர்சகர், இன்ப்ளூயன்ஸர்ஸ்லாம் நல்லாருக்குன்னு சொல்றாங்க. ஆனால், திரையரங்கில் சென்று பார்க்கும் பார்வையாளர்கள் பலர் கலவையான விமர்சனங்களையே முன்வைக்கின்றனர்.
படத்தில் நிறை என்று சொல்லக்கூடியது அதன் முயற்சி மட்டுமே. `Found Footage' பாணியைத் தமிழில் கொண்டு வருவது ஒரு புதிய யோசனைதான். ஆனால், அதைச் சரியாகச் செயல்படுத்தாததால் அது வீணாகியிருக்கிறது என்று புலம்புகின்றனர் சினிமா ரசிகர்கள்..
அரை மணி நேரத்தில் முடித்திருக்க வேண்டிய கதையை, 2 மணி நேரத்துக்கு மேல் இழுத்து, பேய் சுத்திச் சுத்தி ஓடுவதுபோல் சத்தம் மட்டும் போட்டு, டால்பி அட்மாஸ் ஸ்பீக்கர்களின் தரத்தைச் சோதித்திருக்கிறார்கள் என்றும் கிண்டிலடிக்கின்றனர் பார்வையாளர்கள்..
இது ஒருபுறம் இருக்க மர்மர் திரைப்பட வெற்றி விழா சென்னையில் நடந்தது. இதில் பங்கேற்று செய்தியாளர்களிடம் பேசிய மர்மர் பட இயக்குநர் ஹேம்நாத்திடம், இன்ஸ்டாகிராம் இன்ஃப்ளூயன்சர்கள் மூலமாக மர்மர் படம் அதிகம் புரோமோட் செய்யப்பட்டுள்ளதே? என்று கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர், இப்படி ஒரு படம் இருக்கிறது எனத் தெரியப்படுத்ததான் புரோமோஷன் செய்யப்படுகின்றன. மற்றபடி இன்ஃப்ளூயன்சர்கள் சொல்வதால், படத்துக்கு மக்கள் செல்வார்களா என்ன? என்றார்.
ஒருவேளை போலியான விமர்சனங்கள் பரப்பப்படுவதாக நீங்கள் நினைத்தால், பொதுமக்களை அழைத்து ஒரு காட்சி போட்டுக்காட்ட நாங்கள் தயார். அப்போது அவர்கள் சொல்லும் கருத்து என்னவோ? அதை ஏற்றுக் கொள்கிறோம் என்றார் மர்மர் பட இயக்குநர் ஹேம்நாத்.