நடிகர் ரஜினிகாந்த் நடித்துக் கடந்த ஜூன் 9ம் தேதி வெளியான ‘காலா’ திரைப்படம் உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. இந்தப் படத்தின் வெளியான நாள் முதலிருந்தே, ‘காலா’-னு சொன்னா சும்மா அதிருதுல. பல சவால்களை கடந்து உலகம் முழுவதும் வாழும் ரஜினி ரசிகர்களுக்கு இப்படம் மிகப்பெரிய விருந்தாக அமைந்துள்ளது. இந்தியா மட்டுமின்றி உலக நாடுகளிலும் கோடிக்கணக்கான வசூல்களைப் பிடித்துள்ளது ‘காலா’.
சரியாக 2017ம் ஆண்டு டிசம்பர் 31ம் தேதி, அரசியல் வாழ்க்கைக்குள் அடியெடுத்து வைத்தார் ரஜினிகாந்த். இந்த முக்கிய அறிவிப்பை அவரே ரசிகர்கள் ஒன்று கூடியிருக்க சென்னையில் அறிவித்தார். அன்று முதல் இன்று வரை மக்களின் நலனிலும், நாட்டின் பிரச்சனையிலும், சில முக்கிய கருத்துக்களை வெளிப்படுத்தி வருகிறார். அதிகாரப்பூர்வமாக அரசியல் கட்சி ஒன்றை அவர் தொடங்கவில்லை என்றாலும், ரஜினி மக்கள் மன்றம் மூலம் கூட்டங்கள் கூட்டி ஆலோசனைகளை நடத்தி வருகிறார். கட்சி தொடங்குவது தாமதாகி வந்தாலும், இதற்கு ரசிகர்கள், ‘தலைவர் எப்போது கட்சி தொடங்குவார்-னு சொல்ல முடியாது. ஆனால் தொடங்க வேண்டிய நேரத்தில் கரெக்டா தொடங்கிருவாரு’ என்று கூறுகின்றனர். தனது அரசியல் பிரவேசத்தை ரஜினிகாந்த் காலா படத்தின் பாதி உருவாக்கத்தில் இருக்கும்போது அறிவித்தார். இந்த இருவேறு பிரம்மாண்ட விஷயங்களும் காலா படத்தில் ஒரு முக்கிய புள்ளியில் ஒன்றாக இணைந்துள்ளது.
கடந்த 40 ஆண்டுகளுக்கு மேலாக, தனது ஸ்டைல் மற்றும் நடிப்பாலும் ரசிகர்களின் மனதை குளிர வைத்த ரஜினிகாந்த், காலா படத்தில் மாஸ் காண்பித்து படையலையே போட்டுள்ளார். ரஜினியின் சேராத முதல் காதல் எவ்வளவு பசுமையாக உணர முடிந்ததோ, அதை விட அழகாக அமைந்திருந்தது, காலாவுக்கும் செல்விக்கும் இடையேயான திருமண பந்தம். குறிப்பாக வில்லன்களை கூளாகாக மிரட்டுவதிலும், சண்டைக் காட்சிகளிலும் பட்டையைக் கிளப்பியுள்ளார் ரஜினிகாந்த். இதைத் தான் அவர் 40 வருடமாகச் செய்து வருகிறாரே, ‘காலா’-வில் என்ன புதிதாக இருக்கு என்று கேட்பவர்களுக்கு முக்கிய விவரங்கள் பற்றி இந்தச் செய்தி தொகுப்பு எடுத்துரைக்கிறது.
நாம் அனைவரும் கவனிக்க வேண்டிய, 4 முக்கிய அம்சங்கள் ரஜினியின் இத்தனை வருட ஹீரோசியத்தின் மாற்றம். இத்தகைய மாற்றத்தை நிகழ்த்தியிருக்கிறார் பா. இரஞ்சித்.
பல வருட அரசியல் வசனங்களைத் தோற்கடித்த காலா:
கடந்த 10 வருடங்களுக்கு மேலாக ரஜினி தனது படங்களில் தமிழ்நாட்டின் அரசியல் நிலை குறித்து வசனங்கள் பேசி வந்தார். பொதுவாக ஊழல், ஏழை மக்களின் பிரச்சனைகள் மற்றும் விவசாயிகளின் பிரச்சனை குறித்த வசனங்கள் பெரும்பாலும் அவரின் படத்தில் இடம்பெற்றிருக்கும். ஆனால் ஒடுக்கப்பட்ட மக்களுக்கான உரிமைகள் குறித்து ரஜினிகாந்த் தனது பேசியது இதுவே முதல் முறை. தாழ்த்தப்பட்டோருக்காகவும், ஒடுக்கி வைக்கப்பட்டிருந்த சமூகத்தை சார்ந்த மக்களுக்காக உரிமைக் குரல் கொடுப்பது மட்டுமல்லாமல், தானும் மக்களுல் ஒருவராக இந்தப் படத்தில் வாழ்கிறார். இதுவரை அவர் நடித்துள்ள பெரும்பாலான படங்களில், ஒரு ஹீரோவாக இருந்து மக்களின் நலனை யோசிப்பவராக நடித்திருப்பார். அத்தகைய தடையை தகர்த்தெரிந்துள்ளார் ரஞ்சித். தாராவியில் வாழும் மக்களுடன் ஒன்றாக வாழ்கிறார் காலா ரஜினி. ரஜினிகாந்த் என்னும் பிம்பத்தை வைத்து, தலித் மக்களின் துயரங்களை பிரதிபலித்துள்ளார் பா. இரஞ்சித்.
பெண்கள் சுதந்திரத்தில் முற்போக்கான சிந்தனையாளரான காலா:
வாழ்நாள் முழுவதும் நிலங்களின்றி தவிக்கும் மக்களின் வாழ்க்கையைத் தெளிவாக கண்முன்னால் நிறுத்திய ரஞ்சித், பெண்கள் குறித்த முற்போக்கு சிந்தனைகளுக்கும் முக்கியத்துவம் அளித்துள்ளார். முன்னதாக ரஜினிகாந்த் நடித்துள்ள படங்கள் அனைத்திலும் பெண்கள் இவ்வாறு தான் வாழ வேண்டும் எனக் கூறும் வகையிலான வசனங்கள் இருக்கும். ஆனால் ‘காலா’ படத்தில் இந்த முறையையே ஒழித்திருக்கிறார் ரஞ்சித் மற்றும் ரஜினி. காலாவையே அதிகாரத்துடன் மிரட்டும் மனைவி செல்வி, வாக்குவாதத்தில் ஈடுபடும் முன்னாள் காதலி சரீனா மற்றும் மகன் லெனின் காதலி புயல் என 3 பெண்களுமே துணிச்சல் மிகுந்த கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
குறிப்பாகப் போராட்டம் நடைபெறும் காட்சிகளில், ‘எல்லாரும் எல்லாருக்கும் சமையல் செஞ்சிருங்கலே, பொம்பலைய கரண்டி பிடிக்க சொல்லாதிங்க’ என்ற வசனத்தைப் பேசியிருப்பார் ரஜினி. பெண்கள் என்பவர் சமையல் அறையில் மட்டும் முடங்கிக் கிடப்பவர்கள் இல்லை என்று தெளிவாக உரக்கக் கூறுகிறது ரஜினியின் வசனம்.
ஏற்றத் தாழ்வுகளை பகிரங்கமாக வெளிப்படுத்திய காலா:
படம் முழுவதும் நாட்டு மக்களிடையே நிலவும் சமத்துவமின்மையை நுட்பமாகக் காட்சிப்படுத்தியுள்ளார் ரஞ்சித். முக்கியமாக காலாவை போலீஸ் அழைத்துச் செல்லும் காட்சி மிகப் பெரிய ஹிட். அதில், ஹரிதாதாவின் கால்களைத் தொட்டு மன்னிப்பு கேட்குமாறு காலாவை வற்புறுத்துவார்கள். அந்தக் காட்சி முழுவதும், தங்களின் அதிகாரத்தை ஆணவத்துடன் ஹரிதாதா கூற, தரையில் அமர்ந்தபடி அனைத்தையும் கோபத்துடன் கேட்டுக்கொண்டிருப்பார் காலா. இந்தக் காட்சியின் மூலம், அதிகாரம் படைத்தவர்கள் மேலோங்கியே இருக்கிறார்கள் என்றும், தாழ்த்தப்பட்டோர் இன்னும் ஒடுக்கப்பட்ட நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளனர் என்று உணர்த்தியிருக்கிறார் ரஞ்சித்.
மக்களின் ஒற்றுமையை உணர்த்த விதையாய் விதைக்கப்பட்ட காலா:
இத்தனை ஆண்டுகளாக மக்கள் பார்த்து வந்த ரஜினியிசம் என்ற தோற்றத்தை புரட்டிப் போட்டுள்ளது க்ளைமேக்ஸ். கடந்த வருடங்களில் ஒற்றை ஆளாக நின்று எதிரியை ஜெயிக்கும் ரஜினியை மட்டுமே நாம் பார்த்திருப்போம். ஆனால் ‘காலா’ படத்தில் அதிகாரம் ஓங்கி இருக்கும் எதிரியை அழிக்க ஒற்றை ஆளால் முடியாது என்பதாலும், மக்கள் ஒன்றுகூடி ஒற்றுமையாகப் போராட வேண்டும் என்பதற்காகவும் விதையாக விதைக்கப்பட்டிருக்கிறார் காலா. போராட்டத்தில் விதையாக வீசி எரியப்பட்ட காலா, மக்கள் ஒன்று திரண்டு நிற்கும் ஆலமரமாக மாறியுள்ளார். மக்கள் அனைவரும் ஒன்று கூடி எதிரியைக் காட்சி, திரையரங்குகளையே அதிர வைத்துள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.