/indian-express-tamil/media/media_files/2025/07/02/abbas-2025-07-02-17-42-15.jpg)
1990-களில் தமிழ் சினிமாவின் சாக்லேட் பாயாக வலம் வந்த நடிகர் மிர்சா அப்பாஸ் அலி, "காதல் தேசம்" திரைப்படம் மூலம் அறிமுகமாகி, கனவு நாயகனாக மாறினார். "வி.ஐ.பி" (1997), "பூவேலி" (1998), "படையப்பா" (1999), "சுயம்வரம்" (1999), "மலபார் போலீஸ்" (1999), "கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்" (2000) போன்ற பல வெற்றிப் படங்களில் அப்பாஸ் நடித்தார். ரஜினி, கமல் மட்டுமல்லாமல், இந்தியில் சல்மான் கான், ஷாருக்கான், ஐஸ்வர்யா ராய் போன்ற முன்னணி நட்சத்திரங்களுடனும் இவர் நடித்தார். ஆனால், 2000-களின் தொடக்கத்தில் அவரது சினிமா வாழ்க்கை சறுக்கத் தொடங்கியது. பல படங்கள் தோல்வியடைந்ததால், துணை வேடங்களிலும், கௌரவ தோற்றங்களிலும் நடிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. மாதவன் நடித்த "மின்னலே" (2001) இதற்கு ஒரு எடுத்துக்காட்டு. சில வருடங்களுக்கு பிறகு, சினிமாவின் மீது ஆர்வம் குறையவே, திரையுலகை விட்டு முழுவதுமாக அப்பாஸ் விலகினார்.
இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும்
சினிமாவிலிருந்து விலகிய பிறகு, அப்பாஸ், நியூசிலாந்துக்கு குடிபெயர்ந்தார். அங்கு வாழ்வாதாரத்திற்காக பல சாதாரண வேலைகளை செய்யத் தொடங்கினார். சில வருடங்களுக்கு முன், ஒரு நேர்காணலில், தனது வாழ்க்கை குறித்து அப்பாஸ் பகிர்ந்து கொண்டார். மாடலாகவும், நடிகராகவும் மாறுவதற்கு முன்பே அவரது வாழ்க்கை கடினமாக இருந்ததாக கூறினார். 10-ஆம் வகுப்புத் தேர்வில் தோல்வியடைந்ததாலும், காதலி பிரிந்து சென்றதாலும் மனமுடைந்து தற்கொலை எண்ணம் தோன்றியதாகவும் அப்பாஸ் தெரிவித்தார்.
"எனது பதின்ம வயதில், 10-ஆம் வகுப்பில் தோல்வியடைந்த பிறகு தற்கொலை எண்ணத்துடன் மிகவும் கடினமான காலகட்டத்தை கடந்தேன். அப்போது காதலியின் பிரிவும் அந்த எண்ணங்களை அதிகப்படுத்தின. ஆனால், ஒரு ஆழமான விஷயம் என் வாழ்க்கையை மாற்றியது. சாலையோரம் நின்று, வேகமாக வரும் வாகனம் முன் பாயலாமா என்று யோசித்துக் கொண்டிருந்தபோது, ஒரு வாகன ஓட்டி செல்வதை கவனித்தேன். என் விருப்பப்படி நான் செயல்பட்டால், அந்த நபரின் வாழ்க்கையும் பெரிதும் பாதிக்கப்படும் என்பதை உணர்ந்தேன். அப்படி ஒரு தருணத்திலும், நான் மற்றொரு நபரின் நலன் குறித்து சிந்தித்தேன்" என்று அப்பாஸ் பகிர்ந்து கொண்டார்.
இந்தி திரையுலகில் "அன்ஷ்: தி டெட்லி பார்ட்" திரைப்படம் மூலம் அறிமுகமாக அப்பாஸ் முயன்றார், ஆனால் அதுவும் தோல்வியடைந்தது. "ஆரம்ப வெற்றிகளுக்குப் பிறகு, என் சில திரைப்படங்கள் தோல்வியடைந்தன. இதனால் அத்தியாவசிய தேவைகளுக்குக்கூட பணம் இல்லாமல் தவித்தேன். ஆரம்பத்தில், என் கர்வம் வேறு வேலை தேடுவதைத் தடுத்தது. இருப்பினும், தயாரிப்பாளர் ஆர்.பி. சௌதரியை அணுகி, வேலை கேட்டேன். அவர் எனக்கு 'பூவேலி' படத்தில் வாய்ப்பளித்தார். ஆனால், நான் பின்னர் சினிமா துறையிலிருந்து விலகிவிட்டேன், ஏனென்றால் எனக்கு அது சலிப்பை ஏற்படுத்தியது. என் வேலையை நான் ரசிக்கவில்லை. எனது பாலிவுட் அறிமுகப் படமான 'அன்ஷ்: தி டெட்லி பார்ட்' படத்தைப் பார்க்க வந்த நண்பர்களிடம், 'உங்கள் நேரத்தை வீணாக்காதீர்கள், அது ஒரு மோசமான படம்' என்று நான் கூறியது இன்றும் நினைவிருக்கிறது. என் குடும்பத்தைக் காப்பாற்ற, நான் நியூசிலாந்தில் பைக் மெக்கானிக்காகவும், டாக்சி ஓட்டுநராகவும் வேலை செய்தேன்" என்று அப்பாஸ் கூறினார்.
நியூசிலாந்தில் தனது வாழ்க்கை குறித்துப் பேசிய அவர், "கட்டுமான தளத்தில் இருந்த கழிப்பறையை நான் பயன்படுத்த மாட்டேன். அதற்கு பதிலாக, ஒரு பெட்ரோல் பங்கிற்கு சென்று, அங்குள்ள கழிப்பறையைப் பயன்படுத்துவேன். அங்குள்ளவர்கள் என்னைப் பார்த்து, 'உங்களை எங்கோ பார்த்தது போல இருக்கிறதே?' என்று கேட்பார்கள். நான், 'ஆம், அப்படித்தான் பலர் சொல்கிறார்கள்' என்று கூறுவேன். சில சமயங்களில், நான் அப்பாஸ் என்று சொன்னால், அவர்கள் அதிர்ச்சியடைவார்கள்." என்று அவர் தெரிவித்துள்ளார்.
சமூக வலைத்தளங்கள் மீது தனக்கு அவ்வளவாக ஆர்வம் இல்லை என்று அப்பாஸ் கூறினார். ஆனால், கோவிட் தொற்று காலத்தில், கடினமான சூழ்நிலைகளை எதிர்கொள்ளும் மற்றவர்களுக்கு தனது அனுபவங்களை பகிர்ந்து உதவ நினைத்து சமூக வலைத்தளங்களை அவர் பயன்படுத்தினார். "நான் நியூசிலாந்தில் வசித்தபோது, ரசிகர்களுடன் ஜூம் வீடியோ கால் மூலம் தொடர்பு கொண்டேன். தேவைப்படுபவர்களுக்கு உதவ வேண்டும் என்பதே எனது நோக்கமாக இருந்தது" என்று அவர் கூறினார். சில ஆண்டுகளுக்கு முன்பு, அப்பாஸ் மீண்டும் நடிப்பதற்கான முயற்சியில், ஒரு கழிப்பறை சுத்தம் செய்யும் திரவத்திற்கான விளம்பரத்தில் ஒப்பந்தம் ஆனார். அது தனக்கு உதவியதாகவும், தனது அகங்காரத்தை ஒதுக்கி வைத்துக்கொண்டு மாற்று பாதைகளை தேர்ந்தெடுத்ததாகவும் அவர் கூறினார். அவரது கடைசி திரைப்படம் வெளியாகி ஏறத்தாழ 10 ஆண்டுகள் ஆகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.