இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது அடுத்த படத்தில் கேம் ஆஃப் த்ரோன்ஸ் புகழ் ஜேம்ஸ் காஸ்மோ தனுஷுடன் இணைந்து நடிப்பார் என்று அறிவித்துள்ளார்.
ரஜினிகாந்த் நடித்த பேட்ட திரைப்படத்தை அடுத்து இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் தனது அடுத்த படத்தில் நடிகர் தனுஷுடன் ஹாலிவுட் நடிகர் கேம் ஆஃப் த்ரொன்ஸ் தொடர் புகழ் ஜேம்ஸ் காஸ்மோ இணைந்து நடிப்பார் என்று திங்கள்கிழமை அறிவித்துள்ளார்.
கார்த்திக் சுப்பராஜ் தனது டுவிட்டர் பக்கத்தில், பிரேவ்ஹார்ட், டிராய், கேம் ஆஃப் த்ரோன்ஸ் போன்ற பல புகழ்பெற்ற படங்களில் நடித்த ஒரு நடிகருடன் பணியாற்றுவதில் மிகவும் மகிழ்ச்சியாகவும் மரியாதையாகவும் உற்சாகமாகவும் இருக்கிறது என்று டுவீட் செய்துள்ளார்.
யார் இந்த ஜேம்ஸ் காஸ்மோ?
ஜேம்ஸ் காஸ்மோ ஒரு ஸ்காட்லாந்து நடிகர். இவர் ஹைலேண்டர், பிரேவ்ஹார்ட், ட்ரெய்ன்ஸ்பாட்டிங், டிராய், தி க்ரோனிகல்ஸ் ஆஃப் நார்னியா: தி லயன், தி விட்ச் அண்ட் தி வார்ட்ரோப், பென்-ஹர் மற்றும் வொண்டர் வுமன் போன்ற ஹாலிவுட் படங்களில் நடித்துள்ளார். இருப்பினும் தொலைக்காட்சி தொடர்களான கேம் ஆஃப் த்ரோன்ஸ் மற்றும் சன்ஸ் ஆஃப் அனார்க்கியில் நடித்தன் மூலம் மிகவும் பிரபலமடைந்தார். கேம் ஆஃப் த்ரோன்ஸில் அவர் 997-வது லார்ட் கமாண்டர் ஆஃப் தி நைட்ஸ் வாட்ச், ஜியோர் மோர்மான்ட்டாக நடித்தார்.
கார்த்திக் சுப்பராஜின் படத்தில் ஜேம்ஸ் காஸ்மோவின் பாத்திரம் பாத்திரம் இன்னும் வெளிவரவில்லை. கேங்ஸ்டர் கதை என்று கூறப்படும் இப்படம் முழுவதும் லண்டனில் படமாக்கப்பட உள்ளது. இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த மாதம் தொடங்கியது.
இந்த படத்தை ஒய் நாட் ஸ்டுடியோஸ் மற்றும் ரிலையன்ஸ் எண்டர்டைன்மெண்ட் நிறுவனம் தயாரிக்கிறது. மலையாள நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி தான் தனுஷுடன் நடிப்பதாக அறிவித்திருந்தார். படத்தில் நடிக்க உள்ள மற்ற நடிகர்களைப் பற்றி தயாரிப்பு நிறுவனம் இன்னும் அறிவிக்கவில்லை. இந்த படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசைமைக்கிறார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனிடையே நடிகர் தனுஷ், இயக்குனர் கௌதம் வாசுதேவ் மேனனின் என்னை நோக்கி பாயும் தோட்டா வெற்றிமாறனின் அசுரன், ஆர்.செந்தில் குமாரின் பட்டாஸ் உள்ளிட்ட பல படங்களை கைவசம் வைத்துள்ளார். மேலும், பரியேறும் பெருமாள் பட இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் ஒரு படத்துக்கு ஒப்பந்தமாகியுள்ளார்.