Karakattakaran 2: நல்ல படங்களை எத்தனை காலம் கடந்தாலும் ரசிகர்கள் தூக்கி வைத்துக் கொண்டாடுவார்கள். அப்படியான ஒரு படம் தான் ‘கரகாட்டக்காரன்’.
இயக்குநர் கங்கை அமரன் இயக்கியிருந்த இந்தப் படத்தை விஜயா மூவிஸ் நிறுவனம் தயாரித்திருந்தது. இதில் ராமராஜன், கனகா, கவுண்டமணி, செந்தில், கோவை சரளா, சந்தான பாரதி, சந்திர சேகர், சண்முகசுந்தரம், காந்திமதி என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது.
இசைஞானி இளையராஜாவின் உருவாகியிருந்த ‘கரகாட்டக்காரன்’ படத்தின் பாடல்கள் மிகப்பெரும் வரவேற்பைப் பெற்றன. இன்றளவும் இதன் பாடல்கள் மற்றும் பின்னணி இசையின் மவுசு ரசிகர்களிடத்தில் குறையவே இல்லை.
அதோடு, படத்தில் வரும் அத்தனை காமெடிகளும் தெறி ஹிட். இந்தப் படத்தில் இடம்பெற்றிருக்கும் காமெடி சீன்களை இமிடேட் செய்யாத தமிழ் தொலைக்காட்சி நகைச்சுவை நிகழ்ச்சிகளே இல்லை எனலாம்.
1989 ஜூன் 16-ல் வெளியான இப்படம் 425 நாட்கள் ஓடி, பாக்ஸ் ஆஃபிஸில் மிகப்பெரும் வெற்றியடைந்தது.
தமிழ் சினிமாவின் கிளாஸிக் படங்கள் என எடுத்துக் கொண்டால், அதில் ‘கரகாட்டக்காரனுக்கு’ ஓர் முக்கிய இடமுண்டு.
30 ஆண்டுகள் கழிந்த நிலையில் தற்போது இதன் 2-ம் பாகத்தை இயக்குவதாக தெரிவித்திருக்கிறார் இயக்குநர் கங்கை அமரன். சமீபத்தில் ஒரு நேர்க்காணலில் கலந்துக் கொண்ட அவர், “ராமராஜன், கனகா உட்பட முதல் பாகத்தில் இடம்பெற்றிருந்த அத்தனை பேரும் 2-ம் பாகத்திலும் இருப்பார்கள். இதன் கதை அவர்களின் பிள்ளைகளை மையமாக வைத்து இயக்கப்படும். அதோடு இந்தத் தலைமுறை நடிகர்களிடமும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது” என்றார்.
கங்கை அமரனின் இந்த அறிவிப்பு ‘வாழைப்பழ காமெடி’ ரசிகர்களுக்கு மிகுந்த உற்சாகத்தைக் கொடுத்துள்ளது.