கௌதமி, இயக்குநர் வாராகி மோதல் கோடம்பாக்கத்தில் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது. விதிமுறைகளுக்குப்புறம்பாக கௌதமி நடந்து கொள்கிறார் என்று வாராகி தரப்பு குற்றம்சாட்டியிருக்கிறது. இதுபற்றி வாராகி ஒரு அறிக்கையும் வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கை…
சிவா மனசுல புஷ்பா :
“இரண்டு தினங்களுக்கு முன் சென்சார் போர்டில் முக்கிய பொறுப்பில் இருக்கும் நடிகை கவுதமி உள்ளிட்ட சில உறுப்பினர்கள் இந்தப் படத்தை பார்த்தார்கள். படத்தில் ஒரு வார்த்தையை குறிப்பிட்டு மியூட் பண்ண சொன்ன கவுதமி, அதன்பின் டெல்லி தலைமை கூறியது போலவே படத்தின் டைட்டிலையும், படத்தில் சிவா மற்றும் புஷ்பா ஆகியோரின் பெயர்களையும் மாற்றச் சொல்லி வலியுறுத்தினார்.
நான் கவுதமியிடம் விளக்கம் கேட்டபோது படத்தின் டைட்டிலும் கதாபாத்திர பெயர்களும் நிஜத்தில் இருக்கும் சிலரை குறிப்பிடுவதாக கூறினார். மேலும் அந்த இரண்டு கதாபாத்திரங்களும் இப்போதுள்ள நிஜ வாழ்க்கையில் யாரை குறிக்கின்றன என்பதையும் அவரே தன் வாயால் கூறினார்.
அதுமட்டுமல்ல சம்பந்தப்பட்ட அந்த இரண்டு நபர்களிடமும் இருந்து அவர்கள் பெயரை பயன்படுத்த தடையில்லா சான்றிதழ் வாங்கி கொடுத்தால் படத்திற்கு சான்றிதழ் வழங்குவதில் எங்களுக்கு ஆட்சேபணை இல்லை என்றும் நிபந்தனை விதித்தார்.
கவுதமி அப்படி சொன்னது எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது. காரணம் படத்தில் இடம்பெறும் கதாபாத்திரங்கள் யாவும் கற்பனையே என நாங்கள் குறிப்பிட்டிருந்தும் கவுதமி இவ்வாறு சொன்னது ஆச்சர்யம் தந்தது. சரி அவர் சொல்வது போல, யாரை குறிப்பிடுகிறது என்பதை எழுத்துப்பூர்வமான உத்தரவாக கொடுங்கள். நான் அவர்களிடம் இருந்து அனுமதி கடிதம் பெற்று தருகிறேன் என கூறினால் அதற்கு கவுதமி நிர்தாட்சண்யமாக மறுத்துவிட்டார்.
அரசியல் கலந்த காதல் கதையாக இந்தப்படத்தை உருவாக்கியுள்ளேன். இந்தப்படம் தன் கணவனை மாற்றிக்கொள்ளும் ஒரு பெண்ணை பற்றியும் சொல்கிறது. இதற்கு முன் இதுபோன்ற விஷயத்தை யாருமே, எந்த படங்களுமே சொல்லவில்லையா என்ன..? ஒரு பெண் கணவனை மாற்றிக்கொள்கிறாள் என சொல்லப்பட்ட கதை, கவுதமியை பர்ஷனலாக பாதிக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. இதிலிருந்து சென்சார் குழு உறுப்பினராக படம் பார்த்த கவுதமி, சினிமாவையும் தனது பர்சனல் விஷயங்களையும் ஒன்றாக குழப்பிக்கொண்டு இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.”
சிவா மனசுல புஷ்பா திரைப்படம்
வாராகியின் இந்த அறிக்கையிலேயே முழுவிவரங்களும் உள்ளன. குறிப்பாக அவரது மனக்கோணல்கள். முன்னாள் அதிமுக நிர்வாகி சசிகலா புஷ்பாவின் திருமணம் குறித்த கதைகள் மற்றும் திமுக எம்பி சிவாவுடன் அவருக்கிருந்ததாக சொல்லப்படும் உறவு ஆகியவை குறித்து மீடியாக்கள் தொடர்ந்து எழுதியது நினைவிருக்கலாம். கிளுகிளுப்பையும், அடுத்தவர் அந்தரங்கத்தை அறியும் ஆவலையும் தூண்டும் அந்த கதை சினிமாவானால் கல்லா நிறையும் என்ற கால்குலேஷனில் வாராகி எடுத்த படம்தான் சிவா மனசுல புஷ்பா. சிவா, சசிகலா புஷ்பா இருவர் குறித்த பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் புனையப்பட்ட கதை இது என்பது அனைவருக்கும் தெரியும்.
ஆனால், தனது அறிக்கையில் அதனை ஒத்துக் கொள்ள மறுக்கிறார் வாராகி. அதற்குப் பதிலாக கௌதமியை சீண்டும்விதமாக இப்படி எழுதுகிறார். “இந்தப்படம் தன் கணவனை மாற்றிக்கொள்ளும் ஒரு பெண்ணை பற்றியும் சொல்கிறது. இதற்கு முன் இதுபோன்ற விஷயத்தை யாருமே, எந்த படங்களுமே சொல்லவில்லையா என்ன..? ஒரு பெண் கணவனை மாற்றிக்கொள்கிறாள் என சொல்லப்பட்ட கதை, கவுதமியை பர்ஷனலாக பாதிக்கிறதா என்பது எனக்கு தெரியவில்லை. இதிலிருந்து சென்சார் குழு உறுப்பினராக படம் பார்த்த கவுதமி, சினிமாவையும் தனது பர்சனல் விஷயங்களையும் ஒன்றாக குழப்பிக்கொண்டு இருக்கிறார் என்பது நன்றாகவே தெரிகிறது.”
இந்த வரிகள் நேரடியாக கௌதமியின் தனிப்பட்ட வாழ்க்கையை சீண்டுகிறது. கௌதமி தனது கணவரை விவாகரத்து செய்துகொண்டபின் கமலுடன் இணைந்து வாழ்ந்து வந்தார். அதனை இந்த வரிகளில் வாராகி சுட்டிக்காட்டுகிறார். ஒரு பெண்ணின் தனிப்பட்ட வாழ்க்கையை பொதுவெளியில் இழுத்துப்போடுவதன் வழியாக அவளை சிறுமைப்படுத்தலாம் என்ற சிறுமூளையின் அரிப்பே இந்த வரிகள். எழுதியவர் கண்டிக்கப்பட வேண்டியவர்.
ஒருவர் எதை வேண்டுமானாலும் சினிமாவாக எடுக்கலாம். அதற்கான உரிமை அவருக்கு உள்ளது. அந்தவகையில் சிவா – சசிகலா புஷ்பா சம்பந்தப்பட்ட விஷயங்களை வாராகி படமாக்கலாம். அதேபோல், அந்த கதை தங்களுடையது என்று கருதினால் சம்பந்தப்பட்ட சிவா – சசிகலா புஷ்பா இருவரும் படத்துக்கு தடைகேட்டு நீதிமன்றம் செல்லவும் உரிமை உள்ளது. அவர்கள் ஆட்சேபம் தெரிவிக்காத நிலையில் தணிக்கைக்குழுவில் இடம்பெற்றிருக்கும் ஒருவர் அவர்கள் சார்பில் பேசுவது விதிமுறைகளுக்கு முரணானது. வாராகியின் நோக்கத்தில் தவறு இருந்தாலும் விதிமுறையை தணிக்கைக்குழு உறுப்பினர் மீறுவது ஏற்கக்கூடியதல்லை.
மெர்சல் படத்தில் இடம்பெற்ற மத்திய அரசுக்கு எதிரான வசனங்களை, அப்படம் தெலுங்கில் டப் செய்யப்பட்ட போது மியூட் செய்ய தணிக்கைக்குழு வற்புறுத்தியது. தயாரிப்பு தரப்பு மறுத்தது. தமிழில் அனுமதிக்கப்பட்ட வசனத்தை தெலுங்கில் மியூட் செய்ய தணிக்கைக்குழு நிர்ப்பந்திக்க முடியாது. அது விதிமுறையல்ல. ஆனால், தணிக்கைக்குழு வற்புறுத்தியது. மியூட் செய்யவில்லையென்றால் தணிக்கைச்சான்றிதழ் தரமாட்டோம் என்றது. பிரச்சனையை பெரிதாக்க வேண்டாம் என்று வசனங்களை மியூட் செய்ய ஒப்புக் கொண்டனர். அதன்பிறகே சான்றிதழ் அளிக்கப்பட்டது. அப்படியான முறையற்ற வற்புறுத்தலையே கௌதமி வாராகி படத்தின் மீதும் வைத்திருக்கிறார். வாராகியின் நோக்கம், அவரது எதிர்வினை அனைத்தும் மோசமானவை என்ற போதிலும் கௌதமியின் விதிமீறலை அனுமதிப்பது, அதிகாரத்தை அதன் எல்லையை தாண்டி அனுமதிப்பதாம். அது ஆபத்தான அதிகார துஷ்பிரயோகம்.
குற்றவாளிகளுக்கு மறுக்கப்படும் நீதி நிரபராதிகளுக்கும் மறுக்கப்படும் என்பதை நினைவில் கொண்டு இந்தப் பிரச்சனையை திரைத்துறையினர் அணுக வேண்டும், எதிர்வினையாற்ற வேண்டும்.