மீண்டும் கௌதம் வாசுதேவ மேனன் : சூர்யாவின் மெகா திட்டங்கள்

நடிகர் சூர்யாவின் எதிர்கால திட்டங்கள் மீண்டும் அவரை திரைப்பட வார்த்தகத்தின் முன்னணி வரிசையில் உட்கார வைக்க வாய்ப்புள்ளது.

பாபு

சூர்யாவின் மார்க்கெட் பழையபடி இல்லை. ஹரியின் சிங்கம் சீரிஸ் மட்டுமே சுமாராக ஓடின. பிற படங்கள் கைகொடுக்கவில்லை. அதனால் மிக நிதானமாக அடுத்த இரு வருடங்களுக்கான திட்டத்தை வடிவமைத்துள்ளார்.

செல்வராகவன் இயக்கத்தில் என்ஜிகே படத்தில் சூர்யா நடித்து வருகிறார். வரும் தீபாவளிக்கு இந்தப் படம் வெளியாகிறது. செல்வராகவன் – சூர்யா என்ற வித்தியாசமான காம்போ என்பதால் ரசிகர்கள் படத்தை மிக ஆவலுடன் எதிர்பார்க்கின்றனர்.

அடுத்து லைகா தயாரிப்பில் கே.வி.ஆனந்த் இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். மாற்றான், அனேகன், படங்களின் தோல்வி, சுமாராகப் போன கவண் என கே.வி.ஆனந்துக்கே ஒரு வெற்றி தேவைப்படுகிறது. அதனை இந்தப் படம் சாத்தியமாக்கும் என்ற நம்பிக்கை அனைவருக்கும் உள்ளது.

இந்த இரு படங்களையும் தொடர்ந்து இறுதிச்சுற்று படத்தை இயக்கிய சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடிக்கிறார். படத்தின் கதை பிடித்திருந்ததால் சூர்யா நடிக்க ஒப்புக் கொண்டுள்ளார். இறுதிச்சுற்று போல் வித்தியாசமான கதை என்கிறார்கள்.

ஹரியுடன் சிங்கம் மூன்று பாகங்கள், ஆறு, வேல் என ஐந்து படங்களை முடித்துவிட்டார் சூர்யா. ஆறாவது முறையாக இவர்கள் ஒன்றிணைகிறார்கள். இந்தப் படம் சிங்கம் படத்தின் சீக்வலாக இருக்காது, புதிய கதை என்று ஹரி கூறியுள்ளார். சுதா கொங்கராவின் படத்துக்குப் பிறகு இவர்கள் ஒன்றிணையலாம்.

இவர்கள் தவிர 24 படத்தை இயக்கிய விக்ரம் கே.குமார் இயக்கத்தில் நடிக்கவும் முடிவு செய்துள்ளார் சூர்யா. விக்ரம் கே.குமார் தற்போது தெலுங்கில் அகிலை வைத்து படம் இயக்கி வருகிறார். 24 சுமாராகப் போனாலும், விக்ரம் குமாரின் வித்தியாசமான கதைக்களம் காரணமாக அவரை மீண்டும் பயன்படுத்த நினைக்கிறார் சூர்யா.

மாநகரம் படத்தை இயக்கிய லோகோஷ் கனகராஜ் அடுத்து கார்த்தி நடிக்கும் படத்தை இயக்குகிறார். அதையடுத்து சூர்யா நடிக்கும் படத்தை இயக்க உள்ளார். லோகேஷின் திறமையைப் பார்த்து அடுத்தடுத்த வாய்ப்புகளை சூர்யா குடும்பம் அவருக்கு தந்துள்ளது.

சூர்யாவின் திரை வாழ்க்கையில் திருப்புமுனையாக அமைந்த காக்க காக்க, வாரணம் ஆயிரம் படங்களை இயக்கியவர் கௌதம். முழுமையாக படத்தின் கதையை எழுதாமல் படப்பிடிப்புக்கு சென்று சொதப்புவதால் அவரது துருவநட்சத்திரம் படத்திலிருந்து சூர்யா விலகினார். இனி ஒருபோதும் இணைய வாய்ப்பில்லை என்றும் அறிக்கைவிட்டார். சினிமாவிலும், அரசியலிலும் நிரந்தர எதிரியோ, நண்பனோ இல்லை. சூர்யாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகவும், விரைவில் அவரை வைத்து படம் செய்யவிருப்பதாகவும் கௌதம் கூறியுள்ளார். அதனால், இவர்கள் இணைவது ஏறக்குறைய உறுதியாகியிருக்கிறது. துருவநட்சத்திரம் படத்தின் வெற்றி இந்த கூட்டணி அமைவதற்கான சாத்தியத்தை அதிகப்படுத்தலாம்.

சூர்யாவின் இந்த எதிர்கால திட்டங்கள் மீண்டும் அவரை திரைப்பட வார்த்தகத்தின் முன்னணி வரிசையில் உட்கார வைக்க வாய்ப்புள்ளது.

×Close
×Close