ஜெமினி கணேசனும் சுருளிராஜனும் : விமர்சனம்

ஆதர்வா நடிப்பில் வெளியாகி உள்ள ஜெமினி கணேசனும், சுருளிராஜனும் படத்தில், சூரி, பிரணிதா, ரெஜினா, ஐஸ்வரியா ராஜேஷ், அதிதி, மொட்டை ராஜேந்திரன் நடித்துள்ளனர்.

ஆதவன்

ஏற்கனவே பார்த்த கதைதான். தன் பழைய காதலிகளுக்குத் தன் திருமண அழைப்பிதழைக் கொடுப்பதற்காகப் பயணிக்கும் இளைஞனின் கதை. இயக்குநர் சேரன் இந்தக் கதையைத் தன் ‘ஆட்டோகிராஃப்’ படத்தில் உணர்வுபூர்வமாகக் கையாண்டிருப்பார். ‘ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்’ படத்தின் இயக்குநர் ஓடம் இளவரசு இதையே காமெடியாகக் கையாண்டிருக்கிறார். அதாவது இதை வைத்துக்கொண்டு காமெடி பண்ண முயற்சி செய்திருக்கிறார்.

ஜெமினி கணேசன் (அதர்வா), பெயருக்கேற்ற காதல் மன்னன். பார்க்கும் பெண்களெல்லாம் எப்படியோ இவரைக் காதலிக்க ஆரம்பித்துவிடுகிறார்கள். ஒரே சமயத்தில் ஒரே காம்பவுண்டில் இரண்டு காதலிகள்கூட இவருக்கு உண்டு. கல்லூரியிலும் அதே கதைதான். ஆனால், எந்தக் காதலியாவது கல்யாணத்தைப் பற்றிப் பேச்செடுத்தால் அந்தக் காதல் அதோடு சரி.

ஜெமினி கணேசன் ஏன் இப்படி இருக்கிறார்? அவருடைய காதலிகளின் கதி என்ன? அவருக்கு எப்படித் திருமணம் ஆயிற்று? – இந்தக் கேள்விகளுக்கான பதில்களை வெள்ளித்திரையில் பார்த்துத் தெரிந்துகொள்ளுங்கள்.

பழைய காதலிகளுக்குத் திருமண அழைப்பிதழ் கொடுப்பதற்கு சுருளிராஜனின் (சூரி) உதவியைக் கேட்பதிலிருந்து படம் தொடங்குகிறது. பயணத்தினூடே பழைய கதை தவணை முறையில் சொல்லப்படுகிறது.

படத்தில் நான்கைந்து காதல்கள் வந்தாலும் எந்தக் காதலிலும் அழுத்தமே இல்லை. நம்முடைய ஹீரோ எந்தப் பெண்ணைப் பார்த்தாலும் அவளைத் துரத்துவார் என்பது ஓகே. ஆனால், அந்தப் பெண்களும் இவரைக் கண்டதும் உருகி வழிவதைத்தான் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதை ஏற்கும் விதத்தில் காட்சிகளை அமைக்க இயக்குநர் தவறிவிட்டார். எனவே எந்தக் காதலும் நம்மைக் கவரவில்லை. எல்லாமே சுவாரஸ்யம் இன்றி உப்புச் சப்பில்லாமல் கடந்து செல்கின்றன. நாயகன் ஒரு பிச்சைக்காரருக்குப் போர்வை போர்த்துவதைக் கண்டு காதல் வருவது போன்ற கிளீஷேக்களுக்கும் குறைவு இல்லை.

ஒவ்வொரு காதலும் தோல்வியில் முடியும்போது எதனால் அப்படி நடந்தது என்ற சஸ்பென்ஸை இயக்குநர் உருவாக்குகிறார். ஆனால், அந்த சஸ்பென்ஸ் இயல்பாக அல்லாமல், துண்டு துண்டாகக் காட்சிகளை உடைத்துப் போடுவதன் மூலமாக உருவாவதால் செயற்கையாக உள்ளது.

நாயகியரின் அழகு மட்டுமே காதல் காட்சிகளின் ஒரே வசீகரம். ஊட்டியின் இயற்கைச் சூழலை அழகாகக் காட்சிப்படுத்தியிருப்பது போனஸ்.

படம் முழுவதும் சூரி, அதர்வா, ராஜேந்திரன் ஆகியோர் சிரிப்பை வரவழைக்க முயற்சி செய்கிறார்கள். ஒரு சில இடங்களில் அவர்கள் முயற்சி எடுபடுகிறது. காமெடிதான் தன் இலக்கு என்று இயக்குநர் முதலிலேயே தெளிவுபடுத்திவிடுகிறார். ஆனால், அந்தக் காமெடி சூடுபிடிப்பதே கடைசி அரை மணி நேரத்தில்தான். அதுவரையிலான திரைக்கதையில் அழுத்தமோ சுவாரஸ்யமோ இல்லை.

நாயகனின் காதல் சேட்டைகளைச் சொல்லும் முயற்சியில் பெண்கள் வெறும் பகடைக் காய்களாக்கப்படுகிறார்கள். பெரும்பாலும் எல்லாப் பெண்களும் அசடுகளாகவே வருகிறார்கள். நாயகனின் தந்தை தன் பையனின் காதல் சேட்டைகளைக் கையாளும் விதம் சிறுபிள்ளைத்தனமானது.

அதர்வாவின் தோற்றமும் நடிப்பும் நன்றாக உள்ளன. சூரியும் ராஜேந்திரனும் செய்யும் காமெடி ‘உரத்த’ தன்மை கொண்டது. அதர்வா அடக்கிவாசித்துக் கவர்கிறார். சூரியின் வெட்டி பந்தாவும் அதர்வாவின் காதல் கதைகளுக்கு அவர் கொடுக்கும் ரியாக்‌ஷன்களும் படத்தை நகர்த்திச் செல்ல உதவுகின்றன. ராஜேந்திரனின் பக்கத் துணை பொருத்தம்.

ரெஜினா, பிரணிதா, ஐஸ்வர்யா ராஜேஷ், அதிதி ஆகியோர் படத்துக்கு வெவ்வெறு விதங்களில் வண்ணம் கூட்டுகிறார்கள். ரெஜினாவும் பிரணிதாவும் கவர்ச்சியிலும் ஸ்கோர் செய்கிறார்கள்.

அதர்வாவின் அப்பாவாக வரும் டி.சிவாவும் பிரணிதாவின் அப்பாவாக வரும் மயில்சாமியும் பொருத்தமான தேர்வுகள்.

இமானின் இசை ரசிக்கும்படி உள்ளது. ஆனால், எல்லாப் பாடல்களும் முன்பே கேட்ட மெட்டுக்களை நினைவுபடுத்துகின்றன. படத்தின் மிகப் பெரும் பலம் ஸ்ரீ சரவணனின் ஒளிப்பதிவு. குறிப்பாக ஊட்டி காட்சிகள்.

காதலை விளையாட்டாக அணுகும் ஒரு இளைஞனின் சிறுபிள்ளைத்தனமான சேட்டைகளை வைத்துச் நம்மைச் சிரிக்கவைக்க முயல்கிறார்கள். பலவீனமான கதை, திரைக்கதை ஆகியவற்றையும் தாண்டி காமெடி நோக்கம் ஓரளவு கைகொடுக்கிறது.

×Close
×Close