விஜய் டிவியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சி முடிந்து 10 நாட்கள் ஆகிவிட்டாலும், அதைப் பற்றிய பேச்சுக்கள் மட்டும் இன்னும் அடங்கவில்லை. அடுத்த ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியைத் தொகுத்து வழங்குவது சூர்யாவா, அரவிந்த் சாமியா என்ற அளவுக்கு விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.
அடுத்த சீஸனில் கலந்து கொள்ளும் போட்டியாளர்களாக நீங்கள் யாரை எல்லாம் பரிந்துரைக்கிறீர்கள்? என்று முதல் சீஸன் போட்டியாளரான ஆர்த்தியிடம் ‘ஐஇ தமிழ்’க்காக கேட்டோம்.
ஆர்த்தி
“என்னைப் பொறுத்தவரைக்கும், இந்த உலகத்துல வாழ்கிற எல்லோருமே ‘பிக் பாஸ்’ல கலந்துக்கணும். ஒவ்வொருவரும் குறைந்தது 3 நாட்களாவது ‘பிக் பாஸ்’ வீட்ல தங்கணும். குறும்படம் பார்த்து தங்களோட ப்ளஸ், மைனஸ் என்ன என்பதைத் தெரிஞ்சிக்கணும்.
ஆர்ட்டிஸ்டா நம்ம பர்ஃபாமென்ஸை ஸ்கிரீன்ல பார்க்குறது வேற விஷயம். ஆனால், நாம வாழ்ந்த வாழ்க்கையை ஸ்கிரீன்ல பார்க்குறது பெரிய விஷயம். அந்த வகையில, எத்தனை பேர் ‘பிக் பாஸ்’ல கலந்துக்கிட்டாலும், அவங்க ஆசீர்வதிக்கப்பட்டவர்கள்.
ஆனால், இனிமேல் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியில கலந்து கொள்பவர்கள், ஒரிஜினலா இருப்பாங்கன்னு சொல்ல முடியாது. பொண்ணுங்க எல்லாம் ஓவியா மாதிரியும், பசங்க எல்லாம் ஆரவ் அல்லது ஹரிஷ் மாதிரியும்தான் நடந்துக்கணும்னு நினைப்பாங்க. ஏன்னா, அவங்களுக்கு எல்லாம் ஒரு எக்ஸாம்பிள் செட்டாயிடுச்சு. அதனால், இனிமே நிகழ்ச்சியில் ஒரிஜினாலிட்டி இருக்காதுனு நினைக்கிறேன்” என்கிறார் ஆர்த்தி.
ஜனவரி மாதம் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியின் அடுத்த சீஸன் தொடங்க இருக்கிறது. அதில் யாரெல்லாம் கலந்துகொள்ளப் போகிறார்கள் என்பதைத் தெரிந்துகொள்ள ‘பிக் பாஸ்’ ரசிகர்கள் ஆர்வமாக இருக்கின்றனர்.