நெட்ஃபிலிக்ஸின் கிளாஸ் ஆனியன்: ஏ நைவ்ஸ் அவுட் மிஸ்ட்ரி, ரையன் ஜான்சன் எழுதி இயக்கியுள்ள புதிய திரைப்படம். 2019ல் வெளியான நைவ்ஸ் அவுட் திரைப்படத்தின் இரண்டாம் பாகமான இப்படத்தில் ஜேம்ஸ் பான்ட் நடிகர் டேனியல் க்ரேய்க் துப்பறிவாளராக மீண்டும் நடித்துள்ளார். லாக்டவுன் காலத்தில் நடைப்பெறுவதாக அமைக்கப்பட்டுள்ள இப்படத்தில் ஒவ்வொரு வகையான மக்களும் எப்படி லாக்டவுனை கடந்து வந்தனர் என்பதை சுட்டிக்காட்டியுள்ளனர். பணக்காரர்கள் தங்கள் இஷ்டம்போல கொண்டாட்டக் களிப்பில் இருக்க, பண வசதியற்றவர்கள் வீட்டில் முடங்கி கிடந்து அவதியுற்றதை இப்படம் எடுத்துக்காட்டுகிறது. அப்படி அவதிப்படுகிறவர்களில் ஒருவரான டிடெக்டிவ் பெனடிக்ட் பிளான்க் ஒரு நல்ல வழக்கைத் தேடிக் கொண்டிருக்கும் வேளையில் அவரிடம் வந்து சேருகிறது இந்த கிளாஸ் ஆனியன் வழக்கு.
ஃபைட் கிளப் மற்றும் ஹல்க் நடிகரான எட்வர்ட் நார்டனின் பாத்திரமான பெரும் கோடீஸ்வரர் மைல்ஸ் பிரான் தன் நெருங்கிய நண்பர்களை தனது கிளாஸ் ஆனியன் மாளிகையில் ஒரு கொலை புதிர் விளையாட்டில் பங்கேற்க அழைப்பு விடுக்கிறார். ஆனால் அந்த நண்பர்களுக்கோ அந்த விளையாட்டில் கலந்துக்கொள்ள மைல்ஸ் பிரானின் முன்னாள் காதலி ஹெலன் பிரான்ட் ஏன் வந்தாள்? என்ற கேள்வி தான் மேலோங்கி இருக்கிறது. ஒரு பக்கம் நண்பர்கள் தங்கள் கேள்விக்கு பதில் தேட மறுபக்கம் மைல்ஸ் தான் அழையாமலே டிடெக்டிவ் ஏன் வந்தார்? என்று குழம்ப, இதற்கெல்லாம் சேர்த்து டிடெக்டிவ் துப்பறிய, திடீரென அவர்கள் கண்முன்னே ஒருவர் செத்து விழுகிறார். கொஞ்ச நேரத்தில் இன்னொரு கொலையும் நடக்க, அனைவரும் அதிர்ச்சியில் உறைந்து போகின்றனர். இவை அனைத்துக்கும் பின்னாடி இருக்கும் புதிர் முடிச்சுகளை அவிழ்ப்பதுதான் மீதித் திரைப்படம்.
முதல்பாகத்திற்கு சற்றும் குறையாத விறுவிறுப்புடன் இருக்கிறது இப்பாகம். டேனியல் க்ரேய்க் தான் நடித்த ஜேம்ஸ் பாண்ட் பாத்திரத்திலிருந்து இந்த டிடெக்டிவ் பாத்திரத்தை மாறுபடுத்தி காட்ட மெனக்கெட்டிருக்கிறார். திரையில் இதுவரை தான் நடித்தப் படங்களில் சட்டை இல்லாமல் காட்டப்பட்ட நடிகர் இப்படத்தில் அப்படி இல்லாதது மனதிற்கு ஆறுதலாக இருக்கிறது. எனினும் அதற்குப் பதிலாக டேவ் பாடிஸ்டாவின் ஆணாதிக்க-துப்பாக்கிக் கலாச்சார டியூக் பாத்திரம் அதிக நேரம் சட்டை இல்லாமல் சுற்றுகிறது. தொடக்கத்தில் கதை மைல்ஸ் பிரானைச் சுற்றி நடந்தாலும் சீக்கிரமே அது ஹெலன் பிரான்டை சுற்றிச் சுழல்கிறது. அவள்தான் அனைத்துக் கேள்விகளுக்கும் விடைத் தேடி அலைகிறாள் என்று வெளிப்படும் போது கதை இன்னும் சூடு பிடிக்கிறது. வழக்கமான கதைகளில் வருவது போல் முதன்மை ஆண் பாத்திரம் அனைவரையும் காப்பற்றும் போக்கிற்கு பதிலாக இப்படத்தில் முதன்மை பெண் பாத்திரத்தின் முயற்சிகளுக்குத் துணைப் புரிவதாகவே அமைக்கப்பட்டிருக்கிறது.
அரசியல் மற்றும் ஊடகத்தின் இன்றைய புது கலாச்சரங்களை இப்படம் நகைப்புக்கு உள்ளாக்குகிறது. குறிப்பாக பெரும் பணக்காரர்கள் உலகம் முழுவதும் அறிவுஜீவிகளாவும் உகத்தையே காப்பற்ற வந்தவர்களாகவும் கொண்டாடப்படுவதை மைல்ஸ் பிரான் பாத்திரத்தின் மூலம் கிண்டல் செய்கிறது. சமீபத்திய சமூக ஊடக நிகழ்வுகளை கவனிக்கும் எல்லாருக்கும் அப்பாத்திரம் யாரைக் குறிக்கிறது (டிவிட்டர் 😉) என்று நன்றாக விளங்கும். மேலும் இன்றைய வலைதள கதாநாயகர்களாக வலம் வரும் அரசியல்வாதிள், விஞ்ஞானிகள் மற்றும் சமூக ஊடகச் செயல்பாட்டாளர்களையும் நையாண்டி செய்து, அவர்களின் திரைக்குப் பின்னான வாழ்வை காட்சிப்படுத்தி கேலி செய்து போகிறது இப்படம். டியூக் – அவன் அம்மா, டியூக் – அவன் காதலி விஸ்கி மற்றும் பெர்டி – அவள் உதவியாளர் பெக் ஆகிய உறவுகள் நமக்கு நம்முடைய வலைதள மற்றும் நிஜ வாழ்க்கை உறவுகளை பிரதிபலிப்பதாக இருக்கின்றன.
இத்திரைப்படத்தின் உச்சக்கட்டம் அனைத்து புதிர்களுக்கும் விடை காண்பது என்று சொல்வதைவிட, அதற்குப் பின், கதையின் எதிர்மறை பாத்;திரத்தை முதன்மை பாத்திரம் எவ்வாறு எதிர்கொண்டு, வெற்றி பெறுகிறது என்பது தான் என்று சொல்லலாம். நம்பிய எதுவும் உதவாத நிலையில் தானே தன் கையில் போராட்டத்தை எடுத்துக் கொள்வது தான் ஒரே தீர்வு. வசதி படைத்தவர்கள் இங்குள்ள சட்ட நடைமுறைகளை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொள்ளும் போது, வசதி அற்றவர்கள் தங்களையே ஒரு போராட்ட ஆயுதமாக்கிக் கொள்வதுதான் வழி என்பதையே இப்படம் பார்வையாளர்களுக்கு எடுத்துரைக்கிறது. முதல் பாகத்தின் இறுதி காட்சி போலவே இப்பாகத்தின் இறுதியிலும் கதையின் முதன்மை பாத்திரத்தின் முகத்தை கிட்டத்தில் காட்டும் போது நமக்குள் ஒரு சில்லென்ற உணர்வும் ஆறுதலும் ஏற்படுகிறது.
வழக்கமான நெட்ஃபிலிக்ஸ் படங்களைப் போல இப்படத்திலும் சில பிரபலங்களை சிறு காட்சிகளில் தோன்ற வைப்பது பார்க்கும் நமக்கு அவ்வப்போது ஒரு சிலிர்ப்புணர்வை ஏற்படுத்துகிறது. அதிகமாக ஒரே இடத்தில் காட்சிப்படுத்தப்பட்டிருந்தாலும் ஒவ்வொரு காட்சியும் மிக அழகாக இருக்கும்படி ஒளிப்பதிவு இருக்கிறது. பெருமளவில் கண்ணாடியில் அமைக்கபட்ட அந்த மாளிகையும் அதனுள் இருக்கும் கண்ணாடிச் சிற்பங்களும் ஏற்கனவே இருக்கும் விறுவிறுப்பை கூட்டுகின்றன. கதாபாத்திரங்கள் நடமாடும் போது எங்கே அந்த கண்ணாடிச் சிற்பங்கள் விழுமோ என்ற அச்சத்தை நமக்குள் ஏற்படுத்தி, அதையே படத்தின் இறுதியில் ஒரு கொண்டாட்டம் போல விருந்தாக்கி இருக்கின்றனர். நிச்சயமாக இப்படம் விடுமுறைக்காலச் சிறப்பு கொண்டாட்டம் தான் என்பதில் எந்த கேள்வியும் இல்லை.
செய்தி: தோ. டால்டன், தொடர்புக்கு 7598095346, முனைவர் பட்ட ஆய்வாளர்