Happy Birthday Goundamani Tamil News: தமிழ் சினிமாவின் ‘காமெடி கிங்’ ஆக வலம் வரும் கவுண்டமணி இன்று தனது 84வது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். இவர், கடந்த 1939ம் ஆண்டு பொள்ளாச்சியில் உள்ள வல்லகொண்டபுரம் எனும் ஊரில் பிறந்தார். 1964ம் ஆண்டு நாகேஷ் ஹீரோவாக நடித்த சர்வர் சுந்தரம் படத்தில் கார் டிரைவராக சின்ன ரோலில் நடித்து தமிழ் திரையுலகில் அறிமுகமானார். பிறகு, பாரதிராஜா இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த் நடித்த 16 வயதினிலே படத்தில் நகைச்சுவை நடிகராக அறிமுகமானார்.

சுப்பிரமணி என்ற அவரது பெயரை சுருக்கமாக அனைவரும் மணி என்றே அழைத்து வந்தனர். ஆனால் அவர் சினிமாவில் காமெடி கவுன்ட்டர்களை அடித்து நொறுக்கி வந்த நிலையில், பின்னர் கவுண்டமணி என அழைக்கப்பட்டார். அவர் கடந்த 1977ம் ஆண்டு முதல் தற்போது வரை 950-க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், ஹீரோவாகவும் நடித்து அசத்தியுள்ளார்.
தனக்கு ஏற்பட்ட வயது மூப்பு காரணமாக சில ஆண்டுகளாக சினிமாவில் நடிக்காமல் இருந்து வந்த கவுண்டமணி சமீபத்தில் ஒரு படத்தில் மீண்டும் ஹீரோவாக நடிக்க கமிட் ஆகி ஷூட்டிங் சென்று வருகிறார். அந்த படத்திற்கு `பழனிசாமி வாத்தியார்’ என்று பெயரிப்பட்டுள்ளது. மேலும், நடிகர் சிவகார்த்திகேயன் உடன் ஒரு படத்தில் பெரியப்பா கதாபாத்திரத்தில் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் வெளியாகின.

வாழ்த்து
இந்நிலையில், கவுண்டமணியின் பிறந்தநாளை முன்னிட்டு ரசிகர்களும், சினிமா பிரபலங்களும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் அவரது புகைப்படம் மற்றும் வீடியோவை பகிர்ந்தும் அவருக்கு பிறந்தநாள் வாழ்த்து கூறிவருகின்றனர்.
சொத்து மதிப்பு

கவுண்டமணியின் சொத்து மதிப்பை பொறுத்தவரையில், நாகேஷுக்கு பிறகு அதிக சம்பளம் வாங்கிய நகைச்சுவை நடிகராக கவுண்டமணி தமிழ் சினிமாவில் இருந்து வருகிறார். ரியல்எஸ்டேட் போன்றவற்றில் அவர் முதலீடு செய்துள்ளார். அவரது சக நடிகரான செந்திலுக்கு இடங்கள் வாங்கிக் கொடுத்ததாக நடிகர் செந்தில் ஒரு பேட்டியில் குறிப்பிட்டு இருந்தார். இந்நிலையில், நடிகர் கவுண்டமணியின் தற்போதைய சொத்து மதிப்பு 40 முதல் 50 கோடிகள் இருக்கலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil