தமிழ் சினிமாவின் கோபக்கார காமெடியன் என்று சினிமா ஆய்வாளர்களால் வர்ணிக்கப்படும் கவுண்டமணி நீண்ட இடைவெளிக்குப் பிறகு, ‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற பெயரில் தயாரிக்கப்பட உள்ள அரசியல் படத்தில் ரீ எண்ட்ரி ஆகிறார் என்ற தகவல் ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
தற்போது 84 வயதாகும் கவுண்டமணி இயக்குனர் சாய் ராஜகோபால் இயக்கத்தில், 'ஒத்த ஓட்டு முத்தையா' படத்தில் ஹீரோவாக ரீ எண்ட்ரி கொடுக்கிறார். சாய் ராஜகோபாலின் முந்தைய படமான ‘கிச்சா வயசு 16’ படத்திற்கு இசையமைத்த சித்தார்த் விபின் இந்த படத்துக்கு இசையமைக்கிறார். ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தில் ஹீரோவாக நடிக்கும் கவுண்டமணியின் புகைப்படங்கள் படத்தின் போஸ்டர்கள் வெளியாகி ரசிகர்களை ஈர்த்துள்ளது.
‘ஒத்த ஓட்டு முத்தையா’ என்ற பெயரில் இருந்தே இருந்து ஒரு அரசியல் படம் என்பது தெளிவாகிறது. ‘இதெல்லாம் அரசியலில் சகஜமப்பா’ என்ற கவுண்டமணியின் வசனம் இன்றைக்கும் சிரிக்க வைக்கக்கூடியது. இந்த படம் ஒரு முழு நீள அரசியல் கலந்த நகைச்சுவைப் படமாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் நிலவுகிறது.
'ஒத்த ஒட்டு முத்தையா' படத்தில் கவுண்டமணியுடன் யோகி பாபு, மொட்டை ராஜேந்திரன், தம்பி ராமையா, மாரிமுத்து, சிங்கம் புலி, ரவி மரியா, வையாபுரி மற்றும் ராஜேஸ்வரி கோஸ்டர் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும், இந்த படத்தில் பழம்பெரும் நகைச்சுவை நடிகர் நாகேஷின் பேரன் கஜேஷ், மறைந்த நகைச்சுவை நடிகர் மயில்சாமியின் மகன் அன்பு, நகைச்சுவை நடிகர் சிங்கமுத்துவின் மகன் வாசன் கார்த்திக் ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர். இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்த ஆண்டு இறுதிக்குள் படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர் என்று தெரிவித்துள்ளனர்.
சுப்ரமணியன் கருப்பையா என்ற இயற்பெயர் கொண்ட கவுண்டமணி, சினிமாவில் இவருடைய கவுண்டர் டயலாக்குகளுக்காக கவுண்டமணி என்று கொண்டாடப்பட்டார். திரைப்படங்களில் இவர் பேசிய நகைச்சுவை வசனங்கள் இன்றைக்கு மீம்ஸ் கிரியேட்டர்களின் கச்சாவாக இருக்கிறது.
கவுண்டமணி தமிழ் சினிமா உலகில் ‘சர்வர் சுந்தரம்’ படத்தின் மூலம் அறிமுகமானாலும், அவருக்கு உண்மையில் அறிமுகம் கொடுத்த படம் என்றால் ரஜினிகாந்த், கமல்ஹாசன் நடித்த 16 வயதினிலே படம்தான். சுமார் 30 ஆண்டுகளுக்கு தமிழ் சினிமாவின் டாப் நகைச்சுவை நடிகராக கோலோச்சினார். அதிலும், செந்தில் - கவுண்டமணி நகைச்சுவை தமிழ் சினிமாவில் பிரபலமாக இருந்து வருகிறது. கவுண்டமணி முதுமை காரணமாக சினிமாவில் இருந்து ஓய்வு எடுத்து வந்தார். தற்போது 84 வயதாகும் கவுண்டமணி சினிமாவில் இருந்து நான் விலகிவிடவில்லை என்பதை ‘ஒத்த ஓட்டு முத்தையா’ படத்தின் மூலம் ரீ எண்ட்ரி கொடுத்து தமிழ் சினிமா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தி இருக்கிறார்.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil"
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.