ஆபாசம் மற்றும் பாலியல் தொடர்பான வீடியோக்கள் பதிவிட்டதாக கூறி 18 ஓ.டி.டி தளங்கள் மற்றும் அதன் தொடர்புடைய சமூகவலைதளங் கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
திரைப்படங்கள் ஃபிலிமில் இருந்து டிஜிட்டலுக்கு மாறிய அதே காலக்கட்டத்தில் ஓ.டி.டி தளங்களில் வருகையும் அதிகரித்தது. குறிப்பாக கொரோனா காலக்கட்டத்தில் அமல்படுத்தப்பட்ட ஊரங்கு உத்தரவின் காரணமாக, அனைவரும் வீட்டில் முடங்கி கிடந்தபோது, முன்னணி நடிகர்களின் திரைப்படங்கள் ஓ.டி.டி தளங்களில் வெளியாகி வெற்றி பெற்றது.
அந்த காலக்கட்டத்தில் தியேட்டர்கள் மூடப்பட்டிருந்ததால், பொதுமக்கள் மற்றும் சினிமா ரசிகர்கள் மத்தியில் ஓ.டி.டி தளங்கள் பெரும் வரவேற்பை பெற்றது. தற்போது சமூகத்தில் சகஜ நிலை திரும்பி இருந்தாலும், ஒடிடி தளங்களுக்கென்று தனியாக படங்கள் தயாரிக்கப்பட்டு வருகிறது. அதேபோல் திரையரங்குகளில் வெளியாகும் படங்கள் அனைத்தும் 4 வாரங்களில் ஒடிடி தளங்களில் வெளியிடப்பட்டு வருகிறது.
உள்ளூர் படங்கள் மட்டுமல்லாமல் உலக படங்கள் அனைத்தும் ஒ.டி.டி தளங்களில் கிடைக்கும் என்பதாலும், ஒ.டி.டி தளங்களில் வெளியாகும் படங்கள் மற்றும் வெப் சீரிஸ்களுக்கு சென்சார் கிடையாது என்பதாலும், தற்போது வெளியாகும் பல படங்களில் ஆபாச வசனங்கள், மற்றும் பாலியல் தொடர்பான காட்சிகள் அதிகம் இருக்கிறது. இதற்கு சமூக ஆர்வலர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தாலும், இந்த நிலை தொடர்ந்து கொண்டு தான் வருகிறது.
இதனிடையே, ஆபாச காட்சிகள், மற்றும் பாலியல் தொடர்பாக மோசமான காட்சிகளை ஒளிபரப்பிய காரணத்தால், இந்தியாவில் 18 ஓ.டி.டி தளங்கள் மற்றும் அவற்றுடன் தொடர்புடைய சமூகவலைதள கணக்குகளை முடக்கம் செய்து நடவடிக்கை எடுத்துள்ளதாக மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவில் பொது அணுகலுக்காக 18ஓ.டி.டி தளங்கள், 19 இணையதளங்கள், 10 மொபைல் ஆப்ஸ் (கூகுள் பிளே ஸ்டோரில் ஏழு, ஆப்பிள் ஆப் ஸ்டோரில் மூன்று) மற்றும் அவற்றுடன் தொடர்புடைய 57 சமூக வலைதள கணக்குகள் முடக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ள அமைச்சகம், 'ஆக்கப்பூர்வமான வெளிப்பாடு' என்ற போர்வையில் ஆபாசமான மற்றும் பாலியல் துஷ்பிரயோகம் போன்றவற்றைப் பிரச்சாரம் செய்யாமல் சமூகவலைதளங்கள் பொறுப்பை உணர்ந்து செயல்பட வேண்டும் என்று மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் வலியுறுத்தியுள்ளார்.
ஒ.டி.டி தளங்களுக்கு எதிராக செயல்படும் முடிவு, தகவல் தொழில்நுட்ப சட்டம், 2000 இன் விதிகளின் கீழ், அரசாங்கத்தின் பிற அமைச்சகங்கள் / துறைகள், ஊடகங்கள், பொழுதுபோக்கு, பெண்கள் உரிமைகள் மற்றும் குழந்தை உரிமைகள் ஆகியவற்றில் நிபுணத்துவம் பெற்ற டொமைன் நிபுணர்களுடன் கலந்தாலோசித்து எடுக்கப்பட்டது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“