இண்டர்நெட் பிரபலம் ஜி.பி.முத்து ஹெல்மெட் அணியாமல், யூடியூபர் TTF வாசனுடன் இணைந்து அதிவேக பைக்கில் பயணம் செய்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
Advertisment
இண்டர்நெட்டில் பொழுதுபோக்கான வீடியோக்கள் வெளியிட்டதன் மூலம் பிரபலமானவர் ஜி.பி.முத்து. தற்போது ஒரு சில படங்களில் நடித்துள்ளார். அதேநேரம் பைக் சாகச வீடியோக்களை யூடியூபில் வெளியிடுவதன் மூலம் பிரபலமானவர் TTF வாசன். இவர் Twin Throttlers என்ற யூடியூப் சேனலை நடத்தி வருகிறார்.
இந்த சேனலில் வாசன் தனது பைக் பயண வீடியோக்களை பதிவிட்டு வருகிறார். அதில் பைக்கில் வேகமாக செல்வது, ஸ்டண்ட் செய்வது, ரேஸ், போகும் வழியில் சிறுவர்கள் மற்றும் முதியவர்களுக்கு உதவுவது போன்ற செயல்களை செய்து வருகிறார். இதனை எல்லாம் தனது கேமராவில் பதிவு செய்து யூடியூபில் வீடியோவாக வெளியிட்டு வருகிறார். அதேநேரம் இவர் மீது சாலை விதிகளை மீறுவதாக புகார் உள்ளது.
இந்தநிலையில், யூடியூபர் வாசன் ஆபத்தான முறையில் பைக் ஓட்டி சாகசம் செய்யும் வீடியோ வெளியாகி சர்ச்சையாகியுள்ளது. காரணம் அவர் வாகனங்கள் வரும் திசைக்கு எதிர் திசையில் அதி வேகமாக பைக் ஓட்டியும், கைகளை விட்டு ஓட்டியும் சாகசம் செய்துள்ளார். இதில் பின்னால் அமர்ந்திருப்பவர் மற்றொரு சமூக ஊடக பிரபலமான ஜி.பி. இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், ஜிபி முத்து-ஐ சந்திக்கும் வாசன் பைக் பயணத்திற்கு அழைக்கிறார். பின்னர், இருவரும் லடாக் செல்வதாகக் கூறி பைக்கில் பயணம் செல்கின்றனர். வாசன் மணிக்கு 150 கி.மீ வேகத்தில் பைக்கில் செல்லும் வேகம் காண்போரை பதைபதைக்க வைக்கிறது. இந்த பயணத்தில் பின்னால் அமர்ந்திருக்கும் ஜி.பி.முத்து ஹெல்மெட் அணியாமல் இருந்துள்ளார். இதுவும் தற்போது சர்ச்சையாகியுள்ளது.