Yogi Babu Movie: ஜி.வி.பிரகாஷ் நடித்த ‘டார்லிங்’ திரைப்படத்தை இயக்கிய சாம் ஆண்டன் இயக்கத்தில் இன்று வெளியாகியிருக்கும் படம் ‘கூர்கா’. யோகி பாபு முன்னணி கதாபாத்திரத்தில் நடித்திருக்கும் இதில், மனோபாபு, சார்லி, ஆனந்தராஜ், லிவிங்ஸ்டன், ராஜ்பரத், எலிசா எர்கார்ட் உள்ளிட்டோரும் நடித்துள்ளார்கள். ராஜ் ஆர்யன் இசையமைத்திருக்கும் இப்படத்திற்கு கிருஷ்ணன் வசந்த் ஒளிப்பதிவு செய்துள்ளார்.
சமகால அரசியலையும், சினிமா பிரபலங்களையும் பகடி செய்யும் வகையில் உருவாகியுள்ள இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் 300 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது. கூர்கா சமூகத்தில் பிறந்த யோகிபாபு போலீஸாக விரும்புகிறார். பலமுறை முயற்சி செய்தும், அவரால் தகுதி பெற முடியவில்லை. கடைசி முயற்சியில் (ரவி மரியா) இன்ஸ்பெக்டரால் ஏமாற்றவும் படுகிறார். பின்னர் ஒரு செக்யூரிட்டி ஏஜென்ஸியில் பகதூர் எனப்படும் யோகிபாபுவிற்கு வேலை கிடைக்கிறது. அதோடு அமெரிக்க அம்பாஸிடரான எலிசா மீது காதலும் பிறக்கிறது.
இதற்கிடையே ஆயுதமேந்திய ஓர் கும்பல் ஒரு ஷாப்பிங் மாலை தனது கட்டுக்குள் கொண்டு வந்து எலிசா உள்ளிட்ட சிலரை சிறை பிடிக்கிறது. ஆனால், யோகிபாபு, சார்லி மற்றும் நாய் அங்கிருப்பது அந்த கும்பலுக்கு தெரியாமல் போகிறது. சிறைப்பிடிக்கப்பட்டிருப்பவர்கள் அனைவரும் காவல்துறையினரின் குடும்பத்தினர் என்பதால், அந்த கும்பல் மீது நடவடிக்கை எடுக்க மறுக்கிறது போலீஸ். இதில் இருந்து அவர்கள் எப்படி வெளியில் வந்தார்கள், யோகிபாபுவும், சார்லியும் செய்தது என்ன என்பதே மீதிக் கதை.
நடிகர் சிவக்குமார் செல்ஃபி எடுத்தவர் ஃபோனை தட்டி விட்டது, நித்யானந்தா, டி.வி சேனல்கள் ஆகியவற்றின் மீதான தனது பார்வையை ‘கூர்கா’ படம் மூலம் வெளிப்படுத்தியிருக்கிறார் சாம் ஆண்டன். அதற்கு தியேட்டரில் சிரிப்பலையும் ஏற்படுகிறது. முதல்பாதி ஜவ்வாக இழுக்கிறது, இரண்டாவது பாதி கச்சிதம்.
பின்னணி இசை ஓகே ரகம், பாடல்கள் சொல்லிக் கொள்ளுமளவுக்கு இல்லை. தன் கேமரா கை வண்ணத்தில் கண்களுக்கு விருந்து படைத்துள்ளார் கிருஷ்ணன் வசந்த். மொத்தத்தில் கவலைகளை மறந்து வாய்விட்டு சிரிக்க விரும்புவோர், தாராளமாக ‘கூர்கா’வைப் பார்க்கலாம்!
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.