G.V.Prakash Kumar Makes His Hollywood Entry: இசையிலிருந்து மென்மையாக நடிப்புக்கு தாவி, இரண்டுக்கும் எந்த வித சிக்கலும் ஏற்படாமல், சரியாக பேலன்ஸ் செய்யும் மிகச்சில இசையமைப்பாளர்களுள் ஜி.வி.பிரகாஷ் குறிப்பிடத் தகுந்தவர்.
தற்போது ’100 பெர்சண்ட் காதல் ‘, ‘ஐயங்கரன்’, ‘அடங்காதே’, ‘ஜெயில்’, ‘காதலை தேடி நித்யா நந்தா’, ‘காதலிக்க யாருமில்லை’, ‘ஆயிரம் ஜென்மங்கள்’ மற்றும் ‘பேச்சிலர்’ உள்ளிட்டப் படங்களில் தற்போது பிஸியாக நடித்து வருகிறார். அதோடு சூர்யாவின் ‘சூரறை போற்று’ மற்றும் தனுஷ் – வெற்றி மாறனின் ‘அசுரன்’ போன்ற படங்களுக்கும் இசையமைத்து வருகிறார். தவிர ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் வெளியான சிவப்பு மஞ்சள் பச்சை திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
இந்நிலையில் தற்போது ஜி.வி.பிரகாஷ், ஹாலிவுட்டில் எண்ட்ரியாகும் சுவாரஸ்ய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அந்தப் படத்திற்கு ‘ட்ராப் சிட்டி’ எனப் பெயரிடப்பட்டுள்ளது. ஒரு போதைப் பொருள் விற்பனையாளர் எப்படி வெற்றிகரமான ராப் பாடகராக மாறுகிறார் என்பதே இதன் கரு. அதோரு ஒரு ஆபத்தான சூழ்நிலையில் குற்றம் செய்த முதலாளியைக் காட்டிக் கொடுக்கிறாரா அல்லது தன் கரியரை காப்பாற்றுகிறாரா என்பதையும் வித்தியாசமான முறையில் படமாக்க திட்டமிட்டுள்ளனர் படக்குழுவினர். இது குறித்து தனது ட்விட்டரில் வீடியோ ஒன்றையும் வெளியிட்டுள்ளார் ஜி.வி.பிரகாஷ்.
Shooting for @brandontjackson s #trapcity … #hiphop film #hollywood pic.twitter.com/lCq6jgciTh
— G.V.Prakash Kumar (@gvprakash) September 23, 2019
இந்த படத்தில் பிரபல ஹாலிவுட் ஸ்டாண்டப் காமெடி நடிகர் பிராண்டன் டி ஜாக்சன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார், டென்னிஸ் எல்.ஏ ஒய்ட்டும் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். ரிக்கி பர்ச்செல் இயக்கும் இந்தப் படத்தை டெல் கணேசன் இணை தயாரிப்பு செய்கிறார். இவர் சமீபத்தில் ‘தி டெவில்ஸ் நைட்’ மற்றும் ‘கிறிஸ்துமஸ் கூப்பன்’ ஆகியவற்றை தயாரித்திருந்தது குறிப்பிடத் தக்கது. ஜி.வி.பிரகாஷ் நடிக்கும் ஹாலிவுட் படத்தின் மற்ற விபரங்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.