நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷுக்கு கௌரவ டாக்டர் பட்டம் கொடுத்து புனித ஆண்ட்ரூஸ் பல்கலைக்கழகம் சிறப்பித்துள்ளது. இதனை அவரது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
இயக்குநர் வசந்தபாலன் இயக்கத்தில் வெளியான வெயில் படத்தின் மூலமாக தமிழ்த் திரையுலகிற்கு இசையமைப்பாளராக அறிமுகமானவர் ஜி.வி.பிரகாஷ். பின்னர் டார்லிங் திரைப்படம் மூலம் நடிகராகத் தனது பயணத்தைத் தொடங்கினார். சமீபத்தில் இயக்குநர் பாலா இயக்கிய நாச்சியார் படத்தில் ஜி.வி.பிரகாஷ் நடித்தார். அவரின் அடுத்த படமான ’செம’ அடுத்த வாரம் திரைக்கு வர உள்ளது.
அன்று முதல் இன்று வரை திரைப்படங்களில் பாடல்கள் இசையமைப்பது, நடிப்பது என மட்டும் அவர் நிறுத்திக்கொள்ளவில்லை. சமூக பிரச்சனைகளுக்காகவும் தொடர்ந்து குரல் கொடுத்து வருகிறார்.
சமூகப் அக்கறையிலும் ஆர்வம் கொண்டு செயல்பட்டு வரும் ஜி.வி.பிரகாஷ் , ஜல்லிக்கட்டு போராட்டம், மீனவர்கள் போராட்டம், ஸ்டெர்லைட் போராட்டம், நீட் எதிர்ப்பு போராட்டம், காவிரி போராட்டம், விவசாயிகள் போராட்டம் எனத் தமிழர்களின் பிரச்சினைகளுக்காக சமூக வலைத்தளங்களிலும், களத்திலும் குரல் கொடுத்து வருகிறார். மேலும் நீட் தேர்வுக்கு பயிற்சியளிக்கும் விதமாகச் சமீபத்தில் இலவச செயலி ஒன்றை அறிமுகப்படுத்திய ஜி.வி.பிரகாஷ் பள்ளிகளில் கழிப்பறைகள் கட்ட நிதி உதவிகள் அளித்தும் மக்கள் மனதில் இடம்பிடித்து வருகிறார்.
எனவே ஜி.வி.பிராகாஷின் சமூக நல அக்கறை மற்றும் சிறப்பான பணிகளைப் பாராட்டி புனித ஆண்ட்ரூஸ் இறையியல் பல்கலைக்கழகம் அவருக்குக் கௌரவ டாக்டர் பட்டம் வழங்கிப் பெருமைப்படுத்தியுள்ளது.