பி.வி. ஷங்கர் இயக்கத்தில் ஜிவி பிரகாஷ்குமார், பாரதிராஜா, இவானா நடிப்பில் வெளியாகி இருக்கும் கள்வன் திரைப்படத்தின் முழு விமர்சனம் வருமாறு.
கதைக்களம்
சத்தியமங்கலம் மலைப்பகுதியில் உள்ள கிராமத்தில் திருட்டு வேலை செய்யும் இளைஞர்களாக ஜி.வி. பிரகாஷ் குமாரும், தீனாவும் வாழ்ந்து வருகிறார்கள். அந்த நேரத்தில் அங்கு வரும் நாயகி இவானா மீது காதலில் விழுகிறார் நாயகன். அவரை கவர்வதற்காக பல வேலைகளின் ஈடுபடும் நாயகன், அனாதை ஆசிரமத்தில் தங்கியிருக்கும் பாரதிராஜாவை தன்னுடைய தாத்தாவாக தத்தெடுக்கிறார். இதனிடையே அந்த கிராமத்தில் அடிக்கடி யானைகளின் தாக்குதலும் நடைபெற அதன்பிறகு என்ன நடக்கிறது என்பது தான் மீதி கதை
நடிகர்களின் நடிப்பு :
கிராமத்து இளைஞன் கதாபாத்திரத்துக்கு கச்சிதமாக பொருந்துகிறார் ஜி.வி. பிரகாஷ்குமார். காதல், காமெடி, எமோஷன் என எல்லா ஏரியாவிலும் கலக்கி இருக்கிறார். தீனாவுடன், ஜிவி பிரகாஷ் செய்யும் காமெடிகளும் கிளிக் ஆகி உள்ளது. வெறும் 2 பாடல், 2 ரொமான்ஸ் என்று மட்டும் இல்லாமல் படம் முழுவதும் இவானாவின் காட்சிகள் கதைக்களத்துடன் இடம்பெறுகின்றன. அதற்கு தகுந்தாற்போல அவரும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். படத்தின் மற்றொரு ஹீரோவாக ஜொலிப்பது பாரதிராஜா, அவருடைய யதார்த்த நடிப்பு நம்மை ஈர்க்கிறது . இந்த வயதில் இப்படியொரு நடிப்பை வெளிப்படுத்த முடியுமா என ரசிகர்களை பிரமிக்க வைக்கிறார்.
இயக்கம் மற்றும் இசை
ஒளிப்பதிவாளராக பல படங்களில் கலக்கிய பி.வி ஷங்கர் இப்படத்தில் இயக்குனராக அறிமுகமாகி இருக்கிறார். இப்படத்திற்கு அவரே ஒளிப்பதிவும் செய்திருக்கிறார். காதல், காமெடி, ஆக்ஷன், திரில்லர் என கமர்ஷியல் படத்திற்கு தேவையான அனைத்தையும் இப்படத்தில் பக்காவாக கொடுத்திருக்கிறார். ஜிவி பிரகாஷ்குமாரின் இசை படத்திற்கு கூடுதல் பலம். பாடல்கள் சுமார் ரகம்.
படத்தின் பிளஸ்
⦿ காதலும், காமெடியும் கலந்த ஜாலியான முதல் பாதி
⦿ நடிகர்களின் அட்டகாசமான நடிப்பு
⦿ இடைவேளை ட்விஸ்ட்
⦿ பாரதிராஜாவின் பிளாஷ்பேக்
⦿ ஜி.வி பிரகாஷின் இசை
⦿ யானை காட்சிகள்
படத்தின் மைனஸ்
⦿ இரண்டாம் பாதியின் நீளம்
⦿ யூகிக்கக்கூடிய காட்சிகள்
⦿ CG காட்சிகள்
மொத்தத்தில் சிறு சிறு குறைகள் இருந்தாலும் குடும்பத்துடன் பார்த்து ரசிப்பதற்கான ஒரு நல்ல பொழுதுபோக்கு திரைப்படம் தான் இந்த "கள்வன்"
- நவீன் சரவணன்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“