/indian-express-tamil/media/media_files/2025/08/04/download-13-2025-08-04-11-25-17.jpg)
தமிழக பாஜகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக உள்ள எச். ராஜா, முன்னாள் எம் எல் ஏ வாக இருந்தவர். தற்போது அவர் பாஜகவின் தேசிய செயற்குழு உறுப்பினராக இருக்கிறார். இதற்கிடையில், அரசியலை விட்டு சினிமா துறையில் எச். ராஜா பிரவேசித்துள்ளதாக சமீபத்தில் தகவல்கள் வெளியானது.
தமிழகத்தில் பொதுவாக நடிகர்கள் அரசியலில் கால் பதிப்பது ஒரு சாதாரணமான ஒரு விஷயம் ஆகிவிட்டது. எம்ஜிஆர் முதல் நடிகர் விஜய் வரை இதற்கான பல உதாரணங்கள் உள்ளன. ஆனால் அரசியல்வாதிகள் சினிமாவில் நடித்துக்கொள்வது என்பது மிகவும் அபூர்வமானதாய்தான் காணப்படுகிறது.
இந்த சூழலில் எச். ராஜா ஒரு புதிய திரைப்படத்தில் நடித்துக்கொண்டு இருக்கிறார். அவர் நடிக்கும் இந்த படத்திற்கு ‘கந்தன்மலை’ என பெயரிடப்பட்டுள்ளது. இப்படத்தின் முதல் லுக் போஸ்டர் நேற்று வெளியானது. அதில் எச். ராஜா முறுக்கு மீசையுடன் கழுத்திலும் கையிலும் ருத்ராட்ச மாலையுடன் இருக்கிறார். பின்னணியில் கோவிலின் நுழைவு வாசல் உள்ளது. அந்த வாசலின் வழியாக எச். ராஜா கோவிலுக்குள் பிரவேசிக்கும் போல் இந்த போஸ்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது.
‘கந்தன்மலை’ என்பது முருகனின் கோவிலுள்ள ஒரு மலைக்கு வைக்கப்பட்டுள்ள பெயராகக் கருதப்படுகிறது. குறிப்பாக, முருகனின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருப்பரங்குன்றம், ‘கந்தன்மலை’ என அழைக்கப்படும். இதனால்தான், இந்த திரைப்படம் திருப்பரங்குன்றம் முருகன் மலைக்கு அடிப்படையாக அமைந்ததா என்ற சந்தேகம் ரசிகர்களிடையே எழுந்திருக்கிறது.
இந்நிலையில், எச்.ராஜா வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில், “கிடுகு திரைப்பட இயக்குனர் சகோதரர் திரு.வீரமுருகன் அவர்கள் இயக்கத்தில் நான் நடித்து வெளிவர இருக்கும் கந்தன் மலை திரைப்படத்தின் முதல் பார்வை மற்றும் போஸ்டரை தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் எம் எல் ஏ அவர்கள் திருநெல்வேலியில் உள்ள அவரது இல்லத்தில் வெளியிட்டார். இந்நிகழ்ச்சியில் மாண்புமிகு மத்திய இணை அமைச்சர் திரு. எல்.முருகன், முன்னாள் மத்திய அமைச்சர் திரு. பொன் ராதாகிருஷ்ணன், தெலங்கானா முன்னாள் ஆளுநர் டாக்டர் திருமதி. தமிழிசை சௌந்தரராஜன் , தமிழக முன்னாள் அமைச்சர் திரு.தளவாய் சுந்தரம், அண்ணாச்சி திரு.எம். ஆர். காந்தி எம் எல் ஏ, மாநில பொதுச் செயலாளர்கள் பேராசிரியர் திரு.ராம.சீனிவாசன், திரு.பொன் வி .பாலகணபதி, மாநில துணைத் தலைவர் திரு.கோபால்சாமி எக்ஸ். எம் எல் ஏ, தேசிய பொதுக்குழு உறுப்பினர் திரு.நீலமுரளி யாதவ் மற்றும் மாநில, மாவட்ட, நிர்வாகிகள், தாமரை சொந்தங்கள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்” என்று குறிப்பிட்டு புகைப்படங்களைப் பகிர்ந்துள்ளார்.
‘கந்தன்மலை’ திரைப்படத்தை வீர முருகன் என்பவர் இயக்கவுள்ளார். இந்த படத்தை சிவ பிரபாகரன் மற்றும் சந்திரசேகர் இணைந்து தயாரிக்கின்றனர். எதிர்காலத்தில் இந்த திரைப்படத்தைப் பற்றிய மேலும் பல தகவல்கள் தொடர்ந்து வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.