2008 ஆம் ஆண்டு நடந்த உங்களில் யார் அடுத்த பிரபுதேவா என்ற டான்ஸ் ரியாலிட்டி ஷோவின் மூலம் புகழ்பெற்றவர் நடிகை சாய் பல்லவி. இந்த நிகழ்ச்சியில் அவர் சாம்பியன் பட்டத்தை தவறவிட்டாலும் நிகழ்ச்சியின் முடிவில் சின்னத்திரை ரசிகர்கள் அனைவருக்கும் பிரபலமான ஒரு முகமாக மாறிவிட்டார். ஆனாலும் அல்போன்ஸ் புத்திரன் இயக்கத்தில் வெளியான மலையாளப் படமான பிரேமம் படத்தில் மலர் டீச்சராக நடித்த சாய் பல்லவி இந்திய அளவில் பிரபலமான நடிகையாக மாறினார்.
சினிமா ரசிகர்கள் அனைவருக்கும் சாய் பல்லவி முதலில் நடித்தது பிரேமம் படம் தான் அவரை முதலில் இயக்கியது அல்போன்ஸ் புத்திரன் தான் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். ஆனால் அதேசமயம் சாய் பல்லவி திரைத்துறையில் நடிகையாக களமிறங்கும் முன்பே காட்சிப்பிழை என்ற குறும்படத்தில் நடித்திருந்தார். இந்த குறும்படத்தை இயக்கியவர் விக்னேஷ் சங்கரன். இந்நிலையில் சாய் பல்லவி இன்று தனது 31 வது பிறந்தநாளை கொண்டாடி வரும் நிலையில், அவரை முதலில் இயக்கிய இயக்குனர் விக்னேஷ் சங்கரனை சந்தித்து சாய் பல்லவியுடன் பணியாற்றிய அனுபவம் குறித்து பேசினோம்.
2012 ஆம் ஆண்டில், விக்னேஷ் சங்கரன் பிஎஸ்ஜி தொழில்நுட்பக் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தபோது அங்கு சாய் பல்லவி பேஷன் டெக்னாலஜியில் பட்டப்படிப்பைத் தொடர்ந்தார் (பின்னர் அவர் ஜார்ஜியாவின் டிபிலிசியில் மருத்துவம் படித்தார்). நாளைய இயக்குனர் என்ற ரியாலிட்டி ஷோ மூலம் மூலம் தமிழ்நாட்டின் ஒவ்வொரு நபரும் குறும்படங்களை இயக்கும் முயற்சிகளில் இறங்கிய நேரத்தில் அவர்களுள் ஒருவராக விக்னேஷ் சங்கரனும் இருந்துள்ளார். மேலும் கல்லூரிகளுக்கிடையேயான குறும்படப் போட்டிகளில் விக்னேஷ் சில வெற்றிகளை கண்டுள்ளார்.
சாய் பல்லவியை சந்தித்த முதல் அனுபவம் குறித்து பேசிய அவர், வரவிருக்கும் கலாச்சார கலைநிகழ்ச்சிக்காக இயக்கும் முயற்சியில் இருந்தேன். டிக் டாக் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூகவலைதளங்களின் பங்களிப்பு அதிகமாக இருக்கும் காலக்கடத்தில் என் படத்திற்காக நாயகியை தேடுவது சற்று சிரமமாக இருந்தது. அப்போதுதான் என் நண்பர் ஒருவர் சாய் பல்லவி பற்றி என்னிடம் கூறினார். நடன நிகழ்ச்சியில் பங்கேற்று பலரிடம் பிரபமாக இருந்த அவர் கல்லூரியிலும் நன்கு மாணவர்கள் ஆசிரியர்கள் என அனைவராலும் அறியப்பட்ட முகமாக இருந்தார். அப்போது அவரை சந்தித்து என் படத்தில் நடிக்க முடியுமா என்று கேட்டேன். கதை மற்றும் தாயாரிப்பது குறித்து கேட்ட அவர் பின்னர் ஒப்புக்கொண்டார் என்று விக்னேஷ் தெரிவித்துள்ளார்.
காட்சிப்பிழை குறும்படம் இரண்டு கேரக்டர்களுக்கு இடையில் உள்ள தொடர்பைச் சுற்றி வரும் கதை. அவர்கள் காதல் ஜோடி என்று நாம் கருதும் போது, ஒரு பரபரப்பான திருப்பத்துடன் படம் முடியும். இப்போது இந்த படத்தை “திரும்பப் பார்க்கும்போது, ஒரு அறிமுக எடிட்டர் மற்றும் கேமரா மேன் ஆகியோருடன் நாங்கள் பணியாற்றினோம். நாங்கள் அனைவரும் புதியவர்களை வேலை பார்த்ததால் நாங்கள் நினைத்தபடி படம் சரியாக வெளிவரவில்லை என்று தெரிவித்துள்ளார்.
சாய் பல்லவியைப் பற்றி பேசுகையில், “நான் ஒரு காட்சியைப் பற்றிய விஷயங்களைச் சொல்வேன், அதற்காக அவர், பலமாடலேஷன்களில் நடித்து காட்டுவார். அவர் நடிப்பதற்கு வந்தாலும், நடனமாடுவதில் மட்டுமே ஆர்வமாக இருந்தார். அதேபோல் தனக்கு நடிப்பில் ஆர்வம் இல்லை என்றும் வெளிப்படையாக கூறினார். ஆனாலும் அவரை வைத்து படத்தை முடித்தோம். படத்தில் லைவ் ஆடியோ சரியாக வரவில்லை. இதனால் சாய் பல்லவியை டப்பிங் பேச அழைத்தோம். ஆனால் சாய் பல்லவிக்கு அப்போது தேர்வு இருந்ததால் அவர் டப்பிங்கிற்கு வரமாட்டார் என்று அவரது அப்பா சொன்னார்.
ஆனால் அவருமைய அம்மா சில மணி நேரத்தில் முடிந்தால், நீங்கள் டப்பிங் பணிகளை எங்களின் வீட்டில் செய்யலாம் என்று சொன்னார். அதனால், நானும் எனது மூன்று நண்பர்களும் சாய்பல்லவி வீட்டில் டப்பிங் செய்தோம். சாய் பல்லவியின் வெற்றிக்கு முக்கிய காரணமானவர்களில் அவருடைய அம்மாவும் ஒருவர் என்று தான் சொல்ல வேண்டும், ஏனென்றால் அவர் பல்லவியின் நலன்களுக்கு ஆதரவாக இருந்தார் என்று கூறியுள்ளார்.
விக்னேஷ் சங்கரன் தற்போது பிரபல மின்சார வாகன நிறுவனத்தின் மண்டல மேலாளராக உள்ளார். சாய் பல்லவியை முதன்முதலில் சரியாக இயக்கியவர் அவர் என்பதை எப்படி உணர்கிறீர்கள் என்று கேட்டபோது, “நான் அவருடன் பணியாற்றியிருக்கிறேன் என்று தெரியாதவர்கள் அவரைப் பற்றி நன்றாகப் பேசுவதைக் கேட்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவர் படம் அல்லது முழு அத்தியாயமும் நினைவில் இருக்கிறதா என்று எனக்குத் தெரியவில்லை என கூறியுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.